ashwin web
கிரிக்கெட்

“தோனி எனக்கு செய்த செயலுக்காக என் வாழ்நாள்..” அஸ்வினுக்கு 1 கோடி பரிசு! பாராட்டிய முன்.வீரர்கள்!

100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றியதற்காக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் அஸ்வினுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அவருக்கு பரிசாக ஒரு கோடியை முன்னாள் பிசிசிஐ தலைவர் என் சீனிவாசன் வழங்கினார்.

Rishan Vengai

இந்தியாவின் சுழல் மன்னனான தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின், சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 100வது டெஸ்ட் போட்டி என்ற பெரிய மைல்கல்லை எட்டினார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணிக்காக 500 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய அஸ்வின், அதிகமுறை 5 விக்கெட்டுகள் மற்றும் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்து முதல் இந்திய வீரராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

ravichandran ashwin

இந்நிலையில் 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற இமாலய சாதனைகளை இந்திய கிரிக்கெட்டுக்காக புரிந்ததற்காக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் அஸ்வினுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு கோடி பரிசு காசோலையை வழங்கிய முன்னாள் பிசிசிஐ தலைவர்!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில், தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே ஆகியோர் கலந்துகொண்டு பாராட்டினர்.

விழாவில் சிறப்பு தருணமாக முன்னாள் பிசிசிஐ தலைவரான என் சீனிவாசன், 100 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற சாதனைக்காக ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 1 கோடி காசோலை வழங்கி கௌரவித்தார்.

இன்னும் கொஞ்ச காலம் பேட்ஸ்மேனை துன்புறுத்துங்கள்!

அதன்பிறகு அஸ்வினை பாராட்டி பேசிய ராகுல் டிராவிட், “அஸ்வின் இன்னும் அவருடைய திறமையை முடித்துவிடவில்லை என்று நான் நம்புகிறேன். அவர் தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் புதுமையின் மூலம் சுழல் பந்துவீச்சை சிறந்த நிலைக்கு நகர்த்தியுள்ளார். அதுபோன்ற பாரம்பரியத்தை அவர் தன்னுள்ளே வைத்திருந்தார், அடுத்தடுத்து என்னவென்று கற்றுக்கொண்டே இருப்பார். ஒரு பயிற்சியாளராக உங்களுக்கு சவால் விடக்கூடியவர் அஸ்வின். அனைத்தையும் சிறப்பாகச் செய்து, அனைத்து இளைய தலைமுறைக்கும் சுழற்பந்து வீச்சுக்கான பெரிய ஊக்கமாக இருக்கிறார். அற்புதம்!” என்று டிராவிட் பாராட்டினார்.

ashwin

தொடர்ந்து பாராட்டிய ரவி சாஸ்திரி, “ஒப்பிட முடியாத பிரமாண்டமான சாதனைகள். இது வெறும் ஜோக் அல்ல. உங்களுக்கு என்னுடைய சிறந்த வாழ்த்துக்கள். உங்களிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் மீதம் இருப்பதாக நான் நம்புகிறேன். ஸ்பின்னர்கள் ஒவ்வொரு வயதிலும் முதிர்ச்சியடைகிறார்கள். உங்களை நினைத்து மிகவும் பெருமையாக உணர்கிறேன். இன்னும் இரண்டு வருடங்களுக்காவது பேட்ஸ்மேன்களைத் துன்புறுத்தி மகிழுங்கள்” என்று கலகலப்பாக பாராட்டினார் சாஸ்திரி.

anil kumble

இந்தியாவின் மூத்த சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அனில் கும்ப்ளே பேசுகையில், ”எனது புத்தகத்தில் அஸ்வின் இந்திய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய சிறந்தவர்களில் ஒருவர். அவருடைய எண்கள் சிறப்பாக இருந்துள்ளன. அவர் ஒருபோதும் அவருக்காகவும், இந்திய அணியின் வெற்றிக்காகவும் போதுமென்று நினைத்ததேயில்லை. அவர் தன்னுடைய 100வது போட்டியை எப்போதோ விளையாடியிருக்க வேண்டும். ஆனால் ஏன் வெளிநாட்டு பயணங்களின் போது அவருடைய பெயர் இடம்பெறுவதில்லை என எனக்கு புரியவில்லை” என்று புகழந்த கும்ப்ளே, அஸ்வின் டிரஸ்ஸிங் அறையில் எப்போதும் ஒரு கேப்டனை போன்று அணிக்காக முழுவதையும் கொடுத்துள்ளார் என்று பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின் கூறுகையில், '2008-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை சேர்த்தது. அதற்கு முக்கிய காரணம் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். அவர்தான், சீனிவாசனுக்கு என்னை சிபாரிசு செய்தார். அந்த நாள் எனது வாழ்க்கையின் திருப்பு முனையாக அமைந்தது.

தோனி எனக்கு பல வாய்ப்புகளை வழங்கி என்னை எல்லா வழியிலும் ஊக்கப்படுத்தினார். புதிய பந்தில் கெயிலுக்கு என்னை பந்துவீச அழைத்தார். நான் தோனிக்கு வாழ்நாள் முழுக்க நன்றி கடன்பட்டுள்ளேன்.

இந்த நிலைக்கு வருவேன் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. எனது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி' என்று கூறினார்.