indian cricket commentators web
கிரிக்கெட்

அடேங்கப்பா.. வருசத்துக்கு இத்தனை கோடியா? Cricket கமெண்ட்ரி செய்பவரின் ஒருநாள் சம்பளம் என்ன தெரியுமா?

கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, கிரிக்கெட் வர்ணனையாளர்கள் ஒருநாளைக்கு பல லட்சங்கள் வரை சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

கிரிக்கெட் என்பது ஒரு எமோசனாக இருந்துவருகிறது, அந்த எமோசனை ரசிகர்களுக்கு சரியான விதத்தில் கடத்தும் ஒரு கருவியாக வர்ணனையாளர்கள் இருந்து வருகின்றனர். கிரிக்கெட்டில் ஒரு நாட்டின் வரலாற்று வெற்றியையும் அல்லது ஒரு வீரரின் தனிப்பட்ட சாதனை பதிவையும் அந்தப் போட்டியின்போது கமெண்டரி செய்த வர்ணனையாளர்களின் குரல்களை வைத்தே நம்மால் அப்போட்டியை நினைவுகூர முடியும்.

அதற்கு எடுத்துக்காட்டாக 2011 ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா ஏந்திய தருணத்தின்போது ரவி சாஸ்திரியின், கடைசி சிக்சருக்கான வர்ணனையின் குரல்தான், இன்றளவும் உலகக்கோப்பை வென்ற மகிழ்ச்சியை நம்முள் கடத்திவருகிறது. அதுமட்டுமில்லாமல் சச்சின் முதல்முறையாக இரட்டை சதமடித்தது, யுவராஜ் சிங்கின் 6 பந்துக்கு 6 சிக்சர்கள், 2007 மற்றும் 2024 டி20 உலகக்கோப்பை வென்ற தருணம் என அனைத்திலும் ரவிசாஸ்திரி என்ற வர்ணனையாளரின் குரல்தான் நம் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது.

இதைத்தாண்டி உலக கிரிக்கெட்டிலும் 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் தோனியின் ரன் அவுட், இறுதிப்போட்டியில் சூப்பர் ஓவரில் இங்கிலாந்து வென்றது, சமீபத்தில் ஆஸ்திரேலியா மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் வென்ற தருணத்தின்போது கமெண்டரி பாக்ஸில் பிரையன் லாரா கண்ணீர் சிந்தியதை கூட நாம் எடுத்துகாட்டாக கூறலாம். ஒவ்வொரு உலகநாடுகளின் சிறந்த கிரிக்கெட் தருணம் அனைத்தையும் போட்டியின் வர்ணனையாளர்களை வைத்தே நம்மால் அப்போட்டியை நினைவுகூர முடிகிறது.

அந்தளவு போட்டியில் நடுநிலைத்தன்மையுடன் வர்ணனையாளர்கள் எப்போதும் கிரிக்கெட்டின் எமோசனை கடத்துபவர்களாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா நேர்காணல் ஒன்றில் வர்ணனையாளர்களின் சம்பளம் குறித்து பேசியுள்ளார்.

ஒரு நாளுக்கு 10 லட்சம் வரை சம்பளம்..

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, சமீபத்தில் ராஜ் ஷமானியின் ஃபிகரிங் அவுட் போட்காஸ்ட்டில் பல்வேறு கிரிக்கெட் சம்பவங்கள் குறித்தும், ஐபிஎல்லில் பும்ரா மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவருக்கும் இடையேயான சம்பள வித்தியாசம் குறித்தும் தன்னுடைய கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

ஆகாஷ் சோப்ரா

அப்போது நெறியாளர் அவரிடம் வர்ணனையாளர்களுக்கான சம்பளம் குறித்த கேள்வியை ஆகாஷ் சோப்ராவிடம் எழுப்பினார். அப்போது பேசிய அவர், வர்ணனையாளர்களுக்கு பொதுவாக ஒரு போட்டியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. வர்ணனையாளர்களுடன் ஒலிபரப்பு முகவர் உடன்படும் வருடாந்த ஒப்பந்தங்கள் பெரும்பாலும் விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டார்.

கிரிக்கெட் வர்ணனையாளர்

அவரின் கூற்றுப்படி சொந்த அனுபவத்தின் அடிப்படையில், ஜூனியர் வர்ணனையாளர்கள் ஒரு நாளைக்கு ₹35,000 முதல் ₹40,000 வரை சம்பாதிக்கின்றனர் என்றும், ஒரு மூத்த தொழில்முறை வர்ணனையாளர் ஒருநாளுக்கு 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல மூத்த வர்ணனையாளர்கள் பெரிய வரம்பிற்கு இடையில் எங்கு வேண்டுமானாலும் ஆண்டுக்கு ரூ.6 முதல் ரூ.10 கோடி வரை சம்பாதிக்கலாம் என்றும் அவர் வெளிப்படுத்தினார்.