2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. 13வது உலகக் கோப்பைத் தொடரான இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுவரை நடந்த உலகக் கோப்பைகளின் சிறந்த தருணங்களை சற்று அசைபோடுவோம்.
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற 2007 ஐசிசி உலகக் கோப்பை சற்று பெரிய தொடராக அமைந்தது. 4 பிரிவுகள், 16 அணிகள் என நடந்த அந்த தொடரில் பல அதிர்ச்சிகளும் காத்திருந்தன. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றோடு வெளியேறின. அயர்லாந்து, வங்கதேசம் போன்ற கத்துக்குட்டிகள் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தன. பல அதிர்ச்சிகள் கொடுத்த அந்தத் தொடரின் இறுதிப் போட்டியும் ஒரு பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தது. அது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் ஆடிய மிரட்டல் இன்னிங்ஸ்!
வழக்கம்போல் உலகக் கோப்பை அரங்கில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இலங்கை அணியும் இந்தத் தொடரில் சிறப்பாகவே செயல்பட்டது. சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க அணிகளிடம் மட்டும் தோல்வியடைந்திருந்தது. அரையிறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது மஹேலா ஜெயவர்தனே தலைமையிலான இலங்கை அணி.
இறுதிப் போட்டி ஏப்ரல் 28ம் தேதி பார்படாஸின் கென்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் பேட்டிங் தேர்வு செய்தார். போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்து ஆட்டத்தை பாதித்தது. ஆட்டம் வெகுவாக தாமதம் ஆனதால், 12 ஓவர்கள் குறைக்கப்பட்டு 38 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. 2003 உலகக் கோப்பை போல் ஃபைனலில் இந்தியாவுக்கு எதிராக செய்தது போல் ஆஸ்திரேலிய அணி முரட்டு சம்பவம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதைப் போலவே சம்பவம் அரங்கேறியது. ஆனால் அதைச் செய்தது கேப்டன் பான்டிங் அல்ல. துணைக் கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட்.
களமிறங்கியது முதலே டி20 மோடில் ஆடினார் கில்லி. சமிந்தா வாஸ் வாங்கிய ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து ஒரு ஃபோரும், சிக்ஸரும் அடித்து அதிரடியைத் தொடங்கினார் அவர். ஹெய்டன் மிகவும் நிதானமாக சுமார் 50 ஸ்டிரைக் ரேட்டில் ஆட, இவர் மிரட்டியெடுத்தார். 43 பந்தில் அரைசதம் கடந்தார் கில்கிறிஸ்ட். வேகப்பந்துவீச்சாளர்களை அவர் பதம் பார்க்கிறார் என்று ஸ்பின்னர்களைக் கொண்டுவந்தால், அவர்களையும் அடித்துத் துவைத்தார் கில்கிறிஸ்ட். தில்ஷன் வீசிய 15வது ஓவரில் 2 சிக்ஸர்கள் பறந்தன. 16.2 ஓவர்களில் அந்த அணி சதம் கடக்க, இருவரும் தங்கள் பாணியை அப்படியே தொடர்ந்தார்கள்.
மலிங்காவின் பந்தில் பௌண்டரி அடித்து சதத்தை நிறைவு செய்தார் கில்கிறிஸ்ட். அதுவும் 72 பந்துகளிலேயே அடித்து மிரட்டினார் அவர். ஹெய்டன் அரைசதம் கடக்கும் முன்பே சதத்தை நிறைவு செய்தார் கில்லி. அப்படியொரு ஆட்டம்! சதம் கடந்த பிறகும் அவர் தன் அதிரடியைக் கைவிடவில்லை. மலிங்கா, வாஸ் என அனைவரது பந்துகளும் தொடர்ந்து பௌண்டரி எல்லையை அடைந்துகொண்டே இருந்தன. பார்ட் டைமாக பந்துவீச வந்த முன்னாள் கேப்டன் ஜெயசூர்யாவையும் பதம் பார்த்தார் கில்கிறிஸ்ட். கடைசியாக 31வது ஓவரில் தில்ஹாரா ஃபெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் அவர். 104 பந்துகளில் 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் அவர். அதில் 13 ஃபோர்களும், 8 சிக்ஸர்களும் அடக்கம்.
குறிப்பாக இந்தப் போட்டியில் கில்கிறிஸ்ட் சதமடித்துவிட்டு தன் கிளவுசில் இருந்த ஸ்குவாஷ் பந்தைக் காட்டியது பின்னால் பல விவாதங்களைக் கிளப்பியது. கில்கிறிஸ்ட் தன்னுடைய கிரிப் சரியாக இருக்கவேண்டும் என்பதற்காக தன் பேட்டிங் கிளவுசுக்குள் ஸ்குவாஷ் பந்தை வைத்திருக்கிறார். சிலர் அது தவறு என்று சொன்னாலும், பின்னாளில் அது கில்கிறிஸ்ட்டின் மாஸ்டர் ஸ்ட்ரோக்காக புகழப்பட்டது.
இரண்டாவது விக்கெட்டாக கில்கிறிஸ்ட் ஆட்டமிழந்தபோது ஆஸ்திரேலிய அணி 30.2 ஓவர்களில் 224 ரன்கள் குவித்திருந்தது. இறுதியாக 38 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா. ரன்ரேட் 7.39. இது 2003 ஃபைனலில் இந்தியாவுக்கு எதிராக எடுத்த ரன்ரேட்டை விட அதிகம்.
மாபெரும் இலக்கை சேஸ் செய்த இலங்கை அணி 36 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. இலங்கை இன்னிங்ஸின் நடுவே மறுபடியும் மழை பெய்ததால் அவர்களுக்கு 36 ஓவர்களில் 269 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதனால் டக்வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் ஒட்டுமொத்தமாக நான்காவது முறையாகவும் சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. தன் மிரட்டல் இன்னிங்ஸால் ஆஸ்திரேலியா சாம்பியன் ஆகக் காரணமாக இருந்த கில்கிறிஸ்ட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஒரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவர் ஆடிய மிரட்டல் ஆட்டம் இன்றுவரை மிகச் சிறந்த இன்னிங்ஸ்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.