2024 ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் மாதம் 22ம் தேதி முதல் தொடங்கி மே 19ம் தேதிவரை நடத்தப்படவிருக்கிறது. இந்த தொடருக்கான வீரர்களின் மினி ஐபிஎல் ஏலம் கடந்த மாதம் 19ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஆஸ்திரேலியா வீரர்கள் பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் 20 கோடிக்கு மேலான ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அதேபோல பல புதிய வீரர்கள் அவர்களின் தற்போதையை ஃபார்மை கருத்தில் கொண்டு அதிக விலைக்கு வாங்கப்பட்டனர்.
ஏலத்தில் புதிய வீரர்களை எடுப்பதற்காக ஏற்கெனவே அதிகவிலைக்கு வாங்கப்பட்டு ஃபார்ம் அவுட்டில் இருக்கும் வீரர்களை, பல ஐபிஎல் அணிகள் வெளியேற்றி புதிய வீரர்களை விலைக்கு வாங்கினர். அந்த வகையில் ஃபார்ம் அவுட்டில் இருந்தும் கூட, ஏன் சாம் கர்ரனை வெளியேற்றாமல் 18.50 கோடிக்கு தக்கவைத்தீர்கள் என பஞ்சாப் கிங்ஸ் அணியை கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
கடந்த 2023 ஐபிஎல் ஏலத்தில் ரூ.18.50 கோடிக்கு வாங்கப்பட்ட சாம் கர்ரன், தற்போது நடந்துமுடிந்த 2024 மினி ஏலத்தின் போது பஞ்சாப் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார். ஏலத்திற்கு முன் பஞ்சாப் அணி வெளியிட்ட வீரர்களில், ரூ.9 கோடிக்கு வாங்கப்பட்ட சாருக் கான் மட்டுமே அதிகவிலை வீரராக வெளியேற்றப்பட்டார். ஆனால் அவர்கள் ரூ.18.50 கோடி விலைக்கு வாங்கியிருந்த சாம் கர்ரனை தக்கவைக்கும் முடிவுக்கு சென்றனர்.
இந்நிலையில்தான் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ள வீடியோவில் சாம் கர்ரனை தக்கவைத்த பஞ்சாப் கிங்ஸ் அணியின் முடிவு எனக்கு அதிர்ச்சி கொடுத்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசியிருக்கும் அவர், “சாம் கர்ரனை தக்கவைக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முடிவு எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் ஏன் சாம் கர்ரனைத் தக்கவைத்தீர்கள்? 18.50 கோடியை ஒரே இடத்தில் நிறுத்திவிட்டீர்கள். நான் அவரை சரியாக விலையாடாத வீரர் என்று ஒதுக்கிவிட சொல்லவில்லை, ஆனால் இவ்வளவு விலைக்கு அவர் தகுதியான வீரரா என்றால் இல்லை என்று தான் கூறுவேன்” என சோப்ரா தனது யூடியூப் சேனலில் கூறினார்.
அதற்கான காரணத்தை பகிர்ந்த அவர், "கடந்த 2023 ஐபிஎல் தொடர், தென்னாப்பிரிக்கா டி20 லீக் மற்றும் கடந்தாண்டு சொந்த அணிக்கான அவருடைய ஆட்டத்தை நீங்கள் எடுத்து பாருங்கள், அவர் கடந்த 12-17 மாதங்களாக சிறப்பாக எதையும் செய்யவில்லை. கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் மட்டும்தான் நன்றாக விளையாடினார். ஏனெனில் ஆஸ்திரேலியாவில் கிரவுண்ட் எல்லைகள் மிகப் பெரியதாக இருந்தன” என்று சோப்ரா மேலும் கூறியுள்ளார்.