Ashes Test Series 2023 Twitter
கிரிக்கெட்

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என சமனில் முடிந்தது! சாதனைகளும், சர்ச்சைகளும்.. முழு அலசல்!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் சமனில் முடிந்திருக்கிறது.

Viyan

உலகின் மிகப் பெரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் பரபரப்பாக நடந்து முடித்திருக்கிறது. ஜூன் 16ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கிய 5 போட்டிகள் கொண்ட இத்தொடர் 2-2 என சமன் ஆனது. இருந்தாலும் முந்தைய ஆஷஸ் தொடரை வென்றிருந்ததன் மூலம் ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக்கொண்டது ஆஸ்திரேலியா. எப்போதும்போல் சர்ச்சைகள், விவாதங்கள் நிறைந்த தொடராகவே இந்த ஆஷஸும் அமைந்தது. முதல் இரு போட்டிகளிலும் தோற்றிருந்த இங்கிலாந்து அணி, அதன்பிறகு மிகச் சிறந்த கம்பேக் கொடுத்து தொடரை சமன் செய்திருக்கிறது. இந்த 5 போட்டிகளில் என்ன நடந்தது? ஒரு ரீகேப்...

முதல் டெஸ்ட் - எட்ஜ்பேஸ்டன்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டிருந்த இந்தத் தொடர் ஜூன் 16ம் தேதி பிர்மிங்ஹமில் தொடங்கியது. இந்தத் தொடருக்கு முன்பு இங்கிலாந்து ஸ்பின்னர் ஜேக் லீக் காயமடைந்து வெளியேறினார். வேறு தரமான ஸ்பின்னர்கள் இல்லாததால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த மொயீன் அலியை திரும்ப அழைத்தது இங்கிலாந்து நிர்வாகம். ஜாஷ் ஹேசில்வுட் மீண்டும் அணிக்குத் திரும்பியதால், பென் ஸ்டோக்ஸை பெஞ்சில் அமர வைத்து மிகப் பெரிய முடிவை எடுத்தது இங்கிலாந்து!

Ashes Series

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. ஜோ ரூட் இந்த ஆஷஸ் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்ய, 393 ரன்கள் எடுத்தது அந்த அணி. உஸ்மான் கவாஜா 141 ரன்கள் விளாச, ஆஸ்திரேலியா 386 ரன்கள் எடுத்தது. 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 273 ரன்கள் எடுத்தது. கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட, ஆட்டம் மிகவும் பரபரப்பானது. ஒருகட்டத்தில் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இங்கிலாந்து வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எட்டாவது விக்கெட் வீழ்ந்தபோது அந்த அணியின் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை மாற்றினார்.

Pat Cummins

நிச்சயம் தோற்கவேண்டிய மேட்சை கேப்டனாக முன்னின்று மாற்றினார் அவர். அவருக்கு லயானும் சற்று கம்பெனி கொடுக்க, அந்த அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸில் 141, இரண்டாவது இன்னிங்ஸில் 65 என 206 ரன்கள் எடுத்த உஸ்மான் கவாஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்திய ராபின்சன், விக்கெட் கொண்டாட்டத்தின்போது தகாத வார்த்தைகளால் கவாஜாவை வழியனுப்பிவைத்திருக்கிறார். இது பெரிய அளவில் பேசப்பட்டது. பல முன்னாள் ஆஸி வீரர்கள் ராபின்சனை கடுமையாக விமர்சித்தனர். தன் செயலுக்கு ராபின்சனும் பின்பு வருத்தம் தெரிவித்தார்.

இரண்டாவது டெஸ்ட் - தி லார்ட்ஸ்

புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. ஸ்காட் போலாண்டுக்குப் பதிலாக மீண்டும் பிளேயிங் லெவனில் இடம்பெற்றார் மிட்செல் ஸ்டார்க். இங்கிலாந்து அணி மொயீன் அலிக்குப் பதில் ஜாஷ் டங்கை அணியில் இணைத்தது. இம்முறை டாஸ் வென்ற பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

Smith

ஸ்டீவ் ஸ்மித் சமதடிக்க ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியால் முதல் இன்னிங்ஸில் 325 ரன்களே எடுக்க முடிந்தது. பென் டக்கட் 98 ரன்கள் எடுத்தார். ஸ்டுவார்ட் பிராட் சிறப்பாகப் பந்துவீச இரண்டாவது இன்னிங்ஸில் 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா. இந்தப் போட்டியில் காயமடைந்திருந்த நாதன் லயான், காயத்தையும் பொருட்படுத்தாமல் பேட்டிங் செய்ய வைத்து ரசிகர்களை நெகிழவைத்தார். அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசவில்லை. அவர் பந்துவீசாவிட்டாலும், வேகப்பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை தடுமாற வைத்தனர். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்துகொண்டிருந்தாலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒரு முனையில் விடாமல் போராடிக்கொண்டே இருந்தார்.

