SA20 லீக் டாப் பிளேயர்ஸ்  X
கிரிக்கெட்

கிளாசன் முதல் யான்சன் வரை... SA20 தொடரின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் & பௌலர்கள்!

SA20 தொடரின் இரண்டாவது சீசனின் இறுதிப் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி. பரபரப்பாக நடந்த இத்தொடரில் டாப் 3 பேட்ஸ்மேன்கள் மற்றும் டாப் 3 பௌலர்கள் யார்?

Viyan

பேட்ஸ்மேன் #1: ரயான் ரிக்கிள்டன் - MI கேப் டவுன்

இன்னிங்ஸ்கள்: 10

ரன்கள்: 530

சராசரி: 58.88

ரயான் ரிக்கிள்டன்

முரட்டுத் தனமாக இந்த SA20 சீசனைத் தொடங்கிய ரிக்கிள்டன், முதல் 4 போட்டிகளிலுமே அரைசதம் கடந்தார். அதிலும் 3 போட்டிகளில் 80+ ஸ்கோர்கள் அடித்தார். பெரிய இன்னிங்ஸ்கள் ஆடியதோடு மட்டுமல்லாமல், வேகமாகவும் ஆடி MI கேப்டவுன் அணிக்கு அட்டகாசமான தொடக்கங்கள் கொடுத்தார். 10 இன்னிங்ஸ்களில் ஐந்தில் அரைசதங்கள் அடித்தார் அவர். அந்த ஒவ்வொரு அரைசதமும் ஒவ்வொரு அணிக்கு எதிராக அடிக்கப்பட்டது! தொடர் முழுக்கத் தடுமாறிய MICT அணியின் ஒரே நம்பிக்கையாய் இருந்தது இவர் மட்டும்தான்.

பேட்ஸ்மேன் #2: ஹெய்ன்ரிச் கிளாசன் - டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ்

இன்னிங்ஸ்கள்: 13

ரன்கள்: 447

சராசரி: 40.63

ஹெய்ன்ரிச் கிளாசன்

ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் டாப் ரன் ஸ்கோரர்களுக்கான பட்டியலில் இரண்டாவது இடம் பிடிப்பது சாதாரண விஷயமா என்ன! அட்டகாசமான ஃபார்மில் இருந்த ஹெய்ன்ரிச் கிளாசன், ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் அடித்து நொறுக்கினார். இந்தத் தொடரில் அவரது ஸ்டிரைக் ரேட் 207.90! மொத்தம் 37 சிக்ஸர்கள் விளாசினார் அவர். அதாவது ஒவ்வொரு ஆறு பந்துக்கும் ஒரு சிக்ஸர். அவரது மிரட்டலான ஆட்டம் தான் சூப்பர் ஜெயின்ட்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறக் காரணமாக இருந்தது. மிடில் ஆர்டரில் வந்து ஏற்படுத்திய தாக்கத்திற்காகவே தொடர் நாயகன் விருதும் வென்றார் கிளாசன்.

பேட்ஸ்மேன் #3: மேத்யூ பிரீட்ஸ்கி - டர்பன் சூப்பர் ஜெயின்ட்ஸ்

இன்னிங்ஸ்: 13

ரன்கள்: 416

சராசரி: 32.00

மேத்யூ பிரீட்ஸ்கி

கிளாசன் போல தடாளடி ஆட்டமெல்லாம் பிரீட்ஸ்கி ஆடிடவில்லை. தொடக்க வீரராக இறங்கி சூப்பர் ஜெயின்ட்ஸுக்கு நிலையான தொடக்கம் கொடுத்தார் அவர். 13 இன்னிங்ஸ்களில் இரண்டு முறை தான் அரைசதம் கடந்தார். இருந்தாலும் பல 30+ ஸ்கோர்கள் எடுத்து அந்த அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். ஜனவரியில் சிறப்பாக ஆடிய அவர், பிப்ரவரியில் தடுமாற்றம் கண்டுவிட்டார். கடைசி 4 போட்டிகளிலும் சேர்த்தே அவரால் 42 ரன்கள் தான் அடிக்க முடிந்தது. கொஞ்சம் சோபித்திருந்தாலும் இன்னும் சிறப்பான சீசனாக இது அவருக்கு அமைந்திருக்கும்.

பௌலர் #1: மார்கோ யான்சன் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்

இன்னிங்ஸ்: 10

விக்கெட்டுகள்: 20

எகானமி: 7.66

மார்கோ யான்சன்

நிதானமாக சீசனைத் தொடங்கிய யான்சன், கடைசி கட்டத்தில் விஸ்வரூபம் எடுத்தார். முதல் 6 போட்டிகளில் 7 விக்கெட்டுகள் தான் வீழ்த்தினார் அவர். இரு போட்டிகளில் விக்கெட் வீழ்த்தவில்லை. ஆனால், கடைசி 4 போட்டிகளில் மிரட்டலாக பந்துவீசி 13 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார். சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபயர் போட்டியில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த அணியை ஆட்டம் காண வைத்தவர், இறுதிப் போட்டியில் இன்னும் ஒரு படி மேலே சென்று 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த அட்டகாசமான செயல்பாட்டை 7.66 என்ற நல்ல எகானமியிலும் கொடுத்திருக்கிறார் யான்சன்.

பௌலர் #2: ஓட்னீல் பார்ட்மேன் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்

இன்னிங்ஸ்: 8

விக்கெட்டுகள்: 18

எகானமி: 6.95

ஓட்னீல் பார்ட்மேன்

யான்சனை விட இரண்டு போட்டிகள் குறைவாக விளையாடியதால் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் பார்ட்மேன். ஒருவேளை 10 போட்டிகளிலும் விளையாடியிருந்தால் அவரே டாப் விக்கெட் டேக்கராக இருந்திருப்பார். இந்த சீசனில் அவரது ஸ்டிரைக் ரேட் 10.16 - யான்சனை விட சிறப்பு. எகானமி 6.95 - அதுவும் யான்சனை விட குறைவு. சராசரியும் கூட யான்சனை விட நன்றாகவே வைத்திருந்தார் - 11.77. அப்படியொரு அட்டகாசமான சீசனை சன்ரைசர்ஸ் அணிக்குக் கொடுத்திருக்கிறார் பார்ட்மேன். தொடர் நாயகன் கிளாசனை கோல்டன் டக்கில் வெளியேற்றியதற்காகவே அவரைக் கொண்டாடியாகவேண்டும்.

பௌலர் #3: டேனியல் வோரல் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்

இன்னிங்ஸ்: 11

விக்கெட்டுகள்: 17

எகானமி: 7.23

டேனியல் வோரல்

இந்தப் பட்டியலில் மூன்றாவதும் சன்ரைசர்ஸ் பௌலர் தான். ஒவ்வொரு போட்டியிலும் பவர்பிளேவில் சன்ரைசர்ஸுக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார் வோரல். யான்சன் போல் மிகப் பெரிய ஸ்பெல்கள் இல்லையென்றாலும் ஒவ்வொரு போட்டியிலும் அந்த அணிக்கு விக்கெட் வீழ்த்தினார். குவாலிஃபயர் 1 தவிர்த்து, தான் விளையாடிய மற்ற 10 போட்டிகளிலுமே விக்கெட் வீழ்த்தினார் வோரல். இறுதிப் போட்டியில் கூட தன் முதல் ஸ்பெல்லை மிகச் சிறப்பாக வீச டி காக் விக்கெட்டையும் வீழ்த்தி DSG அணியை வீழ்ச்சிக்குள்ளாக்கினார்.