ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி தங்களுடைய இன்னிங்ஸின் கடைசி இரண்டு ஓவர்களில் 58 ரன்களை பதிவுசெய்து அசத்தியது. 19வது ஓவரில் 22 ரன்னும், 20-வது ஓவரில் 36 ரன்களும் அடிக்கப்பட்டது. இந்த இரண்டு ஓவர்களில் ரோகித் மற்றும் ரின்கு சிங் இருவரும் சேர்ந்து 7 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடித்தனர். ஆண்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி ஓவரில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்ச ரன்கள் (58) இதுவாகும்.
இதற்கு முன் 2023-ம் ஆண்டு மங்கோலியாவுக்கு எதிராக நேபாள் அணி அடித்த 55 ரன்களே, ஒரு டி20 போட்டியின் கடைசி 2 ஓவரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது இந்திய அணி அந்த சாதனையை முறியடித்து முதல் அணியாக புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் ரோகித் மற்றும் ரின்கு சிங் இணை கரிம் ஜனத் வீசிய 20வது ஓவரில் 5 சிக்சர்கள், 1 பவுண்டரியை ( ஒரு ரன்+ ஒரு நோ-பால் அடக்கம்) பறக்கவிட்டு 36 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 36 ரன்கள் அடித்த யுவராஜ் சிங் மற்றும் கிரன் பொல்லார்ட் இருவரின் சாதனையை சமன்செய்துள்ளனர்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 36 ரன்களை இரண்டு முறை பதிவுசெய்த அணியாக இந்தியா மாறியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் தங்களுடைய இன்னிங்ஸின் கடைசி 5 ஓவர்களில் 22, 13, 10, 22, 36 என 103 ரன்களை பதிவுசெய்தது இந்திய அணி. இதன்மூலம் நேபாளுக்கு பிறகு கடைசி 5 ஓவர்களில் 100 ரன்களை பதிவுசெய்த இரண்டாவது அணியாக மாறியுள்ளது இந்தியா. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒரு அணி டி20 போட்டியின் கடைசி 5 ஓவரில் 100 ரன்களை எட்டுவது இதுவே முதல்முறை.
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3வது போட்டியானது இரண்டு சூப்பர் ஓவர்கள் கண்ட முதல் போட்டியாக மாறியுள்ளது.
இதற்கு முன் 2020 ஐபிஎல் தொடரில் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 2 சூப்பர் ஓவர்கள் வீசப்பட்டன. சர்வதேச டி20 போட்டியில் 2 சூப்பர் ஓவர்கள் பதிவான முதல் போட்டி இதுவாகும்.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டியில் 5 வீரர்கள் அரைசதம் அடித்து அசத்தினர். இந்தியாவில் ரோகித் மற்றும் ரின்கு சிங் இருவரும், ஆப்கானிஸ்தானில் டாப் ஆர்டர்கள் குர்பாஸ், ஜத்ரான், நயப் 3 பேரும் அரைசதங்கள் அடித்தனர்.
ஒரு சர்வதேச டி20 போட்டியில் 5 வீரர்கள் அரைசதமடிப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் 2020ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் 5 அரைசதங்கள் அடிக்கப்பட்டன. இதன்மூலம் இந்த சாதனையை இரண்டு முறை படைத்த முதல் அணியாக இந்தியா மாறியுள்ளது.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தும் சமன் செய்யப்பட்ட இரண்டாவது பெரிய போட்டியாக இந்தியா-ஆப்கானிஸ்தான் போட்டி மாறியுள்ளது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இரண்டு அணிகள் 212 ரன்களை சேர்த்தனர்.
இதற்கு முன்பு 2020ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் 424 ரன்கள் பதிவுசெய்யப்பட்டு டிராவானது. இரண்டு அணிகளும் 214 ரன்கள் அடித்தன.