The Hundred Cricket File image
கிரிக்கெட்

தொடங்கியது 'தி 100' தொடர்! வெற்றியோடு தொடங்கிய நடப்பு சாம்பியன் டிரென்ட் ராக்கெட்ஸ்!

இங்கிலாந்தின் ஃபிரான்சைஸ் லீகான 'தி 100' தொடர் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கியது.

Viyan

டி20 கிரிக்கெட் உலகெங்கும் பிரசித்தி பெற்றிருந்ததால், அதை சற்று மாற்றி 100 பந்துகள் கொண்ட போட்டியாக மாற்றியது இங்கிலாந்து அண்ட் வேல்ஸ் கிரிக்கெட் போர்ட். மொத்தம் 8 அணிகள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவிலுமே போட்டியிட்டன. இந்த தொடரின் முதல் சீசன் 2021ம் ஆண்டு தொடங்கியது. இரண்டு சீசன்களில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் இத்தொடரின் மூன்றாவது சீசன் இப்போது தொடங்கியிருக்கிறது.

தி 100 விளையாடப்படும் முறை:

* ஒரு பௌலர் அதிகபட்சம் 20 பந்துகள் வீசலாம்.

* பௌலர்கள் தொடர்ந்து 5 பந்துகளோ அல்லது 10 பந்துகளோ வீசலாம். ஒரு பௌலர் தொடர்ந்து 10 பந்துகள் வீசுவது ஆய்ர்டன் என்று அழைக்கப்படும்.

* ஒவ்வொரு 10 பந்துக்கும் ஒருமுறை பேட்டிங் எண்ட் மாற்றப்படும்

* பவர்பிளே மொத்தம் 25 பந்துகள்

* இங்கு நோ பால்களுக்கு ஃப்ரீ ஹிட் மட்டுமல்லாது ஒரு ரன்னுக்குப் பதிலாக 2 ரன்கள் வழங்கப்படும்

இந்தத் தொடரில் இடம்பெற்றிருக்கும் 8 அணிகளும் ஒவ்வொரு அணியுடனும் ஒரு போட்டியில் மோதும். அந்த வகையில் 7 போட்டிகள். அதன்பிறகு ஒரு போனஸ் போட்டி நடக்கும். அதாவது அந்த அணியின் நகரத்துக்குப் பக்கத்து நகரில் இருக்கும் அணியோடு போட்டி நடக்கும். ஆக ஒவ்வொரு அணியும் மொத்தம் 8 போட்டிகளில் விளையாடும். குரூப் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் மோதி அதில் வெற்றி பெறும் அணி பைனலுக்குத் தகுதி பெறும்.

தி 100 ஆண்கள் & பெண்கள் அணிகளின் கேப்டன்கள் (2023 சீசன்)

பிர்மிங்கம் ஃபீனிக்ஸ் - மொயீன் அலி & எவிலின் ஜோன்ஸ்

லண்டன் ஸ்பிரிட் - டேன் லாரன்ஸ் & ஹெதர் நைட்

மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் - ஜாஸ் பட்லர் & சோஃபி எகில்ஸ்டன்

நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் - வெய்ன் பார்னெல் & ஹோலி ஆர்மிடாஜ்

ஓவல் இன்வின்சிபிள்ஸ் - சாம் பில்லிங்ஸ் & டனே வேன் நீகர்க்

சதர்ன் பிரேவ்ஸ் - ஜேம்ஸ் வின்ஸ் & ஆன்யா ஷ்ரப்ஷோல்

டிரென்ட் ராக்கெட்ஸ் - லூயிஸ் கிரகரி & நேட் ஷிவர்-பிரன்ட்

வெல்ஷ் ஃபயர் - டாம் ஆபெல் & டேமி பூமான்ட்

The 100 Cricket

தி 100 சாம்பியன்ஸ் (ஆண்கள்)

2021 - சதர்ன் பிரேவ்

2022 - டிரென்ட் ராக்கெட்ஸ்

தி 100 சாம்பியன்ஸ் (பெண்கள்)

2021 - ஓவல் இன்வின்சிபிள்ஸ்

2022 - ஓவல் இன்வின்சிபிள்ஸ்

இந்தியன் கனெக்ட்

பெண்கள் பிரிவில் பல இந்திய வீராங்கனைகள் தி 100 தொடரில் விளையாடியிருக்கின்றனர். ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், செஃபாலி வெர்மா, ஜெமீமா ராட்ரீக்ஸ் போன்ற இந்திய வீராங்கனைகள் இந்தத் தொடரில் அங்கம் வகித்திருக்கிறார்கள். ஆனால் இந்த சீசனில் 4 இந்திய வீராங்கனைகளுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஹர்மன்ப்ரீத் கௌர் - டிரென்ட் ராக்கெட்ஸ்

ஸ்மிரிதி மந்தனா - சதர்ன் பிரேவ்

ரிச்சா கோஷ் - லண்டன் ஸ்பிரிட்

ஜெமிமா ராட்ரிக்ஸ் - நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ்

The 100 Cricket

பயிற்சியாளர்களைப் பொறுத்தவரை வுமன்ஸ் பிரீமியர் லீகில் கோச்சாக இருந்த நால்வர் தி 100 அணிகளின் பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள். சாம்பியன் மும்பை இந்தியன்ஸின் பயிற்சியாளர் சர்லோட் எட்வார்ட்ஸ் சதர்ன் பிரேவ் அணியின் பயிற்சியாளராக செயல்படுகிறார். அதேபோல் WPL தொடரில் பயிற்சியளித்த ஜானதன் பேட்டி (டெல்லி கேபிடல்ஸ்), பென் சாயர் (RCB), ஜான் லூயிஸ் (UP வாரியர்ஸ்) எல்லோருமே தி 100 தொடர் செயல்பாட்டைப் பொறுத்து WPL அணிகளால் பொறுப்பளிக்கப்பட்டவர்களே.

The 100 Cricket

இதேபோல் ஆண்கள் பிரிவில் 8 அணிகளின் பயிற்சியாளர்களும் ஐபிஎல் அணிகளோடு வேலை பார்த்திருக்கிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸின் ஸ்டீஃபன் பிளெமிங் (சதர்ன் பிரேவ்), மைக் ஹஸ்ஸி (வெல்ஷ் ஃபயர்) ஆகியோரும் இத்தொடரில் பயிற்சியாளர்களாக செயல்படுகிறார்கள்.

2023 சீசன்:

2023 தி 100 சீசனின் முதல் போட்டியில் டிரென்ட் ராக்கெட்ஸ் மற்றும் சதர்ன் பிரேவ் அணிகள் இரண்டு பிரிவிலும் மோதின. ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான டிரென்ட் ராக்கெட்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 100 பந்துகளில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது. சாம் ஹெய்ன் 39 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய சதர்ன் பிரேவ் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. டேனியல் சாம்ஸ், லூயிஸ் கிரகரி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

The 100 Cricket

பெண்கள் பிரிவில் சதர்ன் பிரேவ் வெற்று பெற்றுவிட்டது. 100 பந்துகளில் அந்த அணி 157 ரன்கள் எடுத்தது. இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 55 ரன்கள் விளாசினார். அடுத்து விளையாடிய ராக்கெட்ஸ் 130 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்களில் தோல்வியடைந்தது.