இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுக்கு என எப்போதும் ஒரு தனியிடம் உண்டு. அந்த இடத்திற்கான போட்டியில் பல சிறந்த வீரர்கள் முட்டிமோதினாலும் ஒருசில தலை சிறந்த வீரர்களே இதுவரை ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். எப்படி பார்த்திவ் பட்டேல், தினேஷ் கார்த்திக் போன்ற சிறந்த வீரர்கள் இருந்தபோதும் மகேந்திர சிங் தோனி என்ற ஒரு தலைசிறந்த வீரர் அந்த இடத்தில் ஒட்டிக்கொண்டாரோ, அதேபோல சஞ்சு சாம்சனுக்கான இடத்தில் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் போட்டிக்கான வரிசையில் இருக்கிறார்கள்.
இருப்பினும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்துள்ளார். ஆனாலும், சமீபகாலம் வரையில் சஞ்சு சாம்சனுக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமலேயே இருந்தன. ஒரு கட்டத்தில் Justice for Sanju Samson என்ற ஹேஷ்டேங் எல்லாம் ட்ரெண்ட் ஆனது.
சூர்யகுமார் யாதவ் கேப்டன் ஆன பின் தொடர்ச்சியாக இந்திய அணியில் களமிறங்கும் சஞ்சு சாம்சன், கடைசி இரு போட்டிகள் தவிர மற்ற போட்டிகள் அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தையே ஆடி வந்துள்ளார். இந்நிலையில், தோனி, ரோகித், விராட் கோலி, ராகுல் ட்ராவிட் போன்றோர் சஞ்சு சாம்சனின் 10 ஆண்டுகளை வீணடித்ததாக அவரது தந்தை விஸ்வநாத் சாம்சன் வேதனை தெரிவித்துள்ளார்.
கேரள செய்தி ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்திருந்த பேட்டியில், “என் மகனின் மிக முக்கியமான 10 ஆண்டு கேரியரை வீணடித்தவர்கள் 3-4 பேர் இருக்கிறார்கள். தோனி, விராட், ரோகித் போன்ற கேப்டன்களும், பயிற்சியாளர் ட்ராவிட்டும். இந்த 4 பேரும் எனது மகனின் 10 வருட வாழ்க்கையை வீணடித்தனர். அவர்கள் எவ்வளவு காயப்படுத்தினார்களோ அவ்வளவு வலிமையாக சஞ்சு நெருக்கடியில் இருந்து வெளியேறினார்” என தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் கிரிக்கெட் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தையும் விமரிசித்துள்ளார். “தமிழகத்தைச் சேர்ந்த வீரரான ஸ்ரீகாந்தின் கருத்துகள் என்னை மிகவும் மோசமாக காயப்படுத்தியது. ‘யாருக்கு எதிராக சஞ்சு சாம்சன் சதமடித்தார், வங்கதேசத்திற்கு எதிராகதானே’ என அவர் தெரிவித்தார். சதம் என்றால் சதம்தானே” என தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் சஞ்சு சாம்சன் இதுவரை 11 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ளார். இதில் 327 ரன்களை எடுத்துள்ளார். அவரது சராசரி 32.70 ஆக உள்ளது. 2 சதங்களும் ஒரு அரைசதமும் அடக்கம். ஆனால், 5 முறை டக் அவுட் ஆகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.