2023 Cricket world cup PTI
கிரிக்கெட்

உலகக் கோப்பை 2023: 21 போட்டிகளின் முடிவில் நாம் கற்றுக்கொண்ட 4 பாடங்கள்!

Viyan

இங்கிலாந்தின் உலகக் கோப்பை முடிந்துவிட்டது

Jos Buttler

நடப்பு சாம்பியனாய் கம்பீரமாக இந்த உலகக் கோப்பைக்குள் நுழைந்த இங்கிலாந்து அணி அடிமேல் அடி வாங்கிக்கொண்டிருக்கிறது. முதல் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் அடி. யாரும் எதிர்பாராத வகையில் ஆப்கானிஸ்தானிடம் அடி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 229 ரன்கள் வித்தியாசத்தில் பேரடி. இப்படி 4 போட்டிகளில் 3 தோல்விகள் சந்தித்திருக்கும் இங்கிலாந்து உளவியல் ரீதியாகவும் முற்றிலும் நொறுங்கிக் கிடக்கிறது. 2019 உலகக் கோப்பையில் அவர்களுக்குக் கைகொடுத்த பந்துவீச்சு இம்முறை ஒட்டுமொத்தமாக கைவிட்டுவிட்டது. போதாதற்கு இந்திய ஆடுகளங்களில் ஒரேயொரு முழு நேர ஸ்பின்னரோரு களமிறங்கிய அந்த அணியின் முடிவும் அவர்களுக்குத் தலைவலியாக அமைந்திருக்கிறது. பௌலிங்கின் சொதப்பல், பேட்டிங்கிலும் பிரதிபலிக்க, ஒட்டுமொத்த அணியும் தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஸ்குவாடில் இருந்த 15 பேரையும் பயன்படுத்திவிட்ட அணி, இதற்கு மேல் எழுச்சி பெற்று மீண்டு வருவது மிகவும் கடினம் தான். ஏனெனில், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் என இதற்கு மேல் இன்னும் பெரிய தலைவலிகள் அந்த அணிக்குக் காத்துக்கொண்டிருக்கின்றன.

இந்தியா மீண்டும் குரூப் சுற்றில் நம்பர் 1 இடம் பிடிக்கும்

Virat Kohli | Rahul

5 போட்டிகளில் ஐந்தையும் வென்று இந்த உலகக் கோப்பையை அமோகமாக தொடங்கியிருக்கிறது மென் இன் புளூ. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகளையும் பந்தாடியிருக்கிறது இந்தியா. அதிலும் அவ்விரு அணிகளும் 200 ரன்களைக் கூடத் தொடவில்லை. இந்திய பௌலிங் அந்த அளவுக்கு அசத்தலாக இருக்கிறது. பேட்டிங்கிலும் சொல்லவே தேவையில்லை. ரோஹித், கோலி, ராகுல் என அனைவரும் அசத்தல் ஃபார்மில் இருக்கிறார்கள். ஹர்திக்கின் காயம் மட்டுமே இப்போதைக்கு ஒரு உறுத்தல். இருந்தாலும் மற்ற அணிகளின் செயல்பாடுகளைப் பார்த்தால் நிச்சயம் இந்தியாவுக்குப் போட்டி இருக்கப்போவதில்லை. நியூசிலாந்து அணி 8 புள்ளிகளோடு இந்தியாவுக்கு மிக நெருக்கமாக இருக்கலாம். ஆனால் ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம் என எளிதான போட்டிகளையெல்லாம் அந்த அணி ஆடி முடித்துவிட்டது. அடுத்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை சந்திக்கவேண்டியிருக்கும். அதனால் நிச்சயம் கடந்த உலகக் கோப்பை போலவே இம்முறையும் இந்தியா குரூப் பிரிவில் முதலிடம் பிடிக்கும்.

