England Poor Performance ICC
கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு என்னாச்சு? “பாஸ்பால்” கிரிக்கெட் தான் வீழ்ச்சிக்கு காரணமா? சொதப்பலுக்கான 5காரணங்கள்!

கடந்த 2019 ஒருநாள் உலகக்கோப்பையை வென்று நடப்பு சாம்பியன் அணியாக இருந்துவரும் இங்கிலாந்து அணி, நடைபெற்றுவரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது.

Rishan Vengai

கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடாக இருந்தாலும், உலகக்கோப்பையை வெல்லும் அளவு இங்கிலாந்து அணி முன்னேறவில்லை என்ற கடுமையான விமர்சனங்கள் தொடர்ச்சியாக இங்கிலாந்து மீது வைக்கப்பட்டது. அதனை உடைக்கும் விதமாக ஒரு வலுவான, பயமில்லாத இங்கிலாந்து அணியை கட்டமைக்கும் முயற்சியில் இறங்கினார் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் எய்ன் மோர்கன். ஒரு குழப்பான சூழலில் இங்கிலாந்து அணியின் ODI கேப்டனாக 2015 உலகக்கோப்பையின் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக நியமிக்கப்பட்டார் மோர்கன்.

2019 World Cup

2015 உலகக்கோப்பையில் 6 லீக் போட்டிகளில் 4 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்தாலும், அதில் துவண்டு போகாத இங்கிலாந்து அணி அடுத்த உலகக்கோப்பையை குறிவைத்தது. அதற்கு தனியாக ஒரு பிராண்ட் கிரிக்கெட்டையே உருவாக்கியது இங்கிலாந்து நிர்வாகம். போட்டியின் எந்த இடத்திலும் அதிரடியான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்தும் ஒரு ஆக்ரோசமான கிரிக்கெட்டை விளையாடிய மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, அந்த அணுகுமுறையில் 90% வெற்றியை மட்டுமே பெற்றது. முழுக்க பயமில்லாத, ஆக்ரோசமான கிரிக்கெட்டை ஆடிய இங்கிலாந்து அணி 4 ஆண்டுகளின் போராட்டத்திற்கான பலனாய் 2019 ஒருநாள் உலகக்கோப்பையை வென்று அசத்தியது. இந்த அணுகுமுறையால் தான் சமபலம் கொண்ட இந்திய அணியை கூட சுலபமாக 2019-ல் வீழ்த்தியது இங்கிலாந்து.

Eoin Morgan

இந்நிலையில் தற்போதைய 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி, தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்திவருகிறது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியிருக்கும் இங்கிலாந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

இன்று நடைபெற்றுவரும் இலங்கை அணிக்கு எதிரான 5வது லீக் போட்டியில் கூட ஒரு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கும் இங்கிலாந்து, 33.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 156 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி சொதப்பி இருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து சந்தித்து வரும் வீழ்ச்சிக்கான சில காரணங்களை பார்ப்போம்..!

1. பாஸ்பால் கிரிக்கெட்டின் தாக்கம்!

england bazball cricket

2019-ல் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி, தற்போது நியூசிலாந்து வீரர் பிரண்டென் மெக்கல்லம் டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளராக பொறுப்பேற்றதிலிருந்து “பாஸ்பால்” கிரிக்கெட்டை மட்டுமே ஆடிவருகிறது. அதிரடியாக விளையாடி விரைவாகவே ரன்களை எடுத்துவரும் இந்த ஆட்டமுறை தான், தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களை பொறுத்திக்கொள்ள முடியாமல் தடுமாறுவதற்கு பெரிய காரணமாக இருந்துவருகிறது.

2. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள்!

