விளையாட்டு

'Consistency' - சிஎஸ்கே எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சவால்!

'Consistency' - சிஎஸ்கே எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய சவால்!

webteam

ரசிகர்களின் எண்ணத்தை போன்றே சென்னை அணி முழுமையாக கம்பேக் கொடுத்துவிட்டதா? பெங்களூருவிற்கு எதிரான சென்னையின் வெற்றியை முழு மகிழ்ச்சியோடு கொண்டாடலாமா? இப்படியெல்லாம் கேட்டால், கொஞ்சம் காத்திருங்கள் என்றே பதில் சொல்ல முடியும். 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனை ரொம்பவே சுமாராக தொடங்கியிருந்தது. ஆடிய முதல் 4 போட்டிகளிலுமே தோல்வியை தழுவியிருந்தது. ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை அணி இத்தனை மோசமாக ஒரு சீசனை தொடங்கியதே இல்லை. ரசிகர்களும் அணியின் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். ஒரு வழியாக கடைசியாக பெங்களூருவிற்கு எதிராக ஆடிய 5 வது போட்டியில் வென்று சென்னை அணி வெற்றிக்கணக்கை தொடங்கிவிட்டது. இந்த வெற்றி ரசிகர்களையும் குதூகலப்படுத்தியுள்ளது. சென்னை கம்பேக் கொடுத்துவிட்டதாகவும், இனி சென்னை அணிக்கு தோல்வியே இல்லை என்பதாகவும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

ரசிகர்களின் எண்ணத்தை போன்றே சென்னை அணி முழுமையாக கம்பேக் கொடுத்துவிட்டதா? பெங்களூருவிற்கு எதிரான சென்னையின் வெற்றியை முழு மகிழ்ச்சியோடு கொண்டாடலாமா? இப்படியெல்லாம் கேட்டால், கொஞ்சம் காத்திருங்கள் என்றே பதில் சொல்ல முடியும். ஏனெனில், சென்னை அணிக்கு இனிதான் முக்கியமான சவாலே காத்திருக்கிறது.

குறிப்பாக, சென்னை அணி அடுத்ததாக குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக ஆடப்போகும் ஆட்டம் அதிகம் கவனிக்கப்பட வேண்டும். நான்கு போட்டிகளில் தோற்றுவிட்டு பெங்களூருவிற்கு எதிராக சென்னை ஆடிய 5 வது போட்டியை விட ஒரு வெற்றியை பெற்றுவிட்டு சென்னை ஆடப்போகும் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டி ரொம்பவே முக்கியமானது. அந்த போட்டியின் முடிவுதான் சென்னை அணி இந்த சீசனில் முழுமையாக கம்பேக் கொடுத்துவிட்டதா எனும் கேள்விக்கான விடையை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அந்த போட்டிக்கு ஏன் அத்தனை முக்கியத்துவம்? குஜராத் டைட்டன்ஸ் 4 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்களே அதனாலா? நிச்சயமாக இல்லை. அந்தப் போட்டியின் மீதான முக்கியத்துவம் என்பது எதிராளி சார்ந்தது அல்ல. அது முழுக்க முழுக்க சென்னை அணியை சார்ந்தது. சென்னையின் சீரான பெர்ஃபார்மென்ஸை சார்ந்தது.

சீரான பெர்ஃபார்மென்ஸ் எனும் போது 2020 ஐ.பி.எல் சீசனுக்கு ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக் ஓட்டிவிட்டு வருவோம். 2020 ஐ.பி.எல் சீசன் சென்னை அணியின் வரலாற்றிலேயே ரொம்ப மோசமான சீசனாக அமைந்திருந்தது. முதன் முதலாக சென்னை ப்ளே ஆஃப்ஸுக்கு கூட தகுதிப்பெறாமல் லீக் போட்டிகளுடனேயே வெளியேறி இருந்தது. அந்த சீசனிலும் தொடக்கத்திலிருந்தே சென்னை அணி கடுமையாக சொதப்பியது.

துபாயில் நடந்த அந்த சீசனின் தொடக்கப் போட்டியில் மும்பை அணியை சென்னை வீழ்த்தியிருந்தது. சீசனை வெற்றியோடு தொடங்கியிருந்தாலும் அடுத்தடுத்து 3 போட்டிகளில் சென்னை அணி அதிர்ச்சிகரமாக தோற்றது. தோல்வி என்பதை விட மந்தமாக சென்னை ஆடிய ஆட்டம் அத்தனை ரசிகர்களையும் கவலை கொள்ள வைத்தது. மூன்று தோல்விகளுக்கு பிறகு பஞ்சாபிற்கு எதிரான ஒரு போட்டியில் சென்னை களமிறங்கியது. அந்த போட்டியில் சென்னை அணி வெறித்தனமாக ஆடியிருந்தது. 180-ஐ நெருங்கிய டார்கெட்டை சென்னை அணியின் ஓப்பனிங் பேட்டர்களான வாட்சனும் டூப்ளெஸ்சிஸுமே நின்று சேஸ் செய்து முடித்தனர். ஒரு விக்கெட்டை கூட சென்னை இழந்திருக்கவில்லை. 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி. ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். சென்னை கம்பேக் கொடுத்துவிட்டது. இனி யாரும் இந்த அணியை தொட்டுக்கூட பார்க்க முடியாது என ரசிகர்கள் குதூகலித்தனர்.

