விளையாட்டு

"போட்டிக்கு முந்தைய இரவுகளில் என்னால் தூங்க முடிந்ததில்லை" - மனம் திறந்த டெண்டுல்கர்

"போட்டிக்கு முந்தைய இரவுகளில் என்னால் தூங்க முடிந்ததில்லை" - மனம் திறந்த டெண்டுல்கர்

jagadeesh

ஏறக்குறைய 10 முதல் 12 ஆண்டுகள் போட்டியின் முந்தைய இரவுகளில் என்னால் சரியாக தூங்க முடிந்ததில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

"மும்பை டைம்ஸ்" நாளிதழுக்கு பேட்டியளித்த சச்சின் டெண்டுல்கர் "என் கிரிக்கெட் வாழ்க்கையின் 10 முதல் 12 ஆண்டுகள் ஒவ்வொரு போட்டிக்கும் முந்தைய இரவுகளில் என்னால் சரியாக தூங்க முடிந்ததில்லை. அப்படியே தூங்கினாலும் திடீரென விழித்துக்கொள்வேன். என் மூளையில் போட்டி குறித்த எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். படுக்கையில் புரண்டுப்படுத்தாலும் தூக்கம் சரியாக வராது. ஒரு பதற்றம் இருக்கும். பின்பு போட்டிக்கு முன்பாக பதற்றமடைவதால் பயனில்லை, மாறாக அதற்கு ஏற்ப நாம் தயாராக வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டேன்" என்றார் அவர்.

மேலும் பேசிய அவர் "பின்பு அதுபோன்ற நாள்களில் டிவி பார்ப்பது, படிப்பது அல்லது வீடியோ கேம் விளையாடுவதை வழக்கமாக்கி கொண்டேன். அதன்பின்பு போட்டியன்று சிறப்பாக விளையாடினேன். விளையாடுவது வெறும் உடல் சார்ந்தது மட்டுமல்ல மனம் சார்ந்ததும் கூட. அதனால் போட்டியன்று நிச்சயம் நான் பதற்றமாகக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதற்கு தூக்கமும் மிக அவசியம். பின்பு நான் என்னைப் பற்றி நன்றாக புரிந்துக்கொண்டேன். அதன் மூலம் பல்வேறு பிரச்னைகளை நானே சாமர்த்தியமாக அணுகி தீர்த்துக்கொண்டேன்" என்றார் சச்சின் டெண்டுல்கர்.

48 வயதாகும் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்காக 200 டெஸ்ட் போட்டிகள் விளையாடியவர். உலகிலேயே அதிக சதம், அதிக ரன்கள் எடுத்தவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டின் அவர் செய்த பல சாதனைகள் இன்னும் முறியடிக்கப்படாமலேயே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.