Team India BCCI
கிரிக்கெட்

கோலி, ஷமி, ...? இந்த உலகக் கோப்பையின் சிறந்த அணியில் எத்தனை இந்தியர்கள்?

வழக்கமாக ஒரு உலகக் கோப்பை முடிந்தால், அதன் சிறந்த லெவன் என்ன என எல்லோருமே விவாதிக்கத் தொடங்குவோம். இது நம்முடைய சிறந்த உலகக் கோப்பை லெவன்.

Viyan

2023 உலகக் கோப்பை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்று ஆறாவது முறையாக மகுடம் சூடிவிட்டது. வழக்கமாக ஒரு உலகக் கோப்பை முடிந்தால், அதன் சிறந்த லெவன் என்ன என எல்லோருமே விவாதிக்கத் தொடங்குவோம்.

World Cup 2023 Finals

இது நம்முடைய சிறந்த உலகக் கோப்பை லெவன். பெரும்பாலானவர்கள் செய்வதைப் போல், சிறந்த வீரர்களையெல்லாம் எடுத்து வைத்து அவர்களை வேறு வேறு பொசிஷனில் வைக்காமல், அந்தந்த பொசிஷனில் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் இந்த அணி தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் பல வீரர்கள் இடம்பெறாமல் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கலாம்.

1) ரோஹித் ஷர்மா, இந்தியா

11 போட்டிகளில் 597 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார் ரோஹித். கடினமான ஆடுகளங்களில் கூட இந்தியாவுக்கு அதிரடியான தொடக்கங்கள் கொடுத்து மற்ற பேட்ஸ்மேன்களின் வேலையையும் நன்கு எளிதாக்கினார்.

Rohit Sharma

125 ஸ்டிரைக் ரேட்டில் 31 சிக்ஸர்கள் விளாசிய ரோஹித், தன் விக்கெட்டைப் பற்றிப் பெரிதும் கவலைப்படாமல் ஆடினார். அதனால் 5 முறை நாற்பதுகளில் ஆட்டமிழக்க நேரிட்டது. பேட்டிங் மட்டுமல்லாமல் கேப்டன்சியிலும் சிறப்பாக செயல்பட்ட ஹிட்மேன் தான் இந்த லெவனுக்கும் கேப்டன்.

2) ரச்சின் ரவீந்திரா, நியூசிலாந்து

டி காக், வார்னர் போன்ற சீனியர்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் அவர்களுக்கு நிகரான செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார் இந்த இளம் நியூசிலாந்து வீரர். மற்ற இருவரும் பெரிய தலா நான்கு 50+ ஸ்கோர்களே எடுத்திருக்க, ரவீந்திரா ஐந்து முறை 50 ரன்களைக் கடந்திருக்கிறார். அவர் ஓப்பனர் இல்லையே என சொல்லலாம்.

ரச்சின் ரவீந்திரா

பாகிஸ்தானுக்கு எதிரான சதம் அங்கு தான் வந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் எட்டாவது பந்துக்கே களமிறங்கி சதமடித்தார். 10 போட்டிகளில் 2 சதங்கள், 3 அரைசதங்கள் உள்பட 578 ரன்கள் விளாசிய அவர், வில்லியம்சன் இல்லாதபோதும் அணிக்கு நம்பிக்கையாக விளங்கினார். அதுபோக, பந்துவீசியும் 5 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார். அந்த அடிப்படையில் டி காக், வார்னரை பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடம் பிடிக்கிறார்.

3) விராட் கோலி, இந்தியா

11 போட்டிகளில், ஒன்பது 50+ ஸ்கோர்கள், 3 சதங்கள், 765 ரன்கள்... இவரை எப்படி எடுக்காமல் இருக்க முடியும்.

விராட் கோலி

ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் அடித்து சச்சின் சாதனையை முறியடித்தவர், ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த சச்சினின் சாதனையையும் உடைத்திருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் ரன் மழை பொழிந்த இந்த மெஷினை எப்படி தவிர்க்க முடியும்!

4) டேரில் மிட்செல், நியூசிலாந்து

ஷ்ரேயாஸ் ஐயர், எய்டன் மார்க்ரம் ஆகியோர் இந்த இடத்துக்குப் போட்டியிடலாம். ஆனால் ரன்கள் (552), சராசரி இரண்டிலுமே அவர்களை விட டாப்பில் இருப்பது மிட்செல்தான். சொல்லப்போனால் அவர்களை விட குறைவான இன்னிங்ஸே (9) ஆடியிருக்கிறார் இவர்.

டேரில் மிட்செல்

ஸ்டிரைக் ரேட்டும் 110 என சிறப்பாகவே இருக்கிறது. கடினமான தருணங்களில் அணிக்கு தூணாக இருந்ததற்காக, இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளிலுமே அசத்தலான இரு சதங்கள் அடித்ததற்காகவே இவரை இந்த அணியில் சேர்க்கவேண்டும்.

5) கே.எல்.ராகுல், இந்தியா

தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் மாஸாக பதில் சொல்லியிருக்கிறார் ராகுல். முதல் போட்டியில் தொடங்கி, கடைசி போட்டி வரை அணிக்குத் தேவையான நேரத்தில் எல்லாம் நல்ல இன்னிங்ஸ்கள் ஆடியிருக்கிறார்.

