India cricket team Cricinfo
கிரிக்கெட்

‘மற்ற அணிகளால் சமன்கூட செய்யமுடியல..’ 12 வருடங்களாக ஆணிவேராக இருக்கும் இருவர்! முன். வீரர் புகழாரம்!

Rishan Vengai

கடந்த 12 ஆண்டுகளில் பல கேப்டன், பல கோச் மாறிட்டாங்க... ஆனாலும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் உலகத்தரம் வாய்ந்த ஒரு அணியால் கூட வீழ்த்த முடியவில்லை. ஏன் 2012-லிருந்து எந்த அணியாலும் ஒரு தொடரை கூட சமன் செய்யமுடியவில்லை. மற்ற அணிகள் எல்லாம் தொடர்ச்சியாக 10 ஹோம் தொடர்களை மட்டுமே வென்ற நிலையில், இந்திய அணி சொந்த மண்ணில் 18 தொடர்களை தொடர்ச்சியாக வென்று மகுடம் சூடிவருகிறது.

இந்திய அணி

இந்நிலையில் சொந்த மண்ணில் 12 வருடங்களாக இந்தியா செலுத்தும் ஆதிக்கத்துக்கு யார் காரணம் என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

12 வருடமாக மற்ற அணிகளால் அசைத்து கூட பார்க்க முடியவில்லை..

வங்கதேசத்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய இந்திய அணி, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 தொடர்களில் வென்று தோல்வியே சந்திக்காத அணியாக வலம்வருகிறது. கடைசியாக 2012-ல் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது. அதற்கு பிறகு 12 ஆண்டுகளாக ஒரு அணியால் கூட இந்திய அணியை சொந்த மண்ணில் வீழ்த்த முடியவில்லை, ஏன் சமன்கூட செய்யமுடியவில்லை.

ind vs ban

இந்நிலையில் இந்தியாவின் இத்தகைய ஆதிக்கத்துக்கு காரணமாக இரண்டு பேரின் பெயரை ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அந்த பட்டியலில் ரோகித், விராட் கோலி, பும்ரா, ஷமி போன்ற வீரர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை.

இந்தியாவின் தொடர் வெற்றி குறித்து பேசியிருக்கும் ஆகாஷ் சோப்ரா, “இந்தியா சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. இது சாதாரண விசயமில்லை, இந்தியா இத்தனை தொடர்களை வென்றது என்பதை மறந்துவிடுங்கள், வேறு அணிகளால் இந்தியாவிற்கு எதிராக தொடரை சமன்கூட செய்யமுடியவில்லை. இந்த ஆதிக்கத்திற்காக இந்தியா நெடுங்காலத்திற்கு அறியப்படும்.

Ashwin - Jadeja

ஆனால் இத்தனை வருடங்களாக இந்தியாவின் ஆதிக்கத்திற்கு யார் காரணம்? கடந்த 12 வருடங்களில் பல கேப்டன்கள், பல பயிற்சியாளர்கள் மாறிவிட்டனர். ஆனாலும் இந்தியாவின் வெற்றிநடை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

அதற்கு முக்கிய காரணமாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் எழுச்சியே அங்கம் வகிக்கிறது.

இந்த ஜோடி இந்தியாவை சொந்த மண்ணில் அசைக்க முடியாத ஒரு அணியாக மாற்றியுள்ளது.

ashwin

இந்தியாவால் சொந்த மண்ணில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடிகிறது என்றால், அதற்கு அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் காரணமாக உள்ளனர். அஸ்வின் 525 விக்கெட்டுகளுடன் 11 தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ளார். அவர் முத்தையா முரளிதரனுக்கு அருகில் நிற்கிறார், யாராலும் தடுக்க முடியாத ஒருவீரராக இருந்துள்ளார். ரவீந்திர ஜடேஜா 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை குவித்துள்ளார். இந்த இருவரும் போட்டியாளர்களை இந்தியாவிற்குள் குடியேற அனுமதிக்கவே இல்லை” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.