மும்பை இந்தியன்ஸ் ட்விட்டர்
கிரிக்கெட்

ஐபிஎல்: முதல் 5 போட்டிகள்.. மும்பை அணியிலிருந்து விலகும் 3 முக்கிய வீரர்கள்.. இதுதான் காரணமா?

2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் சீசனில் மும்பை அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள், தொடக்கப் போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

Prakash J

2024ஆம் ஆண்டுக்கான ஆடவர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. வழக்கம்போல் இந்த தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் உள்ளிட்ட 10 அணிகளே களம் காண்கின்றன.

ஹர்திக் - ரோகித்

மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் சீசனின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இது ஒருபுறமிருக்க மறுபுறம், இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணி பற்றிய செய்திகள்தான் தினந்தோறும் வைரலாகி வருகின்றன.

அதற்குக் காரணம், 2022, 2023 ஐபிஎல் சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியை டைட்டிலுக்கும், இறுதிப்போட்டிக்கும் அழைத்துச்சென்ற ஹர்திக் பாண்டியாவை, குஜராத் அணியிலிருந்து வாங்கியிருக்கும் மும்பை அணி நிர்வாகம் அதே அணிக்கும் கேப்டனாகவும் நியமித்துள்ளது.

அதாவது, மும்பை அணிக்கு 5 முறை ஐபில் கோப்பைகளை வென்றுகொடுத்த ரோகித் சர்மாவை, இந்த முறை அந்த அணிக்கு கேப்டன் ஆக்காமல் ஹர்திக் பாண்டியாவை நியமித்திருப்பதுதான் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

ரோகித் சர்மா

இதனால், ரோகித் ரசிகர்களும் அவர் ஆதரவைப் பெற்ற வீரர்களும் ரோகித்தை வேறு அணிக்கு ஆடவேண்டும் எனக் குரல் கொடுத்து வருகின்றனர். ஆக, ஐபிஎல் சீசன் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே மும்பை அணி பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்கிறது. இந்நிலையில், தற்போது அந்த அணியில் இடம்பெற்றிருக்கும் சில வீரர்களே தொடக்க போட்டிகள் சிலவற்றில் விளையாடாமல் விலகியுள்ளனர். இது அந்த அணிக்கு புது தலைவலியை உண்டாக்கி உள்ளது.

மும்பை அணி, மார்ச் 24ஆம் தேதி குஜராத்தைச் சந்திக்க இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவின் 360 வீரர் என்று அழைக்கப்படும் மும்பை அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூர்ய குமார் யாதவ் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

காயத்தால் அவதிப்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ், இன்னும் அதிலிருந்து முழுவதும் குணமடையாததால் எந்தவித உத்தரவாதமும் தர முடியாது என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐ வட்டாரத்தில் இருந்துவந்த தகவலின்படி, இந்த ஐபிஎல் சீசனின் முதல் இரண்டு போட்டிகளில் சூர்யகுமார் பங்கேற்க என்சிஏ மருத்துவக் குழு அனுமதி வழங்காது என்று கூறப்படுகிறது.

சூர்யகுமார் யாதவ்

அதுபோல், முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவும் முதல் 5 போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட்டில் விளையாடிய ரோகித் சர்மாவுக்கு முதுகில் வலி ஏற்பட்டதால் தற்போது ஓய்வில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், மும்பை அணி விளையாடும் தொடக்கப் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும், ரோகித் சர்மாவின் காயம் குணமடைந்துவிட்டதா என்பதுபற்றிய அப்டேட் எதுவும் பிசிசிஐ வெளியிடவில்லை. இந்த காயம் பெரிதாக இருக்கும்பட்சத்தில் ரோகித் சர்மா ஐபிஎல் 2024ஐ இழக்க நேரிடும். அதேநேரம், ஐபிஎல் 2024ல் விளையாடுவது குறித்து ரோகித் சர்மா குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒருவேளை காயம் காரணமாக ரோகித் சர்மா விளையாடாமல் போனால் அது மும்பை அணிக்கு பெரிய இழப்பாக இருக்கும்.

Bumrah

சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவைத் தொடர்ந்து மற்றொரு வீரரான ஜஸ்பிரித் பும்ராவும் ஓய்வு காரணமாக முதல் 4-5 போட்டிகள் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த 3 வீரர்களும் இல்லாததால் ஆரம்பகட்டத்திலேயே மும்பை அணி, சரிவைச் சந்திக்கும் எனத் தெரிகிறது. மேலும் இவர்கள் 3 பேரும் விளையாடாததும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததன் அதிருப்தி காரணமாகவே இவர்கள் விளையாடாமல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய இருவரும் ரோகித்தின் கேப்டன்ஷிப்புக்கு மறைமுக ஆதரவு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, கடந்த மார்ச் 12ஆம் தேதி அந்த அணி கூடாரத்துடன் இணைந்துள்ளார்.

இதையும் படிக்க: “நீங்கள் இந்திய குடிமக்கள்தான் என நிரூபிக்க வேண்டும்” - CAA, NRC, NPR குறித்து அச்சம் எழுவது ஏன்?