தென்னாப்பிரிக்காவை யாரும் முதலில் பேட்டிங் செய்ய விடக்கூடாது

Quinton de Kock

இந்த உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்க அனுகம் விதம் மிரட்டலாக இருக்கிறது. வெறித்தனமான பேட்டிங்கை வைத்தே போட்டிகளை வென்றுகொண்டிருக்கிறது அந்த அணி. இதுவரை இந்த உலகக் கோப்பையின் 4 போட்டிகளில் 1345 ரன்கள் விளாசியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. அதுவும் 6.97 என பிரம்மாண்ட ரன்ரேட்டில்! டி காக், வேன் டெர் டுசன், மார்க்ரம், கிளாசன் என அந்த அணியின் 4 பேட்ஸ்மேன்கள் சதமடித்துவிட்டனர். யான்சன் அடிக்கும் அடியைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்துவிட்டால் அந்த அணியைக் கட்டுப்படுத்துவது இயலாத காரியமாக மாறிவிடுகிறது. அந்த அணி மூன்று போட்டிகளிலும் முதலில் பேட் செய்து தான் வென்றிருக்கிறது. அந்த நெதர்லாந்துக்கு எதிரான ஒரேயொரு அதிர்ச்சித் தோல்வியும் சேஸ் செய்யும்போது வந்தது தான். முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோர் அடித்துவிட்டால், அது கொடுக்கும் நெருக்கடியாலேயே எதிரணிகள் ஸ்தம்பித்துவிடுகின்றன. அதனால் தென்னாப்பிரிக்காவின் சுமார் பந்துவீச்சும் சூப்பராகத் தெரிந்துவிடுகிறது. இதற்கு மேல் அவர்களோடு ஆடும் அணிகள் தாங்கள் முதலில் பேட் செய்தால் தான் இவர்களின் புயல்வேக ஆட்டத்திலிருந்து தப்பிக்க முடியும்.

பாகிஸ்தான் அணிக்கு கேப்டன்சியில் மாற்றம் தேவை

Babar azam

ஸ்டார் வீரர்கள் சிறந்த கேப்டனாக இருக்கமாட்டார்கள் என்பதை கிரிக்கெட் உலகம் பல முறை நிரூபித்திருக்கிறது. கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் கூட அதற்கு ஒரு உதாரணம் எனலாம். இருந்தாலும் பல அணிகள் தங்கள் அணியின் சூப்பர் ஸ்டார் பிளேயர்களை கேப்டனாக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றன. பாகிஸ்தான் அப்படியொரு அணி. விளைவு, பாபர் ஆசம் அந்த அணிக்குக் கேப்டனாக இருக்கிறார். ஆனால் என்ன செய்வதென்றே தெரியாமல் தவிக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு இந்த உலகக் கோப்பை சரியாகத் தொடங்கவில்லை தான். அவர்கள் தடுமாறும்போதெல்லாம் போட்டியைப் பார்த்தால் நன்றாகத் தெரியும், விக்கெட் கீப்பர் ரிஸ்வானையே காட்டுவார்கள். அவர்தான் ஃபீல்டர்களை மாற்றுவது, பௌலர்களைத் திட்டுவது, வியூகம் வகுப்பது என அனைத்தும் செய்துகொண்டிருப்பார். ஓவர்களுக்கு நடுவில் huddle-ல் பேசுவது கூட அவராகத்தான் இருக்கும். பாபர் ஆசமால் ஒரு கேப்டனாக அந்த அணியில் எந்தத் தாக்கமும் செய்ய முடியவில்லை. சொல்லப்போனால் ஒரு பேட்ஸ்மேனாகவும் அவர் இந்த உலகக் கோப்பையில் ஜொலிக்கவில்லை. 4 போட்டிகளில் 83 ரன்கள் தான் அடித்திருக்கிறார். பெரிய போட்டிகளில் ஒட்டுமொத்தமாக ஐடியா இல்லாமல் தவிப்பவரிடமிருந்து கேப்டன்சி பொறுப்பை எடுத்தால், பேட்டிங்காவது கைகொடுக்கலாம்!