2024 மகளிர் ஆசிய கோப்பை x
கிரிக்கெட்

நாளை தொடங்கும் 9வது மகளிர் ஆசிய கோப்பை.. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை!

9வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது 8 அணிகளுக்கு இடையே நடைபெறவிருக்கிறது,

Rishan Vengai

மகளிர் அணிகளுக்கு இடையேயான 9வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இலங்கையில் நாளை முதல் தொடங்கவிருக்கிறது. ஜூலை 19 முதல் ஜூலை 28 வரை நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், “இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாள், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா மற்றும் தாய்லாந்து” முதலிய 8 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருப்பதில் A குரூப்பில், “இந்தியா, பாகிஸ்தான், நேபாள், ஐக்கிய அரபு அமீரகம்” முதலிய 4 அணிகளும், B குரூப்பில் “வங்கதேசம், இலங்கை, மலேசியா, தாய்லாந்து” முதலிய 4 அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவுகளில் உள்ள ஒரு அணி மற்ற அணிகளுடன் மோதிக்கொள்ளும், அதாவது ஒவ்வொரு அணிகளும் 3 லீக் போட்டிகளில் விளையாடவிருக்கின்றன. பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும், முதல் அரையிறுதி போட்டியில் A1 மற்றும் B2 அணிகளும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் B1 மற்றும் A2 அணிகளும் மோதிக்கொள்ளும்.

கோப்பைக்கான இறுதிப்போட்டி ஜூலை 28ம் தேதி இலங்கையில் உள்ள டம்புலா மைதானத்தில் நடைபெறும்.

முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா!

நடந்து முடிந்துள்ள 8 ஆசிய கோப்பை தொடரில் 7 முறை இந்திய அணியும், ஒருமுறை வங்கதேச அணியும் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளன. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இன்னும் தங்களுடைய முதல் பட்டத்திற்கான எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றன.

india team

இந்நிலையில் நாளை தொடங்கவிருக்கும் 9வது ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாள் அணிகள் (மதியம் 2 மணியளவில்) மோதுகின்றன. மாலை 7 மணிக்கு நடைபெறவிருக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய அணியின் லீக் போட்டிகள்:

* ஜூலை 19: இந்தியா vs பாகிஸ்தான் (இரவு 7 மணி IST)

* ஜூலை 21: இந்தியா vs UAE (மதியம் 2 மணி IST)

* ஜூலை 23: இந்தியா vs நேபாளம் (இரவு 7 மணி IST)

2024 மகளிர் ஆசிய கோப்பை தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கிலும், டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் லைவ்ஸ்ட்ரீமிலும் காணலாம்.