RCB IPL AUCTION X
கிரிக்கெட்

RCB-ன் சம்பவம்! 5சிக்சர் கொடுத்த பவுலருக்கு 5 கோடி-இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!

அணியில் பவுலிங் வீக்கா இருக்குனு ஹசல்வுட், ஹசரங்கா, ஹர்சல் பட்டேல் எல்லாரையும் வெளில அனுப்பிட்டு, இவங்க ஏலத்துல எடுத்த வீரர்கள் பெயரையெல்லாம் பாருங்களன் ”யாஸ் டயால், டாம் கரன், அல்சாரி ஜோசப்”. இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்!

Rishan Vengai

2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு தொடங்கிய வீரர்கள் ஏலத்தில் 333 வீரர்கள் பங்கேற்றனர். தொடக்கம் முதலே அனல் பறந்த ஏலத்தில், எப்போதும் இல்லாத வகையில் 20 கோடியை தாண்டி விலைக்கு சென்று இரண்டு வீரர்கள் வரலாறு படைத்துள்ளனர். எப்படி இருப்பினும் பல இளம் இந்திய வீரர்கள் நல்ல விலைக்கு சென்றதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் அவர்களுடைய தேவைக்கான வீரர்களை அழகாக பக்கெட்டில் போட்டனர். ஆனால் ஒரு அணி மட்டும் நினைத்த வீரர்களுக்கு எல்லாம் போராடி, ஏலத்தில் வீரர்கள் கிடைக்காததால் பின்னர் கிடைத்த வீரர்களை எல்லாம் அள்ளிப்போட்டு, சந்திரமுகி படத்தில் வரும் “அவர் கண்ணுல எதையோ சாதிச்ச சந்தோசத்த பார்த்தேன்” என்பது போல் ஏதோ சாதிக்காததை சாதித்தது போல் பெருமைப்பட்டுக் கொண்டது. அது வேறெந்த அணியும் இல்லை ஆர்சிபி அணியே தான்.

அணியில் பவுலிங் டிப்பார்ட்மெண்ட் மோசமாக இருக்கிறது என அந்த அணி ஏலத்திற்கு முன் ”ஹசல்வுட், ஹசரங்கா, ஹர்சல் பட்டேல்” முதலிய பவுலர்களை வெளியேற்றியது. இந்த மூன்று பவுலர்களில் ஹசரங்கா டி20 பந்துவீச்சு தரவரிசையில் 4வது இடத்திலும், ஹசல்வுட் 10வது இடத்திலும் இருக்கின்றனர். ஆனால் இவர்களையெல்லாம் விட்டுவிட்டு அந்த அணி ஏலத்தில் எடுத்திருக்கும் பவுலர்களை பார்த்தால் வேடிக்கையாகவே இருக்கிறது.

ஒரே ஓவரில் 5 சிக்சர்களை வாரிவழங்கிய யாஸ் தயால் 5 கோடி!

2023 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் முதலிரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியவர் யாஸ் தயால். கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிப்பெற வேண்டிய இடத்தில் தான் இருந்தது. KKR மற்றும் GT அணிகள் மோதிய 13வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 204 ரன்களை அடித்தது. 205 ரன்கள் என்ற நல்ல இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 155 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 83 ரன்கள் அடித்த வெங்கடேஷ் ஐயர் அவுட்டாகி சென்றதால் குஜராத் அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதிசெய்யப்பட்டது.

கடைசி 6 பந்துக்கு 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற தோல்வியே அடைய முடியாத இடத்தில் கடைசிஓவரை வீச வந்தார் யாஷ் தயால். முதல் பந்துக்கு 1 ரன்னை கொல்கத்தா எடுக்க வெற்றிபெற 5 பந்துகளுக்கு 28 ரன்கள் தான் என்ற கடினமான நிலைக்கு மாறியது போட்டி. ஆனால் கடைசி 5 பந்துகளை எதிர்கொண்ட ரிங்கு சிங் 5 பந்துகளிலும் 5 சிக்சர்களை பறக்கவிட்டு நம்ப முடியாத இடத்தில் இருந்து கொல்கத்தா அணிக்கு வெற்றியை பெற்றுத்தருவார். அந்த மோசமான பவுலிங்கிற்கு பிறகு யாஷ் தயாலை ஓரங்கட்டிய குஜராத் அணி, அவருக்கு அடுத்து வாய்ப்பே தரவில்லை. அப்படிப்பட்ட யாஷ் தயாலை தான் RCB அணி 5 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.

