விளையாட்டு

‘ஒலிம்பிக் 2028’ போட்டிகளில் இடம்பெறுகிறது கிரிக்கெட்? 

webteam

2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் மைக் கேட்டிங் தெரிவித்துள்ளார். 

உலக கிரிக்கெட் அமைப்புகளில் மிகவும் பெரிய அமைப்பான இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் (பிசிசிஐ) அண்மையில் தேசிய ஊக்குமருத்து தடை அமைப்பின் விதிமுறைகளுக்குள் வந்தது. இது கிரிக்கெட் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. ஏனென்றால் ஒரு விளையாட்டு ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெற வேண்டும் என்றால் அந்த விளையாட்டு தொடர்பாக உள்ள அமைப்புகள் அனைத்தும் உலக ஊக்கமருத்து தடை அமைப்பின் விதிகளுக்குள் வரவேண்டும். 

இந்நிலையில் கிரிக்கெட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்ப்பது தொடர்பாக எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் மைக் கேட்டிங் ஐசிசியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து அவர், “நாங்கள் கிரிக்கெட் விளையாட்டை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கும்படி ஐசிசியுடன் கேட்டுக்கொண்டுள்ளோம். இதற்கு ஐசிசியின் புதிய செயல் அதிகாரி மனு சாஹனி இந்த விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் உள்ளது எனத் தெரிவித்தார். மேலும் வரும் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கப்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக அவர் கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.