விளையாட்டு

"வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் குறித்து இப்போது சொல்ல முடியாது" - பிசிசிஐ

"வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் குறித்து இப்போது சொல்ல முடியாது" - பிசிசிஐ

jagadeesh

இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்குச் சென்று சுற்றுப் பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பது குறித்து இப்போது ஏதும் சொல்ல முடியாது என்று பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகளும் அடுத்தாண்டு ஒத்திவைக்கப்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இந்நிலையில் ஜூன், ஜூலை மாதங்களில் இந்தியா இலங்கைக்குச் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதாக இருந்தது. போட்டித் தொடரை ரத்து செய்ய வேண்டுமென இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயிடம் கேட்டுக் கொண்டது.

இது குறித்து பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், "இந்தியன் எக்ஸ்பிரஸ்" ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் "பிசிசிஐயால் இப்போதுள்ள சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் உதவ நினைக்கின்றோம். ஐசிசி நடத்தும் போட்டித் தொடர்கள் எல்லாம் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒன்று. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் டி20 உலகக் கோப்பையே கேள்விக்குறியாக இருக்கும்போது, சுற்றுப் பயண தொடர் போட்டிகளில் எப்படிப் பங்கேற்பது. இவையெல்லாம் அந்தந்த நேரத்துக்குத் தகுந்தபடி முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

மேலும் தொடர்ந்த அருண் துமால் " இலங்கை உடனான சுற்றுப் பயணமும் எதிர்கால திட்டத்தின்படி இருக்கிறது. இதனிடையே தென் ஆப்பிரிக்க அணி தங்கள் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடக் கேட்டுக் கொண்டது. இப்போதைக்கு இவையெல்லாம் சாத்தியமா அல்லது சாத்தியமற்றதா என்பதைக் கூற முடியாது. சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் என்ற விசா நடைமுறைகள் என்ன என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.