விளையாட்டு

இந்திய அணிக்கு புது பயிற்சியாளர் எப்போது..? ராஜீவ் சுக்லா விளக்கம்

இந்திய அணிக்கு புது பயிற்சியாளர் எப்போது..? ராஜீவ் சுக்லா விளக்கம்

webteam

இலங்கை சுற்றுப் பயணத்திற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என பிசிசிஐ மூத்த அதிகாரி ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே நேற்று விலகினார். சாம்பியன்ஸ் டிராபியுடன் அவரின் பதவிக்காலம் நிறைவடைந்திருந்தாலும் அதற்கு முன்னர் இருந்தே கேப்டன் விராட் கோலிக்கும், அனில் கும்பளேவுக்கும் இடையில் விரிசல் இருந்து வந்தது. என்னுடைய கோச்சிங் ஸ்டைல் விராட் கோலிக்கு பிடிக்கவில்லை என அனில் கும்ப்ளே வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் பிரச்னை குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரியான ராஜீவ் சுக்லா கூறும்போது, "விராட் கோலிக்கும், அனில் கும்ப்ளேவுக்கும் இருந்த மனக்கசப்பை சரிசெய்ய பிசிசிஐ எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனாலும் எந்தப் பயனும் இரண்டுபேர் தரப்புகளிடம் இருந்து எங்களுக்கு கிடைக்கவில்லை" என்றார்.

அனில் கும்ப்ளேவுக்கு சிறப்பான எதிர்காலம் அமைய பிசிசிஐ வாழ்த்து தெரிவிப்பதாகவும், அடுத்த மாதம் நடைபெற உள்ள இலங்கை சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக புதிய பயிற்சியாளர் இந்திய கிரிக்கெட் அணிக்கு நியமிக்கப்படுவார் எனவும் அவர் கூறினார்.

அனில் கும்ப்ளே பயிற்சியாளராக தொடர விராட் கோலி மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறதே என அவரிடம் கேட்டபோது, "அப்படி ஏதும் இல்லை. அதுவெல்லாம் வெறும் யூகம் தான்" என்றார். அணிக் கேப்டன் என்ற முறையில் யாருக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. எல்லோரையும் நாங்கள் ஒரேமாதிரியாகத் தான் நடத்துகிறோம். சிறிய சிறிய வேறுபாடுகள் வேண்டுமானால் இருக்கலாம். அனைவரும் மனிதர்கள் தான் என்றும் ராஜீவ் சுக்லா மேலும் தெரிவித்தார்.

அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒருநாள் தொடரிலும், 1 டி-20 போட்டியிலும் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.