விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜூனியர் 19 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நேற்று நடந்து முடிந்தது. தொடக்கம் முதலே வெற்றிகளை குவித்து வந்ததுடன், பேட்டிங், பந்துவீச்சு என எல்லா நிலையிலும் வலுவாக இருந்த இந்திய அணி, பங்களாதேஷ் அணியை எளிதில் வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றுவிடும் என்றே பலரும் நினைத்தார்கள். நான்கு முறை கோப்பை வென்ற அணியும், முதல்முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்த அணியும் மோதினால் அப்படிதானே நினைக்க முடியும். ஆனால், களத்தில் நடந்ததோ வேறு. மீண்டுமொரு கோப்பையுடன் தாயகம் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு பங்களாதேஷ் வீரர்கள் அதிர்ச்சி அளித்துவிட்டார்கள்.
இந்திய அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது மிகப்பெரிய ஏமாற்றம். இந்திய அணியில் தொடக்க வீரர் யாஷஸ்வி மட்டுமே சிறப்பாக விளையாடி 88 ரன்கள் குவிக்க மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சோதித்துவிட்டனர். 177 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும் நிச்சயம் பந்துவீச்சில் இந்திய அணி அசத்தி பங்களாதேஷ் அணியை கட்டுப்படுத்திவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. சுழற்பந்து வீச்சாளர் பிஸ்னோய் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்த போது, நிச்சயம் வெற்றி இந்திய அணிக்கே என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தார்கள். ஆனால், பங்களாதேஷ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான அக்பர் அலி ஒரு தூண் போல நின்று, அந்த அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்திய அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பங்களாதேஷ் அணி வரலாற்று சாதனை படைத்தது. முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ஒரு அணி கோப்பையை கைப்பற்றியிருப்பது மிகப்பெரிய விஷயம்தான். உலகக் கோப்பை தொடர் முழுவதும் பங்களாதேஷ் அணியின் ஆட்டம் அத்தனை அசத்தலாக இருந்தது. அதுவும், வலுவான நிலையில் இருந்த இந்திய அணியை வீழ்த்தியதன் மூலம் தாங்கள் திறமையான வீரர்கள்தான் என்பதை அவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
இப்படியான ஒரு மிகப்பெரிய சாதனை செய்த பங்களாதேஷ் அணியை எல்லோரும் பாராட்டத்தானே செய்ய வேண்டும். ஆனால், அந்த அணி வீரர்களை பாராட்டுவதற்கு பதிலாக பலரும் குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கின்றனர். இதற்குக் காரணம் போட்டியை வென்ற பின்னர் பங்களாதேஷ் வீரர்கள் நடந்துகொண்ட விதம் தான்.
வெற்றிக்கான ரன்னை பங்களாதேஷ் அணி வீரர் ரகிபுல் ஹாசன் அடித்த பின்னர், சந்தோஷத்தின் உச்சத்தில் அவ்வணியின் வீரர்கள் மைதானத்திற்குள் ஓடி வந்தனர். வந்த வேகத்தில் பலர் வெற்றியின் மகிழ்ச்சியில் குரல் எழுப்ப, சிலர் இந்திய வீரர்களை சீண்டும் வகையில் அருகே சென்று கூச்சலிட்டனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத இந்திய வீரர்களும் பதிலுக்கு கோபப்பட, சற்று நேரத்தில் சர்வதேசப் போட்டி தெருச்சண்டையாக மாறும் நிலைக்கு சென்றது. அதற்குள் நடுவரும், இரு அணியின் கேப்டன்களும் சமரசத்திற்கு முயல, ஒருவழியாக மோதல் முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த விவகாரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அந்த மோதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றது. பங்களாதேஷ் வீரர்கள் நடந்துகொண்ட விதத்திற்கு கண்டனங்களும், கருத்துகளும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
கிரிக்கெட் போட்டிகளில் எதிரெதிர் அணிக்குள் மோதல்கள் வருவது வழக்கமான ஒரு செயல் தான் என்றாலும், அது கை கலப்பாக மாறும் அளவிற்கு செல்வது அரிதான விஷயம். இதுபோன்ற மோதல் இளம் வீரர்களின் போட்டிகளில் மட்டுமின்றி சீனியர்களின் போட்டிகளிலும் நிகழ்வதுண்டு. அவ்வாறு ஏற்படும் மோதல்களின் உச்சமாக பேட்டை விசிறி விடுவது, கையை நீட்டி முறைத்துக்கொள்வது, கோபத்தில் முகத்திற்கு நேராக பந்தை வீசுவது, திட்டிக்கொள்வது இவ்வாறு தான் இருக்கும்.
ஆனால் நேற்றைய போட்டியில் விளையாடிய அனைவருமே 19 வயதுக்குட்பட்ட இளம் வீரர்கள் என்பதால், செய்வதறியாது ஆவேசத்தில் நடந்துகொண்டனர் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். என்னதான் இளையோர் போட்டி என்றாலும் எதற்கும் ஒரு எல்லையுண்டு எனவும், கிரிக்கெட் என்பது ஜெண்டில்மேன் கேம் என்றும் பலரும் எதிர்க்கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர். குறிப்பாக உலகக் கோப்பை போன்ற ஒரு தொடரில் விளையாடும் அணிகள் போட்டி முடிந்த உடனே, எதிர் அணியினருக்கு கை கொடுத்து மரியாதை செய்வதே வழக்கமாகவும், மாண்பாகவும் இருந்து வருகிறது. இதனை மொத்தமாக சீர்குலைக்கும் வகையில் நேற்று நடந்த சம்பவம் பலரையும் சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த இடத்தில் சற்றே ஆறுதலான விஷயம் என்னவென்றல் இரு அணியின் கேப்டன்களும் அவ்வளவு மெச்சூரிட்டியாக நடந்து கொண்டதுதான். தங்கள் அணியினர் நடந்துகொண்ட விதத்திற்காக பங்களாதேஷ் அணியின் கேப்டன் அக்பர் அலி வருத்தமே தெரிவித்துவிட்டார். தங்கள் அணியினர் அப்படி நடந்துகொண்டது தவறு என்றும், எதிர்பாராத விதமாக நடந்துவிட்டதாகவும், அதற்காக தங்கள் அணி சார்பில் தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் போட்டி முடிந்த பின்னர் கூறி தன்னுடைய பெருந்தன்மையை காட்டினார். மேலும், இளம் வீரர்கள் வெற்றியின் போது ஆவேசப்பட்டுவிட்டதாகவும், இருப்பினும் அவ்வாறு நடந்துகொண்டிருக்கக்கூடாது எனவும் அவர் வருந்தம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள யு19 இந்திய அணியின் மேலாளர் அனில் படேல், பங்களாதேஷ் வீரர்கள் போட்டி முடிந்த பின்னர் நடந்துகொண்ட மோசமான விதத்திற்கு கண்டிப்பாக ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பங்களாதேஷ் வீரர்கள் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியளிப்பதாகவும், அவர்கள் எப்படி நடந்துகொண்டனர் என்பதை ஐசிசி வீடியோ காட்சிகளை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சம்பவத்திற்காக போட்டிக்குப் பின்னர் நடுவர் தன்னிடம் வருத்தம் தெரிவித்ததாகவும், கண்டிப்பாக ஐசிசி சார்பிலிருந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததாகவும் அனில் படேல் குறிப்பிட்டுள்ளார்.