விளையாட்டு

"இது எளிதாக எடுத்த முடிவல்ல!" - நியூசி. இளம் வீரர் கோரி ஆண்டர்சன் ஓய்வு

"இது எளிதாக எடுத்த முடிவல்ல!" - நியூசி. இளம் வீரர் கோரி ஆண்டர்சன் ஓய்வு

jagadeesh

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரர் கோரி ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வுப்பெற இருப்பதாக அறிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 36 பந்துகளில் சதமடித்து உலக சாதனை நிகழ்த்தினார் நியூசிலாந்தின் கோரி ஆண்டர்சன். இதுவரை 13 டெஸ்டுகள், 49 ஒருநாள், 31 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டியில் மும்பை, டெல்லி அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். எனினும் 2018 நவம்பருக்குப் பிறகு நியூசிலாந்து அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெறவுள்ள எம்எல்சி டி20 போட்டியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார் ஆண்டர்சன். மூன்று வருட ஒப்பந்தத்துக்குச் சம்மதம் தெரிவித்துள்ளதால் 29 வயதிலேயே நியூசிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் வருங்காலத்தில் அமெரிக்க அணிக்காக, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவும் அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய கோரி ஆண்டர்சன் "இது எளிதாக எடுத்த முடிவல்ல. நான் திருமணம் செய்துகொள்ளப் போகும் மேரி மார்கரெட், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். என் முடிவில் அவருக்கு அதிகப் பங்கு உள்ளது. எனக்காக அவர் நியூசிலாந்துக்கு வந்து புதிய கலாசாரத்தில் வாழ்ந்து நிறைய தியாகம் செய்துள்ளார். அணியில் விளையாடாதபோதும் காயத்தால் அவதிப்பட்டபோதும் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

எனவே, புதிய வாய்ப்பு வருகிறபோது, அமெரிக்காவில் வாழ்வது என முடிவெடுக்கப்பட்டது. அதனால்தான் நியூசிலாந்துக்கு விளையாடுவதில் இருந்து ஓய்வு அறிவித்தேன்" என்றார் அவர்.