விளையாட்டு

காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் வீரர்களுக்கு தங்கம்

காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் வீரர்களுக்கு தங்கம்

webteam

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த புதன்கிழமை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கென்யா, மலேசியா உள்ளிட்ட 71 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6,600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. பேட்மிண்டன் கலப்பு அணிகள் பிரிவு போட்டியில் முதல்முறையாக இந்திய வீரர்கள் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர். பலம் வாய்ந்த மலேசியாவை எதிர்க் கொண்ட இந்திய அணி முதலில் கலப்பு இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா மற்றும் சத்விக் ரன்கிரெட்டி இணை வெற்றி பெற்றது. பின்னர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான கிடம்பி ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். அடுத்ததாக ஆண்கள் இரட்டையருக்கான போட்டியில் சாத்விக் - சிரக் ரெட்டி இணை தோல்வியைச் சந்தித்தது. அடுத்ததாக களமிறங்கிய இந்தியாவின் நம்பிக்கை வீராங்கனை சாய்னா நேவால் மலைபோல் புள்ளிகளை குவித்த வெற்றி பெற்றார்.

இந்த வெற்றி மூலம் 3-1 என்ற புள்ளிக்கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி பேட்மிண்டன் கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் தற்போது வரை 19 பதக்கங்களை பெற்று, பதக்கப் பட்டியலில் இந்தியா 3 வது இடத்தில் உள்ளது. அதில் 10 தங்கப் பதக்கங்களும், 4 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கமும் அடங்கும். ஆஸ்திரேலியா மொத்தமாக 106 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.