விளையாட்டு

ராய் 153 ரன் விளாசல் - இங்கிலாந்து அணி 386 ரன் குவிப்பு

ராய் 153 ரன் விளாசல் - இங்கிலாந்து அணி 386 ரன் குவிப்பு

rajakannan

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 386 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 12வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடி வருகின்றன. கார்டிப் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜோஸ் ராய், பேரிஸ்டோவ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

ராய் அதிரடியாக விளையாட, அவருக்கு ஒத்துழைப்பு அளித்து பேரிஸ்டோவ் நிதானமாக ஆடினார். இருவரது சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணியின் ரன் கிடுகிடுவென அதிகரித்தது. இவர்களது விக்கெட்டை பங்களாதேஷ் வீரர்களால் எடுக்க முடியவில்லை. ராய் 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். பேரிஸ்டோவ் 50 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

ராய் தொடர்ந்து அதிரடி காட்டினார். கொஞ்ச நேரம் அவருக்கு ஒத்துழைப்பு அளித்த ரூட் 21 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், ராய் உடன் பட்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக விளையாடினர். 92 பந்துகளில் சதம் அடித்த ராய், பின்னர் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 120 பந்துகளிலேயே 150 ரன்கள் எட்டினார். 

ராய் 153(121) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 5 சிக்ஸர், 14 பவுண்டரிகளை அவர் அடித்தார். ராய்-யை தொடர்ந்து பட்லர் அதிரடியாக விளையாடி 64(44) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்தார். மோர்கன் 35(33) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணியில் மெஹிடி ஹசன், முகமது சைபிதின் தலா இரண்டு விக்கெட் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் கடைசி நேரத்தில் வோக்ஸ் 18(8), பிளங்கெட் 27(9) ரன்கள் அடித்தனர்.