விளையாட்டு

“ஒரு நாள் நீங்கள் மாறலாம்” இந்திய கேப்டனின் உணர்ச்சிப் பேச்சு

“ஒரு நாள் நீங்கள் மாறலாம்” இந்திய கேப்டனின் உணர்ச்சிப் பேச்சு

webteam

கிரிக்கெட் என்ற வார்த்தை இந்திய விளையாட்டு ரசிகர்கள் மத்திரச் சொல் போல் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் மற்ற விளையாட்டுகளுக்கு இல்லை. கிரிக்கெட் மீது இந்திய மக்களுக்கு ஏன் இந்த மோகம் என்று தெரியவில்லை. கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும் புகழும் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில்தான் ஒரு இந்தியக் கேப்டன் நாங்கள் விளையாடும் போட்டிகளுக்கு நேரில் வந்து ஆதரவு தாருங்கள் என கோரிக்கை வைத்துள்ளார். யார் அந்த கேட்பன்? அவர்கள் என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள்?

இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரிதான் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் நடைப்பெற்ற தைபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப்போட்டியை குறைவான ரசிகர்களே நேரில் கண்டுகளித்தனர். வெறிச்சோடி காணப்பட்ட மைதானத்தில் இந்திய அணி, தனது வெற்றியை பதிவு செய்தது. சமீபத்தில் இந்தியாவில் நடைப்பெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு ரசிகர்களிடையே அமோகமான வரவேற்பு இருந்தது. 8 அணிகள் மோதிய இந்தத்தொடரில் லீக் போட்டிகளில் இருந்து இறுதிப்போட்டி வரை நடைப்பெற்ற அனைத்து போட்டிகளையும் ரசிகர்கள் நேரில் வந்து கண்டுகளித்தனர். அரங்கமே ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் சில போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. காவிரிக்காக தமிழகத்தில் நடைப்பெற்ற போராட்டத்தின் காரணமாக இந்தப்போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன. சென்னை ரசிகர்கள் ரயில் ஏறி புனே சென்று தங்களது ஆதரவுகளை தெரிவித்தனர்.

ஆனால் தேசிய கால்பந்து அணி விளையாடும் போட்டிக்கு ஆதரவு தெரிவிக்க ரசிகர்கள் இல்லை. இதே இந்தியாவில் மரடோனா, மெஸ்சி, ரொனால்டோ, நெய்மருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் உள்நாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் அவர்கள் விளையாடும் போட்டியை நேரில் காணவும் இங்கு ஆட்கள் இல்லை. இந்த வேதனையை தான் சுனில் சேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

ட்விட்டரில் சுனில் சேத்ரி பதிவிட்டுள்ள வீடியோவில், “ கால்பந்துதான் எங்கள் உலகம். நாட்டின் அனைத்து பகுதியில் இருந்தும் மும்பைக்கு வந்து எங்களை உற்சாகப்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி. இந்த வீடியோ பதிவு உங்களுக்கானது அல்ல, போட்டியை நேரில் காணாதவர்களுக்காக. இது அவர்களுக்கு நான் வைக்கும் கோரிக்கை அல்லது வேண்டுகோள் என வைத்துக்கொள்ளலாம். நீங்கள் கால்பந்து ரசிகர்களாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் மைதானம் வந்து போட்டியைக் காண இரண்டு காரணங்கள் உள்ளது. ஒன்று இது உலகத்திலே சிறந்த விளையாட்டு. மற்றொன்று நாங்கள் நாட்டுக்காக விளையாடுகிறோம். போட்டிகளை நேரில் வந்து கண்டுகளித்துவிட்டு போகும்போது, நீங்கள் வந்தபோது இருந்த மனநிலை கண்டிப்பாக இருக்காது.

ஐரோப்பாவில் நடைபெறும் கால்பந்து தொடர்களுக்கு இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் இருப்பதை பார்க்கிறேன். நாங்கள், அவர்கள் அளவுக்கு இல்லை என நீங்கள் நினைக்கலாம். ஒப்புக்கொள்கிறேன் நாங்கள் அவர்கள் அளவுக்கு இல்லை. ஏன் அவர்களுக்கு அருகில் கூட இல்லை. ஆனால் போட்டியைக் காண வரும் உங்கள் நேரத்தை வீணடிக்க மாட்டோம். கண்டிப்பாக பயனுள்ளதாக்க முடியும். 

இந்திய கால்பந்து அணியின் மீது நம்பிக்கை இழந்த உங்களுக்கு ஒரு வேண்டுகோள். எங்கள் ஆட்டத்தை மைதானத்தில் நேரில் வந்து காணுங்கள். எங்கோ ஒரு மூலையில் அமர்ந்துக் கொண்டு இணையத்தில் எங்களை விமர்சனம் செய்யாதீர்கள். மைதானத்திற்கு வாருங்கள். எங்கள் முகத்திற்கு நேராக விமர்சனம் செய்யுங்கள். சத்தம் போடுங்கள், திட்டுங்கள், யாருக்கு தெரியும், ஒரு நாள் நாங்கள் உங்களை மாற்றலாம். நீங்கள் எங்களை ஆதரிக்க ஆரம்பிக்கலாம். உங்களுக்குத் தெரியாது, நீங்கள் எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று. மும்பையில் வரும் 4, 7 மற்றும் 10ஆம் தேதி நடைபெறும் போட்டிகளை காண தயவு செய்து நேரில் வாருங்கள். உற்சாகப்படுத்துங்கள், விமர்சனம் செய்யுங்கள், வீட்டிற்கு சென்ற பிறகு போட்டி குறித்து பேசுங்கள், விவாதம் செய்யுங்கள். எங்களோடு இணைந்திருங்கள். இந்திய கால்பந்து அணிக்கு முக்கியமான காலக்கட்டம் இது. நாட்டின் எந்த நகரத்தில் போட்டிகள் நடந்தாலும் நேரில் வந்து ஆதரவு தாருங்கள்.  ‘ஜெய்ஹிந்த்’ எனத் தெரிவித்துள்ளார்.