ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய நடராஜனை குதிரை வண்டியில் ஏற்றி சேலம் சின்னப்பம்பட்டி ஊர்மக்கள் அழைத்துவந்தனர்.
ஒரே தொடரில் மூன்றுவிதமான போட்டிகளிலும் அறிமுகமாகி விக்கெட்டுகளை அள்ளிய யார்க்கர் புகழ் நடராஜனை வரவேற்க அவரது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டுள்ளனர். இதனால் சின்னப்பம்பட்டியே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இன்று காலையிலிருந்தே சின்னப்பம்பட்டி பேருந்துநிலையத்தில் காத்திருந்த மக்கள் அவரை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஏற்றி அவரது வீட்டிற்கு ஊர்வலமாக கூட்டிச்சென்றனர். பட்டாசு வெடித்து, மேள வாத்தியங்கள் முழங்க அவரை அழைத்துச்சென்றனர். வெளிநாட்டிலிருந்து வரும் அவருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சாரட் வண்டியில் அவருடன் ஒரு போலீஸ் அமர்ந்துள்ளதுடன், மாஸ்க் மற்றும் கையுறைகள் போன்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் அவர் பின்பற்றியபடி அவரை கூட்டிச்சென்றனர்.
சேலம் மட்டுமின்றி ஈரோடு, கோவை மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் கூடியதுமன்றி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் ஆவலுடன் வந்து கூடியிருக்கின்றனர்.