Rare Cricket Moment web
கிரிக்கெட்

“தலையே சுத்திடுச்சு”! ஸ்டம்புகளுக்கு இடையில் பந்து சென்றபோதும் தப்பித்த பேட்ஸ்மேன்! Rare Incident!

அதிர்ஷ்டம் என்ற சொல்லுக்கு முழு அர்த்தம் சேர்க்கும் வகையில், ஸ்டம்புகளுக்கு இடையில் பந்து புகுந்து சென்றபின்பும் பெயில்ஸ் விழாததால் ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து விளையாடிய சம்பவம் நடந்துள்ளது.

Rishan Vengai

பொதுவாக கிரிக்கெட்டில் சில நம்ப முடியாத சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்தான். அந்த வகையில் “டைம் அவுட், ஹிட் விக்கெட், சில ஷாக்கிங் ரன் அவுட்டுகள், மன்கட் விக்கெட், பந்து ஸ்டம்பை தாக்கிய பின்பும் பெயில்ஸ் விழாத நிகழ்வுகள்” என பல்வேறு நம்பமுடியாத சம்பவங்களை கிரிக்கெட் எப்போதும் விருந்தாக படைத்துள்ளது.

ஆனால் மேற்கண்ட அனைத்தையும் தூக்கி சாப்பிடும் ஒரு நிகழ்வாக, ஒரு உள்ளூர் போட்டி ஒன்றில் ஸ்டம்புகளுக்கு இடையில் பந்து புகுந்து சென்றபோதும் ஒரு பேட்ஸ்மேன் உயிர் பிழைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெரும்பாலான சர்வதேச விளையாட்டுகளில் ஸ்டம்பின் மீது பந்துபட்டு பெயில்ஸ் விழாமல் பேட்ஸ்மேன் தப்பித்த சம்பவங்களை நாம் பார்த்துள்ளோம். ஆனால் ஸ்டம்புகளுக்கு நடுவில் பந்து சென்று பேட்ஸ்மேன் தப்பித்த சம்பவம் முதல்முறையாக நடந்துள்ளது. ஸ்டம்பை தாக்கும் என்று காத்திருந்த பந்துவீச்சாளர், பந்து ஸ்டம்புகளுக்கு இடையில் புகுந்து சென்றதால் அதிர்ச்சியடைந்தார்.

இப்படியெல்லாம் நடந்தா பவுலர் என்ன தான் பண்றது!

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரான நஜீப் முல்லா டிராபியின் போது, ​​வேகப்பந்துவீச்சாளர் வீசிய பந்தை பேட்ஸ்மேன் மிடில் ஸ்டம்பில் நின்று ஃபிளிக் செய்ய நினைத்து பந்தை மிஸ் செய்தார். பந்து லெக் ஸ்டம்பை தாக்கும் என்று நினைத்த பவுலருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு ஸ்டம்புகளுக்கும் இடையே புகுந்து சென்ற பந்து பெயில்ஸை கீழே விழவைக்காமல் நேராக விக்கெட் கீப்பர் கைகளுக்கு சென்றது. இதைப்பார்த்த பந்துவீச்சாளர் மற்றும் விக்கெட் கீப்பர் இருவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பேட்ஸ்மேன் என்ன நடக்கிறது என்று புரியாமல் தொடர்ந்து விளையாட ஆரம்பித்தார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகிவரும் நிலையில், ரசிகர்கள் “இதைத்தான் உண்மையான அதிர்ஷ்டம்” என்பார்கள் என பதிவிட்டுவருகின்றனர்.

ஒரு ரசிகர், இதேபோன்ற ஒரு சம்பவம் 1997ம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது நடந்தது என்று கூறி, அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.