2024 women's t20 world cup x
கிரிக்கெட்

நாளை தொடங்குகிறது மகளிர் டி20 உலகக்கோப்பை... முதல் ஐசிசி கோப்பையை வெல்லுமா இந்தியா..? முழு விவரம்!

Rishan Vengai

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 9வது பதிப்பானது நாளை முதல் தொடங்கி நடைபெறவிருக்கிறது. அக்டோபர் 3 முதல் அக்டோபர் 20 வரை நடைபெறவிருக்கும் 2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து முதலிய 10 அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

women's t20 world cup

இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கும் பட்டியலில், குரூப் ஏ-வில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை முதலிய 5 அணிகளும், குரூப் பி-ல் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா முதலிய 5 அணிகளும் இடம்பிடித்துள்ளன.

டாப் 5 தரவரிசை பட்டியலில் இருக்கும் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஒரே பட்டியலில் இடம்பெற்றிருப்பது, இந்திய அணிக்கு சவாலாகவே இருக்கப்போகிறது. ஐபிஎல் தொடர் மூலம் இந்திய வீரர்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்துள்ளதால், இந்தியா இந்தமுறை கோப்பை வெல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எத்தனை போட்டிகள்? எங்கு நடக்கிறது?

அக்டோபர் 3 முதல் அக்டோபர் 20 வரை நடைபெறவிருக்கும் 2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், மொத்தமாக 20 லீக் போட்டிகள், 2 அரையிறுதி போட்டிகள், இறுதிப்போட்டி என 23 போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

india

ஒரு குழுவில் இருக்கும் ஒரு அணி பட்டியலில் இருக்கும் மற்ற 4 அணிகளுடன் மோதவிருக்கின்றன. குரூப்பின் முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். பின்னர் 4 அணிகளுக்கு இடையே கிராஸ் மெதடு மூலம் அரையிறுதிப்போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதிப்போட்டிக்கு அணிகள் தகுதிபெறும்.

australia

போட்டிகளானது ஐக்கிய அரபு அமீகரத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜா மைதானங்களில் நடக்கவிருக்கின்றன. இறுதிப்போட்டியானது அக்டோபர் 20ம் தேதி துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கிறது. போட்டிகள் மாலை 3.30 PM, 7.30 PM மணி நேரத்தில் நடக்கவிருக்கின்றன.

இந்தியா பங்கேற்கும் போட்டிகளின் தேதிகள்..

இந்தியா தன்னுடைய குரூப் ஏ-ல் இருக்கும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து முதலிய அணிகளை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்தியா தன்னுடைய முதல் போட்டியை அக்டோபர் 4ம் தேதி மாலை 7.30 மணிக்கு நியூசிலாந்தை எதிர்கொண்டு விளையாடுகிறது.

india

இந்தியா போட்டிகள்:

இந்தியா vs நியூசிலாந்து - அக்டோபர் 04 - 7.30 PM

இந்தியா vs பாகிஸ்தான் - அக்டோபர் 06 - 3.30 PM

இந்தியா vs இலங்கை - அக்டோபர் 09 - 7.30 PM

இந்தியா vs ஆஸ்திரேலியா - அக்டோபர் 04 - 7.30 PM

8 மகளிர் டி20 உலகக்கோப்பை வெற்றியாளர்கள் பட்டியல்..

இதுவரை நடந்திருக்கும் 8 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் 6 கோப்பைகளை ஆஸ்திரேலியாவும், ஒருமுறை இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் வென்றுள்ளன. இந்தியா ஒரேஒருமுறையாக 2020-ம் ஆண்டு இறுதிப்போட்டிவரை முன்னேறி ஆஸ்திரேலிய அணியிடம் கோப்பையை இழந்தது.

australia team

டி20 உலகக்கோப்பை வெற்றியாளர்கள்:

இங்கிலாந்து அணி - 2009

ஆஸ்திரேலியா - 2010, 2012, 2014, 2018, 2020, 2023

வெஸ்ட் இண்டீஸ் - 2016

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மற்ற அணிகளாக நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் உள்ளன.