St Lucia Kings picked up their maiden CPL trophy X
கிரிக்கெட்

முதல்முறையாக கரீபியன் பிரீமியர் லீக் பட்டம் வென்ற ’லூசியா கிங்ஸ்’.. ரோகித் போல் கொண்டாடிய டுப்ளெஸி!

2024 கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஃபாஃப் டுப்ளெஸி தலைமையிலான செயின்ட் லூசியா கிங்ஸ் அணி வென்று அசத்தியுள்ளது.

Viyan

2024 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது செயின்ட் லூசியா கிங்ஸ் அணி. இறுதிப் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அந்த அணி.

138 ரன்கள் மட்டுமே எடுத்த கயானா அமேசன் வாரியர்ஸ்..

டாஸ் வென்ற செயின்ட் லூசியா கிங்ஸ் கேப்டன் ஃபாஃப் டுப்ளெஸி பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆட்டத்தின் மூன்றாவது பந்திலேயே ஆபத்தான ரஹ்மானுல்லா குர்பாஸை டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார் கேரி பியர். ஆரம்பத்திலேயே மிகப் பெரிய விக்கெட்டை இழந்ததால் அமேசான் வாரியர்ஸின் இன்னிங்ஸ் மெதுவாகவே நகர்ந்தது. கேரி பியர், நூர் அஹமது, ராஸ்டன் சேஸ் போன்ற ஸ்பின்னர்கள் ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்தி மிகவும் சிக்கனமாகப் பந்துவீசினார்கள். மொயின் அலி, ஷிம்ரான் ஹெட்மேயர், கீமோ பால் போன்ற அதிரடி வீரர்கள் இருந்தும் அந்த அணியால் வேகமாக ரன் சேர்க்க முடியவில்லை.

மொயின் அலி 20 பந்துகள் சந்தித்து வெறும் 14 ரன்கள் தான் எடுத்தார். கீமோ பால் 22 பந்துகளில் 12 ரன்களே எடுத்து ஆட்டமிழந்தார். 16 ஓவர்கள் முடிவில் அந்த அணி வெறும் 88 ரன்களே அடித்திருந்தது. 120 ரன்களுக்குள் அந்த அணி ஆட்டமிழந்துவிடும் என்று நினைத்திருந்த நிலையில், ரொமேரியோ ஷெபர்ட், டுவைன் பிரிடோரியஸ் இருவரும் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினார்கள். அதனால் கடைசி 4 ஓவர்கள் அந்த அணி 50 ரன்கள் எடுத்தது. இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது கயானா அமேசன் வாரியர்ஸ்.

முதல்முறையாக கோப்பை வென்று சாதனை..

139 என்ற இலக்கை சேஸ் செய்த செயின்ட் லூசியா அணிக்கும் தொடக்கம் சற்று மெதுவாகவே அமைந்தது. 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் தான் எடுத்திருந்தது கிங்ஸ் அணி. அடுத்த 10 ஓவர்களில் 88 ரன்கள் தேவை என்ற நிலையில் ராஸ்டன் சேஸ், ஆரோன் ஜோன்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்கத் தொடங்கினார்கள். முதலில் அவர்களும் மெதுவாகத்தான் ஆடினார்கள். விக்கெட் வீழ்ச்சியைத் தடுப்பதே அவர்களுக்கு ஆரம்பத்தில் பிரதானமாக இருந்தது.

ஜோன்ஸ்

கடைசி 5 ஓவர்களில் கிங்ஸ் வெற்றிக்கு 66 ரன்கள் தேவைப்பட்டது. அதனால் வாரியர்ஸ் வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால் 16வது ஓவரில் ஆட்டம் அப்படியே மாறத் தொடங்கியது. மொயின் அலி வீசிய 16வது ஓவரில் ஜோன்ஸ், சேஸ் இருவருமே பௌண்டரிகள் விளாசினார்கள். அந்த ஓவரில் இருவரும் இணைந்து 3 சிக்ஸர்கள், 2 ஃபோர்கள் உள்பட மொத்தம் 27 ரன்கள் எடுக்கப்பட்டன. ஆனால் அவர்கள் அதோடு நிற்கவில்லை.

ஜோன்ஸ் - சேஸ்

பிரிடோரியஸ் வீழ்த்திய அடுத்த ஓவரிலும் இருவரும் அதிரடி காட்டி 20 ரன்கள் எடுத்தனர். அந்த 2 ஓவர்களில் ஆட்டம் ஒட்டுமொத்தமாக மாறியது. அதன்பிறகு தேவைப்பட்ட 19 ரன்களை இருவரும் அடுத்த 8 பந்துகளிலேயே ஆட்டத்தை முடித்துவைத்தனர். 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக கரீபியர் பிரீமியர் லீக் சாம்பியனாக மகுடம் சூடியது செயின்ட் லூசியா கிங்ஸ்.

22 பந்துகளில் 39 ரன்கள் விளாசியதோடு, 1 விக்கெட்டும் வீழ்த்திய ராஸ்டன் சேஸ் ஆட்ட நாயகன் விருது வென்றார். இந்தத் தொடரில் மொத்தம் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி கிங்ஸ் சாம்பியன் பட்டம் வெல்ல முக்கியக் காரணமாக விளங்கிய ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர் நூர் அஹமது தொடர் நாயகன் விருது வென்றார்.

ரோகித் போல் செலப்ரேசன் செய்த டுப்ளெஸி..

2024 கரீபியர் பிரீமியர் லீக் டாப் ரன்ஸ்கோரர்கள்:

1. நிகோலஸ் பூரண் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - 504 ரன்கள்

2. குவின்டன் டி காக் - பார்படாஸ் ராயல்ஸ் - 453 ரன்கள்

3. ஜான்சன் சார்ல்ஸ் - செயின்ட் லூசியா கிங்ஸ் - 452 ரன்கள்

2024 கரீபியர் பிரீமியர் லீக் டாப் விக்கெட் டேக்கர்கள்:

1. நூர் அஹமது - செயின்ட் லூசியா கிங்ஸ் - 22 விக்கெட்டுகள்

2. பார்படாஸ் ராயல்ஸ் - பார்படாஸ் ராயல்ஸ் - 17 விக்கெட்டுகள்

3. குடகேஷ் மோட்டி - கயானா அமேசான் வாரியர்ஸ் - 17 விக்கெட்டுகள்