12 வருசம் ஆச்சு இந்தியா 2011 ஒருநாள் உலகக்கோப்பையை கையில் ஏந்தி. ஆனால் இன்னமும் தோனி அடிச்ச அந்த கடைசி வின்னிங் சிக்ஸ் ஒவ்வொரு இந்திய ரசிகனோட நினைவிலிருந்தும் மறையாம அப்படியே இருக்கு. எப்படி தோனி அடிச்ச அந்த வின்னிங் சிக்ஸ் நம்முடைய நினைவுகளில் மறையாம பசுமையா இருக்கோ, அதேபோலதான் “Dhoni finishes off in style, A magnificent strike into the crowd, India lifts the World Cup after 28 years" என டெலிவிஷனில் ஒலித்த ரவி சாஸ்திரியின் குரலும், இன்றளவும் மறக்க முடியாத ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒரு தருணம் மட்டுமல்ல, “ 2007 டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி, 2007 யுவராஜ் சிங் அடித்த 6 பந்துகளுக்கு 6 சிக்சர், சச்சின் அடித்த முதல் இரட்டை சதம், 2010 ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா வெற்றிபெற்ற 1 விக்கெட் வித்தியாசத்திலான மொஹாலி டெஸ்ட் வெற்றி” என இந்திய அணியின் ஒவ்வொரு பெரிய மேஜிக் தருணத்தின்போதும் ரவி சாஸ்திரியின் குரல் ஒரு லக்கி சார்மாக இருந்துள்ளது. அவருடைய அந்த கமெண்டரியை கேட்டாலே போதும் அந்த போட்டிகள் முழுவதுமாக அப்படியே நம் அகக்கண்ணில் வந்துபோகும்.
ஒரு லெஜண்டரி ஆல்ரவுண்டர் கிரிக்கெட்டராகவோ, ஒரு இந்திய அணியின் வெற்றி பயிற்சியாளரகவோ மட்டுமல்லாமல், ஒரு சிறந்த கிரிக்கெட் வரணனையாளராக இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ரவிசாஸ்திரி மீது நல்ல மரியாதை உள்ளது. இந்நிலையில்தான் முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டனும் ஓப்பனிங் பேட்ஸ்மேனுமான ஆரோன் பிஞ்ச், “ரவி சாஸ்திரியை வர்ணனையாளர்களின் ராஜா” எனக் கூறியுள்ளார்.
ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீரராக ஜொலித்த ரவி சாஸ்திரி, ஓய்விற்கு பிறகு ஒரு சிறந்த வர்ணனையாளராகவும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் ஜொலித்தார். நடுவில் 2021 வரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட ரவி சாஸ்திரி, 5 வருடங்களாக வர்ணனையாளராக செயல்படாமல் இருந்துவந்தார். இந்நிலையில்தான் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் வர்ணனையாளராக செயல்பட்ட ரவி சாஸ்திரி, தற்போது 2023-2024ஆம் ஆண்டுக்கான பிக்பாஷ் டி20 லீக் தொடரிலும் வர்ணனையாளராக பங்கேற்றுள்ளார்.
நேற்றைய பிக்பாஷ் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச் உடன் வர்ணனையாளராக ஜோடி சேர்ந்த ரவி சாஸ்திரியை, பிஞ்ச் புகழ்ந்து கூறியுள்ளார். அப்போது ஆரோன் பேசுகையில், “ரவி சாஸ்திரி கிரிக்கெட் வர்ணனை செய்வதில் கிங். அவர் நீண்ட காலமாக கிரிக்கெட்டின் குரலாக இருந்து வருகிறார். அவரே இங்கே இருப்பது நன்றாக இருக்கிறது” என்று புகழ்ந்துள்ளார்.