விராட் கோலி - ஸ்ரேயாஸ் ஐயர் - கேஎல் ராகுல் cricinfo
கிரிக்கெட்

இந்திய வீரர்களுக்கு ODI கிரிக்கெட் மறந்துபோச்சா? இலங்கைக்கு எதிரான படுதோல்விக்கு 3முக்கிய காரணங்கள்!

Rishan Vengai

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிய இந்திய அணி, 3 டி20 போட்டிகளிலும் இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை 3-0 என கைப்பற்றி இலங்கை அணியை ஒயிட்வாஷ் செய்தது.

ஆனால், டி20 தொடரை கோட்டைவிட்ட இலங்கை அணி, ஒருநாள் தொடரில் ஒரு தரமான கம்பேக் கொடுத்து 2-0 என தொடரை கைப்பற்றி 27 வருடங்களுக்கு பிறகு சாதனை படைத்துள்ளது.

ind vs sl

1997-ம் ஆண்டிற்கு பிறகு இருதரப்பு தொடரில் இந்தியாவை முதல்முறையாக வீழ்த்தி இலங்கை அணி தரமான கம்பேக் கொடுத்துள்ளது. டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரில் மோசமான சரிவை கண்டிருப்பது இந்திய ரசிகர்களை ஏமாற்றம் அடையசெய்துள்ளது.

* ODI கிரிக்கெட்டை மறந்த அனுபவ வீரர்கள்

ஒருநாள் தொடர் முழுவதும் ரோகித் சர்மா என்ற ஒற்றை இந்திய வீரர் மட்டுமே தனியாளாக பேட்டிங்கில் போராடினார். அவரைத்தவிர அணியில் இடம்பெற்ற மூத்தவீரர்களான விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் 3 வீரர்களும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

ஸ்ரேயாஸ்

டாப் ஆர்டர்களுக்கு பிறகு மீதமிருக்கும் வீரர்கள் அனைவரும் அனுபமற்ற வீரர்கள் என்பதால் களத்தில் நிலைத்து நின்று விளையாட வேண்டிய பொறுப்பு மூத்தவீரர்களுக்கே அதிகமாக இருக்கிறது. ஆனால் அதிகம் அனுபவமில்லாத இலங்கை பவுலர்களிடம் எளிதாக விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறிய கோலி, ஸ்ரேயாஸ் மற்றும் கேஎல் ராகுல் ஏமாற்றம் அடையச்செய்தனர்.

கேஎல் ராகுல்

2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக இன்னும் 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளே இந்திய அணிக்கு மீதமிருக்கும் நிலையில், ஒருநாள் கிரிக்கெட் எப்படி ஆடவேண்டும் என்பதையே இந்திய வீரர்கள் மறந்துவிட்டனர் என்பது போல் விளையாடியுள்ளனர். ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஒரு ரன் மற்றும் இரண்டு ரன்கள் எந்தளவு முக்கியமென்பதும், ஸ்டிரைக் ரொட்டேட் எந்தளவு முக்கியமென்பதும் மூத்தவீரர்களுக்கே தெரியவில்லை. இப்படியே போனால் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் மண்ணைக்கவ்வ வேண்டிய நிலைதான் ஏற்படும்.

* உறுதிசெய்யப்படாத வீரர்கள் பொசிஷன்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை பொறுத்தவரையில் இந்திய அணி எந்த திட்டத்துடனும் சென்றதாக தெரியவில்லை, ஏதோ ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகளுக்கு எதிராக விளையாட சென்றது போல் சென்றிருந்தது களத்தில் அப்படியே வெளிப்பட்டது.

அக்சர் பட்டேல்

காரணம் இந்திய அணியின் வீரர்களின் பேட்டிங் பொசிஷன் தீர்மானிக்கப்படவில்லை என்பது வீரர்களை மாற்றி மாற்றி களமிறக்கியபோதே நன்றாக தெரிந்தது. லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக மூத்தவீரர்கள் சொதப்புகிறார்கள் என்பதற்காக இடது கை வீரர்களான ஷிவம் துபே மற்றும் அக்சர் பட்டேல் வீரர்கள் டாப் ஆர்டரில் களமிறக்கப்பட்டனர். அதேபோல் கேஎல் ராகுல் 7வது வீரராகவும் களமிறக்கப்பட்டார்.

ஷிவம் துபே

ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்பதை இந்திய அணி மறந்துவிட்டதா, எந்த வீரருக்கு எந்த இடம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை பயிற்சியாளர் மறந்துவிட்டாரா என்பது புரியவில்லை.

* டி20 கிரிக்கெட்டை பொறுத்து வீரர்கள் தேர்வு

இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போதே வீரர்கள் தேர்வு என்பது மிகப்பெரிய கேள்விகளை எழுப்பியது. ரியான் பராக் மற்றும் ரிஷப் பண்ட் ஒருநாள் அணியில் இடம்பிடித்தது, ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த சராசரி வைத்திருக்கும் சஞ்சு சாம்சனுக்கு இடம் மறுக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா மற்றும் ரவிந்திர ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை, ஒருநாள் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரிங்கு சிங் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இடமில்லை என்ற பல்வேறு குழப்பங்கள் இருந்தன.

ஹர்திக் பாண்டியா

ஆனால் ரியாக் பராக் இரண்டு விதமான அணியிலும் இடம்பிடித்தார், அதேபோல் ஹர்சித் ரானா ஒருநாள் அணியில் இடம்பிடித்தார். ஒருநாள் கிரிக்கெட்டுக்கான வீரர்கள் தேர்வு என்பது ஐபிஎல் மற்றும் டி20 கிரிக்கெட்டை பொறுத்தே இருந்தது. டி20 கிரிக்கெட் வேறு ஒருநாள் கிரிக்கெட் வேறு என்பதை இந்திய அணி நிர்வாகம் மறந்துவிட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக என்ன செய்யப்போகிறது இந்திய அணி என்ற கவலை எழுந்துள்ளது.