விளையாட்டு

வண்ணமயமாக தொடங்கிய காமன்வெல்த் தொடக்க விழா நிகழ்ச்சிகள்

webteam

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் களைகட்டின. வீரர்-வீராங்கனைகள் அணிவகுப்பில் ஒலிம்பிக் பதக்க நாயகி பி.வி.சிந்து‌ இந்திய தேசியக்கொடியை ஏந்திச்சென்றார்.

கண்ணைக்கவரும் வண்ண நிகழ்ச்சிகளுடன் 21ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ் லேண்ட் மாகாணத்தின் கோல்ட்கோஸ்ட் நகரில் உள்ள கேராரா விளையாட்டரங்கில் நிகழ்ச்சிகள் அரங்கேறின. ஆஸ்திரேலியாவின் பாரம்பரியத்தை போற்றும் கலை நிகழ்ச்சிகளும், துள்ளல் இசைநிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை பரவசப்படுத்தின.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறுகிறது.11நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகளில் 70க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 4500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள பி.வி.சிந்து, சாய்னா நேவால், சுஷில் குமார், மேரிகோம், ககன் நரங் உள்ளிட்ட 227 பேர் கொண்ட இந்திய அணி பதக்க வேட்கையுடன் களம் காண்கிறது. வரும் 15 ஆம் தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் களைகட்ட உள்ளன. வீரர்-வீராங்கனைகள் அணிவகுப்பில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் நாயகி பி.வி.சிந்து தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.

இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து பெருமையை நிலைநாட்ட பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.