ஆனால், மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. கொல்கத்தாவிற்கு எதிரான அடுத்தப் போட்டியிலேயே சென்னை அணி மிக மோசமாக தோற்றது. பஞ்சாபிற்கு எதிராக 180 ஐ நெருங்கிய டார்கெட்டை விக்கெட்டே விடாமல் சேஸ் செய்த சென்னை, கொல்கத்தாவிற்கு எதிரான அடுத்த போட்டியிலேயே 168 டார்கெட்டை சேஸ் செய்ய முடியாமல் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த போட்டியிலிருந்து மீண்டும் தோல்விப்படலம் தொடங்கியது. சீசன் முழுவதும் ஏமாற்றமளிக்கும் தோல்விகளே அதிகமாக நிரம்பியிருந்தது.

சென்னை அணியின் பெர்ஃபார்மென்ஸ்களில் ஒரு பயங்கரமான சீரற்ற தன்மை அந்த 2020 சீசனில் வெளிப்பட்டிருந்தது. அதே விஷயம் இந்த சீசனிலும் சென்னை அணிக்கு தொடரவே செய்கிறது. கொல்கத்தாவிற்கு எதிரான முதல் போட்டியில் 131 ரன்களை மட்டுமே சென்னை பேட்டர்கள் எடுத்திருந்தனர். லக்னோவிற்கு எதிரான அடுத்த போட்டியில் 210 ரன்களை எடுத்திருந்தனர். 200+ ரன்களை எடுத்த பின் அடுத்த போட்டியிலேயே பஞ்சாபிற்கு எதிராக 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கின்றனர். அடுத்து சன்ரைசர்ஸுக்கு எதிராக 154 ரன்களை எடுத்து தோற்றிருந்தனர். பெங்களூருவிற்கு எதிராக 200+ ஸ்கோரை எடுத்து முதல் வெற்றியை பெற்றிருந்தனர். வெற்றி-தோல்வியை தாண்டி போட்டியின் முடிவுகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால் சென்னை அணியிடம் ஒரு சீரான பெர்ஃபார்மென்ஸே வெளிப்பட்டிருக்கவில்லை. பேட்டிங்கிலே இப்படித்தான். பௌலிங்கில் சொல்ல வேண்டியதே இல்லை. பெங்களூருவிற்கு எதிராகத்தான் பவர்ப்ளேயில் ஏதோ சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வீசியிருந்தனர். மற்ற போட்டிகளிலெல்லாம் சொதப்பல்தான்.

இந்த சீரற்ற தன்மையை மனதிக் வைத்துதான் சொல்கிறேன், பெங்களூருவிற்கு எதிரான சென்னையின் வெற்றி அத்தனை கொண்டாடத்தக்கதல்ல. சென்னை அணிக்கான உண்மையான சவாலும் அமிலச்சோதனையும் இனிதான் காத்திருக்கிறது. குறிப்பாக, குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான அடுத்த போட்டி. 2020 சீசனில் பஞ்சாபிற்கு எதிராக ஆதிக்கமாக ஆடிவிட்டு கொல்கத்தாவிற்கு அப்படியே பெட்டிப்பாம்பாக அடங்கியதை போன்ற ஒரு பெர்ஃபார்மென்ஸ் இந்த சீசனில் வெளிப்பட்டுவிடக்கூடாது. அதை எப்படி சென்னை வெளிக்காட்டப்போகிறது என்பதை குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான அடுத்த போட்டியே தீர்மானிக்கும். அதிலும் உத்தப்பா, துபே உட்பட பேட்டிங் யுனிட் மொத்தமாக சிறப்பாக செயல்பட்டு ஒரு நல்ல ஸ்கோரை எடுக்கும்பட்சத்தில், பௌலிங்கில் பவர்ப்ளேயில் மஹீஸ் தீக்சனா உட்பட பௌலர்கள் மீண்டும் விக்கெட்டுகளை வாரிக் குவிக்கும்பட்சத்தில் அல்லது ஒரு மிரட்டலான ஸ்பெல்லை வீசி முடிக்கும்பட்சத்தில் சென்னை அணியிடம் ஒரு சீரான தன்மை இருப்பதற்கான அறிகுறியாக அந்த போட்டி அமையும். ஒருவேளை அப்படியில்லாமல் முதல் நான்கு போட்டிகளை போன்றே சென்னை மீண்டும் சுமாராக ஆடும்பட்சத்தில் இது 2020 சீசனின் நீட்சி என்றே கூட நாம் புரிந்துக்கொள்ளலாம்.

'Consistency' இந்த ஒற்றை விஷயம், நான்கு தோல்விகளுக்கு பிறகு சென்னை ஆடிய போட்டியை விட ஒரு வெற்றிக்கு பிறகு சென்னை ஆடப்போகும் போட்டிக்கு அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தியுள்ளது. சவாலில் சென்னை சாதிக்குமா?

- உ.ஸ்ரீராம்