rishabh pant out web
கிரிக்கெட்

“அவர் பந்தை அடித்தார் என்று எப்படி உறுதிசெய்தீர்கள்..?” - PANT அவுட்டை சர்ச்சை என்று கூறிய ஏபிடி!

இந்தியாவை முதன்முறையாக அவர்களின் சொந்த மண்ணில் 3-0 என ஒயிட்வாஷ் செய்து நியூசிலாந்து அணி வரலாறு படைத்தது.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த நியூசிலாந்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 3 போட்டிகளிலும் இந்திய அணியை விட பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என மூன்று வகையிலும் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து 3-0 என தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது.

24 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியை அவர்களின் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்யும் முதல் அணி மற்றும் 3 போட்டிகள் அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியை இந்திய மண்ணிலேயே வைத்து ஒயிட்வாஷ் செய்த முதல் அணி என்ற வரலாற்று சாதனைகளையை தங்களுடைய பெயரில் எழுதியுள்ளது.

ind vs nz

மும்பையில் இன்றைய கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் அவுட்டானது போட்டியை தலைகீழாக திருப்பியது. ஒருவேளை ரிஷப் பண்ட் நிலைத்திருந்தால் இந்தியா 2-1 என தொடரை முடித்திருக்கும்.

இந்நிலையில், ரிஷப் பண்ட்டின் அவுட் உறுதிப்படாத நிலையில், எப்படி நீங்கள் அவுட் கொடுத்தீர்கள் என சர்ச்சை என்று குறிப்பிட்டு ஏபிடி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

திருப்புமுனையாக மாறிய பண்ட் விக்கெட்..

3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்தியாவிற்கு 147 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. எப்படியும் இந்திய வீரர்கள் எட்டிவிடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்போடு போட்டி தொடங்கிய நிலையில், ஜெய்ஸ்வால் 5, ரோகித் சர்மா 11, கில் 1, விராட் கோலி 1 மற்றும் சர்பராஸ் கான் 1 ரன்களென சொற்ப ரன்களில் அடுத்தடுத்து நடையை கட்ட 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி.

ஒருபுறம் நியூசிலாந்து விக்கெட் வேட்டை நடத்த மறுமுனையில் நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 9 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தார். 106/6 விக்கெட் என்ற நிலையில், இந்தியா வெற்றிபெற 41 ரன்களும் நியூசிலாந்து வெற்றிபெற 4 விக்கெட்டுகள் என்ற இடத்தில் போட்டி 50-50 என்ற வகையில் இருந்தது.

அப்போது அஜஸ் பட்டேல் வீசிய பந்தை ஆடுகளத்தில் இறங்கிவந்து டிஃபண்ட் செய்த பண்ட், பந்தை காலில் வாங்கினார். களநடுவர் நாட் அவுட் வழங்கிய நிலையில், நியூசிலாந்து அணி ரிவியூ கேட்டு முடிவு மூன்றாவது அம்பயருக்கு சென்றது. ரிவியூவில் பந்து பேட்டை கிராஸ் செய்யும்போது ஸ்னிக் தெரிந்தது. ஆனால் பந்து கடந்துசெல்லும் அதே நேரத்தில் ரிஷப் பண்ட் தன்னுடைய பேட்டை கால்-பேடிலும் அடிக்கும் காட்சியும் இடம்பெற்றது. பந்து, பேட், கால்-பேடு மூன்றுமே ஒரே நேரத்தில் உரசுவதுபோல் இருந்ததால் முடிவு தாமதமானது. சிறிது நேர காத்திருப்பிற்கு பிறகு பந்து பேட்டில் பட்டதாக தெரிவித்து ரிஷப் பண்ட்டுக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

அதற்குபிறகு இந்திய விக்கெட்டுகளை பறிகொடுத்து தொடரை 3-0 என இழந்தது.

அவர் பந்தை அடித்தார் என்று எப்படி உறுதியாக சென்றீர்கள்..?

இந்நிலையில் ஒரு முடிவெடுக்க குழப்பமான நிலை இருக்கும்போது களநடுவரின் முடிவுக்கே செல்லவேண்டும் என்றும், பந்து பட்டு சென்றதற்கான எந்த டெக்னாலஜி ஆதாரமும் இல்லாத நிலையில் எப்படி நீங்கள் அவுட் என்ற முடிவுக்கு சென்றீர்கள் என ஏபிடி வில்லியர்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ஏபி டி வில்லியர்ஸ், “சர்ச்சை! மீண்டும் ஒரு மழுங்கிய பகுதி. அதில் ரிஷப் பண்ட் பந்தை அடித்தாரா இல்லையா? சிக்கல் என்னவென்றால், பந்து மட்டையை சரியாக கடக்கும் அதேநேரத்தில், பந்து கால்-பேடில் பட்டாலும் ஸ்னிக்கோ சத்தத்தை எடுக்கும். ஆனால் பண்ட் பந்தை அடித்ததில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்பது முக்கியமில்லையா? நான் எப்போதும் இதைப் பற்றி கவலைப்படுகிறேன், இங்கே இது ஒரு பெரிய டெஸ்ட் போட்டியில் ஒரு பெரிய தருணத்தில் நடக்கிறது. ஹாட்ஸ்பாட் எங்கே?!” என்று ஏபிடி எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பினார்.

மேலும், "உண்மை என்னவென்றால் அந்த அவுட்டில் சந்தேகம் இருந்திருக்க வேண்டும். நிச்சயமாக நீங்கள் 3வது அம்பயர் பந்து பட்டுச்சென்ற விலகலை தெளிவாகக் காணாத வரை, ஆன்-ஃபீல்ட் அழைப்பில் இருந்திருக்கிறவேண்டும்.. எனக்கு அவ்வளவு உறுதியாக தெரியவில்லை. என்னை தவறாக எண்ண வேண்டாம், எனக்கு இங்கு எந்த சார்பும் இல்லை, நிலையான அழைப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தின் நல்ல பயன்பாட்டிற்கு அழுத்தம் கொடுக்கிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.