best ever catch X
கிரிக்கெட்

“ஹே எப்புட்றா! சான்சே இல்ல!”- கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்கவைத்த கேட்ச்! வைரல் வீடியோ!

Rishan Vengai

நியூசிலாந்தின் புகழ்பெற்ற உள்நாட்டு கிரிக்கெட் தொடரானது, சூப்பர் ஸ்மாஷ் டி20 லீக். 2023-2024ம் ஆண்டுக்கான சூப்பர் ஸ்மாஷ் டி20 லீக் கடந்த டிசம்பர் 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டி ஜனவரி 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடக்கவிருக்கிறது.

இந்நிலையில் ஒவ்வொரு அணியும் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறுவதற்கான போட்டியில் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. அப்படி இன்று நடைபெற்ற போட்டியில் வெல்லிங்டன் மற்றும் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த வெல்லிங்டன் அணி வான் பீக்கின் கடைசிகட்ட அதிரடியால் 147 ரன்கள் எடுத்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸ் அணி ஜாக் போயில்லின் அரைசதம் மற்றும் ப்ரேஸ்வெல்லின் அதிரடி 30 ரன்களால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

super smash

சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸ் அணி இரண்டாவதாக பேட்டிங் செய்தபோது தொடக்க வீரர் வில் யங் பந்தை காற்றில் அடித்தார். அதை நம்பமுடியாத வகையில் பிடித்த வெல்லிங்டன் வீரர்கள் டிராய் ஜான்சன் மற்றும் நிக் கெல்லி இருவரும் கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளனர்.

பின்தொடர்ந்து சென்று அசாத்திய கேட்ச்சை எடுத்த டிராய் ஜான்சன்!

சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் தங்களுடைய இன்னிங்ஸை தொடங்கி 5 ஓவரில் 36 ரன்களை எடுத்திருந்தது. அப்போது மைக்கேல் ஸ்னெடன் வீசிய ஆறாவது ஓவரின் இரண்டாவது பந்தை சிக்சருக்கு அனுப்ப நினைத்த வில் யங், பந்தை நேராக தூக்கி லாங் ஆனில் அடித்தார். நல்ல உயரத்தில் பறந்த பந்தை கிரவுண்டின் பாதியில் இருந்து ஆகாயத்தை பார்த்த படியே துரத்திச்சென்ற டிராய் ஜான்சன், பவுண்டரி லைனுக்கு அருகில் சென்று லாவகமாக கையில் எடுத்தார்.

ஆனால் சென்ற வேகத்தில் நேராக பவுண்டரி லைன் தாண்டி விழச்சென்ற அவர், அந்த தருணத்திலும் நிதானித்து மற்றொரு ஃபீல்டரான கெல்லியின் கைகளில் பந்தை தூக்கியெறிந்தார். அதை லாவகமாக பிடித்த கெல்லி வில் யங்கின் விக்கெட்டை பறித்தார்.

will young

முதலில் வில் யங் பந்தை தூக்கி காற்றில் அடிக்கும்போது அது ஆளில்லாத இடத்தில்தான் விழும் என்று நம்பப்பட்டது. ஏன் பார்க்கும் நமக்கும்கூட அப்படித்தான் இருந்திருக்கும். ஆனால் ஒரு பந்தை ஆகாயத்தில் பார்த்தவாறே, அதுவும் முன்னால் பறக்கும் பந்தை பின்நோக்கி சென்று பிடிப்பதெல்லாம் மிகவும் கடினமான காரியம். ஆனால் அதையும் செய்த டிராய் ஜான்சன், அதற்குமேலும் பின்னிருப்பவர் எங்கிருக்கிறார் என்பது கூட தெரியாத கனப்பொழுதில் பவுண்டரி லைனில் படாமல் பந்தை தூக்கி மற்றொரு ஃபீல்டருக்கு எறிவதெல்லாம் கோடியில் ஒருமுறை நடப்பது. இது பார்ப்பதற்கு இயல்பாக தெரிந்தாலும் நடப்பெதல்லாம் ஒரு தலைகீழான இயக்கம், அதிலும் நிதானத்துடன் செயல்பட்ட விதம் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பிற்குள் தள்ளியுள்ளது.

super smash

இந்த கேட்ச்சை பார்த்த ஒருவர் வியப்பில் அதை “சட்டவிரோதமான கேட்ச்” என பதிவிட்டுள்ளார். மேலும் பல ரசிகர்கள் “கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேட்ச் இதுதான்” என்று பதிவிட்டு வருகின்றனர்.