விளையாட்டு

ஐபிஎல் போட்டிகளை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி?

ஐபிஎல் போட்டிகளை நேரில் காண பார்வையாளர்களுக்கு அனுமதி?

jagadeesh

ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்ள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் இந்தாண்டு திட்டமிட்டதுபோல பார்வையாளர்களின்றி ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, இடையிலேயே போட்டி தொடர் நிறுத்தப்பட்டது. நீண்ட ஆலோசனைகளுக்கு பின்பு ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள ஆட்டங்கள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. இதனையடுத்து செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் உள்ளிட்ட அணிகள் ஏற்கெனவே அமீரகம் சென்றுவிட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் கடைசி ஆட்டங்களை நேரில் காண்பதற்காக ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என செய்தி வெளியாகி இருக்கிறது. இது குறித்து பேசியுள்ள அமீரக கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் முபாஷிபர் உஸ்மானி "பிசிசிஐ மற்றும் ஐசிசியிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்றார்.

மேலும் பேசிய அவர் "அமீரத்தில் கிரிக்கெட்டை விரும்பும் பெரும் ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே ஐபிஎல் போட்டியின் போது மைதானங்களில் 60 சதவீத ரசிகர்களை அனுமதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ, ஐசிசியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்றார் உஸ்மானி.