விளையாட்டு

ரசிகர்கள் ரன் மழையை எதிர்பார்க்கலாம் ! இன்று இந்தியா - இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி

ரசிகர்கள் ரன் மழையை எதிர்பார்க்கலாம் ! இன்று இந்தியா - இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள் நடைபெறுகின்றன. இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி இந்திய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதைத்தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நோட்டிங்காமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.

2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. எனவே, உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, இங்கிலாந்து சுற்றுப் பயணம் இந்திய வீரர்களுக்கு மிகவும் முக்கியமானது. உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியான வீரர்களும் இதில் அடையாளம் காணப்படுவார்கள். இதனால் இந்திய வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் சம பலம் வாய்ந்த அணியாகவே பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ரோகித் சர்மா, லேகேஷ் ராகுல், விராட் கோலி, பாண்ட்யா, தோனி என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். அதேபோல பந்து வீச்சில் உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், சாஹர் ஆகியோரும் ஒரளவுக்கு சிறப்பாகவே பந்து வீசுகின்றனர். இந்திய அணியின் பலமே அதன் சுழற்பந்து வீச்சாளர்கள்தான். சேஹலும், குல்தீப் யாதவவும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை தொடர்ந்து குழப்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.

கடந்த மாதம் இதே மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. மோர்கன், ஜோஸ் பட்லர், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ ஆகியோர் பிரித்து மேய்ந்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 5-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்தனர். 

ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இந்திய அணி இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் முதல் இடத்துக்கு வரும். இங்கிலாந்து தான் பங்கேற்ற கடைசி 5 ஒருநாள் ஆட்டத்தில் வெற்றிப் பெற்றுள்ளது. இந்தியா தான் கடைசியாக பங்கேற்ற 5 ஒரு நாள் போட்டிகளில் 4 இல் வெற்றிப் பெற்றுள்ளது. இரண்டுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் ரன் மழையை எதிர்பார்க்கலாம்.