இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே மறக்க முடியாத அதிகாரம் இது. உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக சதமடித்து, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மகத்தான சாதனையைப் படைத்தார் விராட் கோலி.
இதற்கு முன் 49 சதங்களுடன் அந்த அரியாசணத்தில் அமர்ந்திருந்த சச்சின் டெண்டுல்கரின் அந்த சாதனையை, டெண்டுல்கரின் சொந்த ஊரான மும்பையில், அவர் கண் முன்பாகவே கடந்தார் கோலி. அந்த உலகக் கோப்பை முழுவதுமே அசத்தல் ஃபார்மில் இருந்தார் கோலி. இருந்தாலும் அவர் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் ஜொலித்ததில்லை என்ற விமர்சனம் இருந்துகொண்டே இருந்தது. அதையும் கூட இந்தப் போட்டியில் போக்கியது அந்த சதம். அதுவும் இந்தியா எப்போதும் தடுமாறும் நியூசிலாந்து அணிக்கு எதிராக வந்தது இன்னும் சிறப்பு!
2023 ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்றுவிடும் என்று நூறு கோடி மக்களும் கனவு கண்டிருந்தனர். சொந்த மண்ணில் மிகச் சிறந்த ஃபார்மில் இருந்த இந்திய அணி தான் அனைவருக்குமே ஃபேவரிட்டாக இருந்தது. ஃபைனலில் கூட ஆஸ்திரேலியாவை அண்டர்டாக் என்று தான் அனைவரும் கருதினார்கள். ஆனால், 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் போலவே இன்னொரு விஷயம் அரங்கேறியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய பௌலிங்குக்கு சற்று தடுமாறியது. அதனால் இந்தியாவில் 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பந்துவீச்சில் சிறப்பாகத் தொடங்கியிருந்தாலும், அன்று பான்டிங் ஆடியது போன்ற ஒரு ஆட்டத்தை ஆடினார் டிராவிஸ் ஹெட். அதன் விளைவாக மீண்டும் ஒரு முறை ஆஸ்திரேலிய அணியிடம் உலகக் கோப்பை ஃபைனலை இழந்தது இந்தியா. ஒட்டுமொத்த தேசத்தின் கனவும் நொறுங்கியது. இன்னும் சில ஆண்டுகளுக்கு அது ஆறாத வடுவாக தொடர்ந்துகொண்டே இருக்கப்போகிறது.
இந்திய பெண்கள் அணிக்கு 2023 மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. அதிலும் குறிப்பாக டெஸ்ட் அரங்கில் பட்டையைக் கிளப்பியது இந்தியா. முதலில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை மூன்றே நாள்களில் வென்ற ஹர்மன்ப்ரீத் கௌரின் அணி, அடுத்த சில நாள்களிலேயே மகத்தான ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்தியது.
பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்து ஏரியாவிலும் அசத்திய இந்திய அணி பெரும்பகுதி ஆதிக்கம் செலுத்தியது. சுபா சதீஷ், ஜெமீமா ராட்ரீக்ஸ், ரிச்சா கோஷ் ஆகியோர் தங்கள் அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்து அசத்தினார்கள். பெரிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் அரங்கில் இந்திய அணி அடுத்தடுத்து பெற்றிருக்கும் இந்த வெற்றி, இந்திய பெண்கள் கிரிக்கெட் வரலாற்றின் மிகப் பெரிய சாதனைகளுள் ஒன்று.
இந்த ஐபிஎல் தொடரின் மிகப் பெரிய ஸ்டாராக உருவெடுத்தார் ரிங்கு சிங். இந்த இளம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் இந்தத் தொடரில் செய்தது அசாதாரணமான விஷயம். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவருடைய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்தது. நெருக்கடி என்று சொல்ல முடியாது.
கடைசி ஓவரில் 31 ரன்கள் தேவை. கிட்டத்தட்ட ஆட்டம் முடிந்தேவிட்டது. ஆனால் ரிங்கு ஹேட் அதர் ஐடியாஸ். முதல் பந்தில் உமேஷ் சிங்கிள் எடுத்துக் கொடுக்க, யஷ் தயால் வீசிய கடைசி ஐந்து பந்துகளையுமே சிக்ஸராக்கி இதுவரை யாரும் செய்யாத ஒரு மாஸ் சம்பவத்தை நிகழ்த்தினார் ரிங்கு. இப்போது இந்திய அணிக்குமே முக்கிய அக்கமாய் மாறிக்கொண்டிருக்கிறார் இந்த இளம் வீரர்.
இந்திய பெண்கள் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லக்கூடிய வுமன்ஸ் பிரீமியர் லீக் தொடர் ஒருவழியாக இந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே இது பற்றிப் பேசப்பட்டு வந்தாலும், இந்த ஆண்டு அது செயல்பாட்டுகே வந்தது.
5 அணிகளுடன் தொடங்கப்பட்டிருக்கும் இந்தத் தொடரின் முதல் சாம்பியனாக மகுடம் சூடியது மும்பை இந்தியன்ஸ். பல இளம் வீராங்கனைகளின் வாழ்க்கையை மாற்றியிருக்கும் இந்தத் தொடர் ஐபிஎல் போலவே இந்திய பெண்கள் கிரிக்கெட்டையும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.