எகானமியில் 10 ரன்ரேட் வைத்திருக்கும் டாம் கரன், அல்சாரி ஜோசப்!

யாஷ் தயாலை தொடர்ந்து டாம் கரனை 1.5 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது ஆர்சிபி அணி. டாம் கரன் இதுவரை 13 ஐபிஎல் போட்டிகள் மட்டுமே விளையாடியிருக்கிறார். அந்த 13 போட்டிகளில் 430 ரன்களை வாரிகொடுத்திருக்கும் அவர், பவுலிங் எகானமியில் 11 ரன்களுடன் இருக்கிறார்.

Tom Curran

அதேபோல அல்சாரி ஜோசப்பின் எகானமியும் 9 ரன்களுக்கு மேல் தான் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் நல்ல ஃபார்மை வெளிப்படுத்திவரும் அல்சாரி ஜோசப், மிக மோசமான பிக்கிங் என்றும் சொல்லிவிடமுடியாது. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திவரும் அவர், சமீபத்தில் டி20 தரவரிசையில் 13வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Alzari

ஆர்சிபி அணி ஏலத்தில் வாங்கிய நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன் மட்டுமே நல்ல ஏலமாக தெரிகிறார். ஐபிஎல்லில் சுமாரான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தாலும், சர்வதேச டி20 போட்டிகளில் ஃபெர்குஷன் சிறப்பாகவே செயல்ப்பட்டுள்ளார். ஆனால் அவர் காயமடையக்கூடிய பவுலர் என்பதும் கவனிக்கவேண்டியது. மற்றப்படி டாம் கரன், யாஷ் தயால் போன்ற வீரர்கள் எல்லாம் தேவையே இல்லாத பருத்திமூட்டை வகையறாக்கள் தான். அவர்கள் இருவரும் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

லாக்கி ஃபெர்குசன்

ஐபிஎல் அணிகளில் ஒவ்வொரு அணிகளும் ஒவ்வொருவிதமான கிரிக்கெட்டை ஆடக்கூடிய அணிகள். அந்தவகையில் ஆர்சிபி அணியானது, வலுவான பேட்டிங் வரிசையை மட்டுமே வைத்துக்கொண்டு விளையாடும் ஒரு அணியாகும். எப்போதும் நல்ல பேட்ஸ்மேன்களை மட்டுமே வைத்துக்கொண்டு விளையாடும் ஆர்சிபி, பந்துவீச்சாளர்களை வலுப்படுத்துவதில் கோட்டைவிட்டுவிடும். இந்தமுறையும் அந்த ஓட்டையை ஆர்சிபி அணியால் அடைக்கமுடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். பாட் கம்மின்ஸ்காக 20 கோடிவரை சென்றும் ஆர்சிபிக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரிலும் வலுவான பேட்ஸ்மேன்களை மட்டுமே வைத்துக்கொண்டு மோதவிருக்கிறது. இந்தமுறையாவது கோப்பையை நோக்கி நகருமா RCB என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்!

உத்தேச ஆர்சிபி அணி:

1. டூபிளெசிஸ்

2. விராட் கோலி

3. ராஜத் பட்டிதார்

4. க்ளென் மேக்ஸ்வெல்

5. காம்ரான் க்ரீன்

6. தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

7. லாம்ரார் / பிரபுதேசாய்

8. டாம் கரன் / யாஸ் தயால் / கரன் சர்மா

9. அல்சாரி ஜோசப்

10. முகமது சிராஜ்

11. லாக்கி ஃபெர்குஷன் / ரீஸ் டூப்ளே