Ben Stokes

ஒருகட்டத்தில் அதிரடியைக் கையில் எடுத்த ஸ்டோக்ஸ் பௌண்டரிகளாக விளாசத் தொடங்கினார். ஃபோர்களும், சிக்ஸர்களும் பறந்துகொண்டிருந்ததால், கம்மின்ஸ் சற்று ஆடிப்போனார். ஒருகட்டத்தில் ஸ்டோக்ஸ் இங்கிலாந்தை வெற்றிக்கு அழைத்துச் சென்றுவிடுவாரோ என்று கூடத் தோன்றியது. ஆனால் ஹேசில்வுட் வைடாக வீசிய பந்தை அவசரப்பட்டு அடித்து 155 ரன்களில் ஆட்டமிழந்தார் ஸ்டோக்ஸ். இந்த இன்னிங்ஸில் ஸ்டோக்ஸ் 9 சிக்ஸர்கள் அடித்தார். ஒரு ஆஷஸ் இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸர்கள் இதுதான். இறுதியில் 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. அதனால் 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. 2001ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு ஆஷஸ் தொடரின் முதலிரு போட்டிகளையும் ஆஸ்திரேலியா வென்றது இதுவே முதல் முறை. முதல் இன்னிங்ஸில் சதமடித்திருந்த ஸ்டீவ் ஸ்மித் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இரண்டாவது இன்னிங்ஸில் ஜானி பேர்ஸ்டோவை ஆஸ்திரேலிய கீப்பர் அலெக்ஸ் கேரி அவுட் செய்தது பெரும் விவாதங்களைக் கிளப்பியது. ஹேசில்வுட் வீசிய பந்தை அடிக்காமல் விட்ட ஜானி பேர்ஸ்டோ உடனடியாக கிரீஸிலிருந்து வெளியேறினார். பந்தைப் பிடித்ததும் கேரி ஸ்டம்பை நோக்கி அடித்தார். ஆஸி வீரர்கள் அப்பீல் செய்ய, பேர்ஸ்டோவுக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இதை இங்கிலாந்து ரசிகர்கள் சரியாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் டிரஸ்ஸிங் ரூமுக்குத் திரும்பும்போது அவர்களை 'boo' செய்தனர். லார்ட்ஸின் புகழ்பெற்ற லாங் ரூமைக் கடக்கும்போது பல ரசிகர்கள் ஆஸ்திரேலிய வீரர்களோடு விவாதம் செய்தனர். சமூக வலைதளத்தில் வழக்கம்போல் 'ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்' விவாதம் கிளம்பியது. இருந்தாலும் விதிப்படி அவர் அவுட் தான் என்று பலரும் வாதிடவே செய்தனர்.

மூன்றாவது டெஸ்ட் - லீட்ஸ்

மூன்றாவது டெஸ்ட் ஜூலை 6ம் தேதி தொடங்கியது. காயமடைந்த லயானுக்குப் பதில் டாட் மர்ஃபி ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றார். தொடர்ந்து 100 போட்டிகளில் தவறவிடாமல் விளையாடி சாதனை படைத்திருந்த லயான், அடுத்த போட்டியையே தவறவிடும் நிலை ஏற்பட்டது. காயமடைந்த ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனுக்குப் பதிலாக மிட்செல் மார்ஷ் அணியில் இடம்பெற்றார். இங்கிலாந்து அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. காயத்திலிருந்து திரும்பிய கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் இருவரும் அணிக்குத் திரும்பினர். அதனால் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜாஷ் டங் வெளியேற்றப்பட்டனர். ஆலி போப்புக்குப் பதில் மொயீன் அலி மீண்டும் அணிக்குத் திரும்பினார்.

Ashes 3rd Test

இங்கிலாந்து அணி ஃபீல்டிங் தேர்வு செய்ய, மார்க் வுட் தன் வேகத்தால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை மிரட்டினார். அவர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்த 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா. அணிக்குத் திரும்பிய முதல் இன்னிங்ஸிலேயே சதமடித்தார் மிட்செல் மார்ஷ். அதிரடியாக விளையாடிய அவர் 118 பந்துகலில் 118 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியோ ஆஸ்திரேலியாவை விடவும் சொதப்பியது. கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள் வீழ்த்த 237 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஸ்டோக்ஸ் அண்ட் கோ. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் தடுமாற்றம் தொடர்ந்தது. அதனால் அந்த அணியால் 224 ரன்களே எடுக்க முடிந்தது. 251 என்ற இலக்கை சேஸ் செய்த இங்கிலாந்து, அதிரடியாக ஐம்பதே ஓவரில் அந்த இலக்கை சேஸ் செய்தது. மொத்தம் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, முதல் இன்னிங்ஸில் அதிரடியாக எட்டே பந்துகளில் 24 ரன்கள் எடுத்த மார்க் வுட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

