விளையாட்டு

சீனாவில் கொரோனா எதிரொலி: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

சீனாவில் கொரோனா எதிரொலி: ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

ச. முத்துகிருஷ்ணன்

சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெறவிருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளின் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஷூ நகரில் செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. தற்போது சீனாவில் கொரோனா பரவல் சற்று அதிகமாக இருப்பதால், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது.

சீனா இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடிந்த நிலையிலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடுமையான கோவிட்-19 நெறிமுறைகளை பின்பற்றி பிப்ரவரி 2022 இல் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.போட்டிக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜகார்த்தா மற்றும் பாலேம்பாங்கில் நடைபெற்றன. இந்தியா 15 தங்கப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 69 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இல்லாத நிலையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் விளையாட்டு வீரர்கள் தங்கள் கவனத்தை செலுத்தவுள்ளனர். காமன்வெல்த் போட்டிகள் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை பர்மிங்காமில் நடைபெற உள்ளது.