Joe Root

தொடர்ச்சியாக வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் மட்டுமே விளையாடி வந்திருக்கும் இங்கிலாந்து அணி, சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் சொதப்பிவருகிறது. "வெறும் பிளாட் பிட்ச் இருந்துவிட்டால் போதும் “பாஸ்பால்” கிரிக்கெட்டை எளிதாக ஆடிவிடலாம் என்பதில் இங்கிலாந்து மூழ்கிவிட்டதோ" என தோன்றுகிறது. அதன் பிரதிபலிப்பு தான் டர்னிங் டிராக்-களில் இங்கிலாந்து தொடர்ந்து சொதப்பி வருகிறது. இந்நிலையில் தான் இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிராக 3 ஸ்பின்னர்களை வைத்துகூட விளையாடலாம் என கூறியுள்ளார்.

3. வீரர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது!

David Malan

2019 உலகக்கோப்பையை பொறுத்தவரையில் எந்த அணியை வேண்டுமானாலும் தங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இங்கிலாந்துக்கு இருந்தது. அதனால் தான் இந்தியாவை வீழ்த்திய பிறகு கூட “இந்தியா சரணடைந்தது மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்திருந்தார், முன்னாள் இங்கிலாந்து கேப்டன் எய்ன் மோர்கன். ஆனால் நடப்பு உலகக்கோப்பையை பொறுத்தவரையில் அந்த ஆக்ரோசம் மற்றும் பயமில்லாத கிரிக்கெட் விளையாட இங்கிலாந்து வீரர்கள் திணறிவருகின்றனர். அவர்களுக்கு ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடும் யுக்தி தெரியவில்லை.

4. அதிகப்படியான ஆல்ரவுண்டர்களும் பிரச்னை தான்!

அதிகப்படியான ஆல்ரவுண்டர்கள் இருந்தாலும் அவர்களுக்கான ரோல் சரியாக வகுக்கப்படவில்லை. இங்கிலாந்து ஆல்ரவுண்டர்களுக்கு பேட்ஸ்மேனாக செயல்படுவதா, பவுலராக செயல்படுவதா என்ற குழப்பம் நீடித்துவருகிறது. மாறாக இவர் தான் பவுலர், இவர் தான் பேட்டர் என வகுக்கப்பட்ட மார்க் வுட், அடில் ரசீத் மற்றும் ஹாரி ப்ரூக் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர்.

Mark Wood

மேலும் இங்கிலாந்து அணி எந்தவொரு திட்டமிடுதலோடும் களமிறங்குவதில்லை. அதை ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் “எந்த திட்டமும் இல்லை முதலில் பந்துவீசி பார்க்கப்போகிறோம்” என ஜோஸ் பட்லர் கூறி உறுதிப்படுத்தினார். எந்த திட்டமும் இல்லாமல் களமிறங்கிய இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தி வரலாறு படைத்தது.

5. ஓப்பனர்கள் சொதப்பல்! பென் ஸ்டோக்ஸ் இல்லை!

2019 உலகக்கோப்பையை பொறுத்தவரை இங்கிலாந்து அணி காப்பானாக செயல்பட்டது பென் ஸ்டோக்ஸ் மட்டும் தான். காயத்தால் அவதிப்பட்ட ஸ்டோக்ஸ் முதல் 3 போட்டிகளில் விளையாடாமல் இருந்தது பெரிய பாதகமாக இங்கிலாந்துக்கு அமைந்தது. மீண்டும் திரும்பி வந்திருக்கும் ஸ்டோக்ஸ் தன்னுடைய ஃபார்மை மீட்டெடுக்கும் முயற்சியில் இருந்துவருகிறார்.

Ben Stokes

மேலும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் சரியான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்காமல் சொதப்பி வருகின்றனர். "ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணி செயல்படவில்லை என்பதே உண்மையாக காரணமாக இருந்துவருகிறது. சிறந்த வீரர்கல் அணியில் இருந்தும், இங்கிலாந்து 8வது இடத்தில் நீடிக்கிறது". இந்நிலையில் இன்று நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால், கடைசி இடத்திற்கு நடப்பு சாம்பியன் நகரும்.