நான்காவது டெஸ்ட் - ஓல்ட் டிராஃபோர்ட்

ஜூலை 19ம் தேதி தொடங்கிய இந்த ஆட்டம் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. கேமரூன் கிரீன் காயத்திலிருந்து மீண்டதால் அவர் அணிக்குத் திரும்பினார். அதனால் தன் இடத்தை இழந்தார் டாட் மர்ஃபி. ஆலி ராபின்சனுக்குப் பதில் அணிக்குத் திரும்பினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். ஆஸ்திரேலிய அணி 317 ரன்களில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி இந்த ஆஷஸ் தொடரின் மிகச் சிறந்த இன்னிங்ஸை ஆடியது. பேட்ஸ்மேன்கள் அனைவருமே மிகச் சிறப்பாக விளையாட முதல் இன்னிங்ஸில் 592 ரன்கள் குவித்தது இங்கிலாந்து. ஓப்பனர் ஜேக் கிராலி 189 ரன்கள் விளாசினார். விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ 99 ரன்களோடு கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 5.49 என்ற அசத்தல் ரன்ரேட்டில் இங்கிலாந்து அணி ரன் குவிக்க, 275 ரன்கள் முன்னிலை பெற்றது.

Zak Crawley

இரண்டரை நாள்கள் மீதமிருந்ததால் நிச்சயம் இங்கிலாந்து வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை தொடர்ந்து குறுக்கிட்டு கடைசி 2 நாள் ஆட்டத்தையும் பாதித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. மார்னஸ் லாபுஷான் 111 ரன்கள் எடுத்தார். இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டு டிரா ஆனதால், ஆஷஸ் கோப்பையை தக்கவைத்துக்கொண்டது ஆஸ்திரேலியா. ஜேக் கிராலி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

ஐந்தாவது டெஸ்ட் - தி ஓவல்

ஜூலை 27ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் மீண்டும் கிரீனுக்குப் பிறகு மர்ஃபி இடம்பிடித்தார். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஹேரி ப்ரூக் 91 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 295 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 71 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய இங்கிலாந்து அணி 395 ரன்கள் குவித்தது. ஜேக் கிராலி, ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ மூவரும் அரைசதம் அடித்தனர்.

Harry Brook

384 ரன்களை சேஸ் செய்த ஆஸ்திரேலிய அணி மிகச் சிறப்பாக ஆட்டத்தைத் தொடங்கியது. முதல் விக்கெட்டுக்கு வார்னர், கவாஜா இருவரும் இணைந்து 140 ரன்கள் எடுத்தனர். ஆனால் அதன்பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது ஆஸ்திரேலியா. அவர்கள் இன்னிங்ஸுக்கு நடுவே நடுவர்கள் பந்தை மாற்றியது மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. வர்ணனையில் இருந்த முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் அதை கடுமையாக சாடினார். இறுதியில் 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா. இதன்மூலம் ஆஷஸ் தொடரை 2-2 என டிரா செய்தது இங்கிலாந்து. 7 விக்கெட்டுகள் வீழ்த்திய கிறிஸ் வோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Ashes 5th Test

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவார்ட் பிராடு இந்தப் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். பந்துவீச்சில் மட்டுமல்லாது ஃபீல்டிங்கின்போதும் தன் செயலால் பலரையும் ஆச்சர்யப்படுத்தினார் பிராட். போட்டிக்கு நடுவே அவர் திடீரென்று சென்று ஸ்டம்ப் பெய்ல்களை மாற்றி வைத்தார். அடுத்த பந்திலேயே விக்கெட் விழ, இச்சம்பவம் வைரலாகத் தொடங்கியது.

Mitchell Starc

கிறிஸ் வோக்ஸ், மிட்செல் ஸ்டார்க் இருவரும் தொடர் நாயகர்களாக அறிவிக்கப்பட்டனர். 4 போட்டிகளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தினார் ஸ்டார்க். ஒரு போட்டியில் ஆடாவிட்டாலும் அவரே இந்தத் தொடரின் டாப் விக்கெட் டேக்கராக உருவெடுத்தார். மூன்றே போட்டிகளில் ஆடிய கிறிஸ் வோக்ஸ் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பேட்ஸ்மேன்களைப் பொறுத்தவரை உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக 496 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரில் எந்தவொரு பேட்ஸ்மேனும் ஒரு சதத்துக்கு மேல் அடிக்கவில்லை.