AB De Villiers - MS Dhoni Twitter
கிரிக்கெட்

“தோனி உலகக்கோப்பை வெல்லவில்லை.. இந்தியா தான் வென்றது” - ரசிகருக்கு ஏபிடி வில்லியர்ஸ் நச் பதில்

தோனியோ இல்லை பென் ஸ்டோக்ஸோ உலகக்கோப்பையை வெல்லவில்லை, உலகக்கோப்பையை வெல்வதற்கு பின்னால் பல பெயர்கள் இருக்கின்றன என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

Rishan Vengai

கிரிக்கெட் உலகில் உலகக்கோப்பையை வெல்வது என்பது ஒவ்வொரு வீரருக்கும் மட்டுமில்லாமல் ஒவ்வொரு அணிக்கும் பெரிய கனவாகவே இருக்கும். கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகள் படைத்து ஜாம்பவானாக வலம் வரும் பல வீரர்களுக்கும் எட்டாத மகுடமாக உலகக்கோப்பை இருந்துள்ளது, இருந்தும் வருகிறது. கிரிக்கெட்டில் பல சாதனைகளை வாரிக்குவித்து கிரிக்கெட்டின் கடவுளாக இருக்கும் சச்சின் டெண்டுல்கருக்கு கூட கடைசி உலகக்கோப்பை தொடரில் தான் உலகக்கோப்பையை கையில் ஏந்தும் பாக்கியமே கிடைத்தது.

2011 Worldcup

அப்படி கிடைக்கவே கடினமான ஒன்றாக பார்க்கப்படும் உலகக்கோப்பையை வெல்வது ஒவ்வொரு அணியின் ரசிகர்களுக்கும் கூட கொண்டாட்டத்தின் மிகுதியான ஒன்று தான். அப்படி தன்னுடைய அணி கோப்பையை வெல்லும் போது உணர்ச்சி பெருக்கின் காரணமாக ஒரு சில வீரர்களை ரசிகர்கள் அதிகமாக கொண்டாடுகின்றனர். தொடர் முழுவதும் ஒரு அணி முன்னேறி வருவதற்கு பல வீரர்களின் சிறப்பான ஆட்டமும் காரணம் என்பதை உணர்ந்தாலும், கோப்பைக்கான இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர்களை கொண்டாடி தீர்ப்பது ரசிகர்களின் வாடிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில் தான் ஒரு அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு தனிப்பட்ட ஒரு வீரர் மட்டும் காரணம் இல்லை, அதற்கு பின்னால் பல பெயர்கள் இருக்கின்றது என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

தோனியோ பென் ஸ்டோக்ஸோ உலகக்கோப்பை வெல்லவில்லை!

தன்னுடைய யுடியூப் சேனலில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய ஏபிடி வில்லியர்ஸ், “கிரிக்கெட் என்பது ஒரு குழுவாக விளையாடும் விளையாட்டு, அதில் ஒரு வீரரால் மட்டும் உலகக் கோப்பையை வெல்லமுடியாது. சமூக வலைதளங்களில் தனிப்பட்ட வீரர்களை உயர்த்தி பிடிக்கும் பல பதிவுகளை நான் பார்க்கிறேன். எம்எஸ் தோனி உலகக் கோப்பையை வெல்லவில்லை, இந்தியா தான் உலகக் கோப்பையை வென்றது, அதை நினைவில் கொள்ளுங்கள். 2019-ல் லார்ட்ஸ் மைதானத்தில் பென் ஸ்டோக்ஸ் ஒருஆள் மட்டும் கோப்பையை வெல்லவில்லை, இங்கிலாந்து தான் அதை செய்தது. அதை மறந்துவிடாதீர்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “ஒரு உலகக் கோப்பையை வெல்வதில் தனிப்பட்ட வீரர்களை தாண்டி நிறைய பெயர்கள் இருக்கின்றன. பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள், சப்போர்ட்டிங் ஸ்டாஃப்ஸ், இயக்குநர்கள், வீரர்கள் மற்றும் சப்ஸ்டியூட் போன்ற பல பேர் இருப்பதாக நான் நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.