கே.எல்.ராகுல்

சுமார் 75 என்ற மகத்தான சராசரியில் 452 ரன்கள் குவித்திருக்கும் ராகுல், விக்கெட் கீப்பிங்கிலும் பட்டையைக் கிளப்பினார். 17 விக்கெட்டுகளுக்குக் காரணமாக இருந்து அதிக டிஸ்மிசல்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ராகுல், DRS எடுப்பதில் ஆற்றிய பங்கு அளப்பரியது!

6) அஸ்மதுல்லா ஓமர்சாய், ஆப்கானிஸ்தான்

70 சராசரியில் 3 அரைசதங்களோடு 353 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தானின் மிகச் சிறந்த உலகக் கோப்பை செயல்பாட்டுக்கு பெரும் பங்காற்றினார் ஓமர்சாய். டாப் ஆர்டரையே நம்பியிருந்த அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் தூணாக விளங்கினார்.

அஸ்மதுல்லா ஓமர்சாய்

பந்துவீச்சிலும் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய அவருக்கு இப்போதுதான் 23 வயது ஆகிறது. மேக்ஸ்வெல் எங்கே என்று கேட்கலாம். ஆனால், அவர் அடித்த 398 ரன்களில் 307 ரன்கள் ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான 2 போட்டிகளிலேயே வந்தவை. மற்ற போட்டிகளில் அவர் அவ்வளவு சிறப்பாக ஜொலித்துவிடவில்லை. அதனால் ஓமர்சாய் தான் நமது சாய்ஸ்.

7) ரவீந்திர ஜடேஜா, இந்தியா

மிடில் ஓவர்களில் மிகச் சிறப்பாகப் பந்துவீசி எதிரணிகளை திக்குமுக்காடவைத்தார் ஜடேஜா. வெறும் 4.25 என்ற எகானமியில் பந்துவீசிய அவர், 16 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

ரவீந்திர ஜடேஜா

மிடில் ஓவர்களில் அவர் கொடுத்த நெருக்கடியால் பெரும்பாலான அணிகள் நல்ல ஸ்கோரே எடுக்க முடியாமல் தடுமாறின. பேட்டிங்கில் 5 இன்னிங்ஸ் மட்டுமே ஆடியிருந்த ஜடேஜா, 40 என்ற சராசரியில் 120 ரன்கள் எடுத்தார்.

8) மார்கோ யான்சன், தென்னாப்பிரிக்கா

பவர்பிளேவில் பக்காவாகப் பந்துவீசி தென்னாப்பிரிக்க அணிகளுக்கு விக்கெட்டுகள் எடுத்துக்கொடுத்தார் யான்சன். 9 போட்டிகளில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர்.

Marco Jansen

தில்ஷன் மதுஷன்காவும் சிறப்பாக விளையாடி விக்கெட் வேட்டை நடத்தியிருந்தாலும், யான்சனின் பேட்டிங் திறமை அவருக்கு இந்த இடத்தைப் பெற்றுக்கொடுக்கிறது. ஒரு அதிரடி அரைசதம் உள்பட 110 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 157 ரன்கள் எடுத்தார் யான்சன்.

9) முகமது ஷமி, இந்தியா

ஆரம்பத்தில் பிளேயிங் லெவனில் வாய்ப்பே கிடைக்காமல் இருந்தவர், அந்த வாய்ப்பு கிடைத்ததும் அதை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். வெறும் ஏழே போட்டிகளில் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்த உலகக் கோப்பையின் டாப் விக்கெட் டேக்கராக உருவெடுத்தார் ஷமி.

முகமது ஷமி

மூன்று போட்டிகளில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய ஷமி, உலகக் கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பௌலர் என்ற சாதனையும் படைத்தார். அதிலும் அரையிறுதி போன்ற ஒரு மிகப் பெரிய போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தியதெல்லாம் அசுரத்தனமான பந்துவீச்சு.

10) ஆடம் ஜாம்பா, ஆஸ்திரேலியா

ஒரேயொரு முழுநேர ஸ்பின்னரோடு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கையை தனியாகவே கையாண்டார் ஜாம்பார். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Adam Zampa

மொத்தம் 23 விக்கெட்டுகள் வீழ்த்தி, டாப் விக்கெட் டேக்கர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறார் ஜாம்பா. இந்த பந்துவீச்சு மட்டுமல்ல, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் அடித்த 29 ரன்களும் அவருடைய மிகமுக்கிய பங்களிப்புகளுள் ஒன்று.

11) ஜஸ்ப்ரித் பும்ரா, இந்தியா

இந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் பும்ரா தான். ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவுக்கு அதிஅட்டகாசமான தொடக்கங்கள் கொடுத்தார் பும்ரா.

ஜஸ்ப்ரித் பும்ரா

வெறும் 4.06 என்ற எகானமியில், 18.65 என்ற சராசரியில் 20 விக்கெட்டுகள் அள்ளினார் அவர். வீசிய 91.5 ஓவர்களில் ஒன்பது மெய்டன்கள்! பவர்பிளேவில் மட்டுமல்லாமல் மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என எப்போதெல்லாம் விக்கெட்டுகள் தேவையோ அப்போதெல்லாம் வந்து அதை நிறைவு செய்தார் பும்ரா.