2024ஆம் ஆண்டுக்கான மகளிர் ஐபிஎல் (WPL) தொடருக்கான மினி ஏலம் இன்று நடைபெற்றது. இன்று மும்பையில் நடைபெற்ற இரண்டாவது சீசனுக்கான ஏலத்தில் 29 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அதில் 20 இந்திய வீரர்களும், 9 வெளிநாட்டு வீரர்களும் அடங்கும். இந்த மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இன்னும் இந்திய அணியில் அறிமுகமாகாத வீரர்கள் 2 கோடி மற்றும் 1.30 கோடி என அதிகவிலைக்கு போனது அனைத்து தரப்பையும் கவர்ந்துள்ளது.
அதேபோல ஆரம்பத்தில் எல்லோராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட வேதா ராமமூர்த்தி மற்றும் சமாரி அத்தப்பட்டு முதலிய வீரர்கள் ஏலத்தில் அன்சோல்டாக போனது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் கடைசியில் வேதா ராமமூர்த்தியை அடிப்படை விலையான 30 லட்சத்திற்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்தது. இதில் முதல்முறையாக மகளிர் ஐபிஎல் தொடரில் விளையாடும் விதமாக தமிழக வீராங்கனை கீர்த்தனா பாலகிருஷ்ணனை மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியுள்ளது.
2024 மகளிர் பிரீமியர் லீக் (WPL) ஏலத்தில் சுவாரசியமானதாக பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் கஷ்வீ கௌதம் உடைய ஏலம் மாறியது. ரூ.10 லட்சம் அடிப்படை விலையில் ஆரம்பித்த இவரின் ஏலம் படிப்படியாக கோடியை தாண்டி சென்றது. குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் உபி வாரியர்ஸ் அணிகள் இவரை வாங்க போட்டிப்போட்டன. இந்த ஐபிஎல்லில் அதிகப்பட்ச விலைக்கான ஏலமாக மாறிய கஷ்வீ கௌதமை முடிவில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ரூ.2 கோடிக்கு தட்டித்தூக்கியது. இன்னும் இந்திய அணியில் அறிமுகமாகாத இவருக்கு 20 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல இந்திய அணியில் இன்னும் அறிமுகமாகாத மற்றொரு இந்திய கிரிக்கெட் வீராங்கனையான கர்நாடக வீரர் விருந்தா தினேஷின் ஏலமும் கோடியை தாண்டி சென்றது. 22 வயதான விருந்தா தினேஷை UP வாரியர்ஸ் 1.3 கோடிக்கு ஏலத்தில் தட்டிச்சென்றது. விருந்தா மற்றும் காஷ்வீ இருவரும் சமீபத்தில் இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா ஏ அணிக்காக இடம்பெற்றிருந்தனர்.
2024 மகளிர் ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீராங்கனை கீர்த்தனா பாலகிருஷ்ணனை மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையான ரூ.10 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியது. கடந்த ஆண்டு மகளிர் ஐபிஎல் தொடரில் தமிழக வீராங்கனை ஹேமலதா பங்கேற்று இருந்தாலும், அவர் தற்போது ரயில்வே அணிக்காக விளையாடி வருகிறார். அந்த வகையில் முதல் முறையாக தமிழக மகளிர் கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் ஒரு வீராங்கனை, முதல்முறையாக மகளிர் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார்.
வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரையில் ஆஸ்திரேலியா வீராங்கனையான அன்னாபெல் சதர்லேண்ட் அதிகபட்ச ஏலமான ரூ. 2 கோடிக்கும், மற்றொரு ஆஸ்திரேலியா வீராங்கனை லிட்ச்ஃபீல்ட் ரூ.1 கோடிக்கும், தென்னாப்பிரிக்காவின் ஷப்னிம் இஸ்மைல் ரூ.1.20 கோடிக்கும் அதிகப்படியாக ஏலம் சென்றுள்ளனர்.