மேக்னஸ் கார்ல்சனும், இந்திய வீரர் பிரக்ஞானந்தாவும் மோதிக்கொண்ட செஸ் உலகக் கோப்பை கிளாசிக்கல் போட்டியின் இரண்டாவது ஆட்டமும் டிராவில் முடிவடைந்திருக்கிறது.
மேக்னஸ் கார்ல்சனும் , பிரக்ஞானந்தாவும் மோதிக்கொண்ட கிளாசிக்கல் சுற்றின் முதல் போட்டி நேற்று டிராவானது. 35 மூவ் முடிவில் ரூக் நைட் பான் எண்டிங் நோக்கி போட்டி நகர்ந்ததால், இருவரும் டிரா என ஒப்புக்கொண்டனர்.
அதன்படி, இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. நேற்றைய போட்டியில் பிரக்ஞானந்தா ஒயிட்டிலும், மேக்னஸ் கார்ல்சன் பிளாக்கிலும் விளையாடியதால் , இன்று கார்ல்சன் ஒயிட்டில் விளையாடினார்.
இன்றைய போட்டி ஆரம்பிக்கப்பட்டபோதே, கார்ல்சன் டிராவை மனதில் வைத்து ஆடுகிறாரோ என பலரும் ஆச்சர்யப்பட்டனர். e4,e5 அதன்பின் நைட் ஓப்பனிங் என டிராவை மனதில் வைத்துத்தான் ஆடுகிறார் என பலரும் சமூக வலைதளங்களில் குறிப்பிட்டனர்.
விஸ்வநாதன் ஆனந்தும் இதைக் குறிப்பிட்டார். ஒரு நாள் முழுக்க கார்ல்சன் டை பிரேக்கரில் பார்த்துக்கொள்ளலாம் என்கிற மனநிலையில் இருந்திருக்கிறார். அதே சமயம், அது பிரக்ஞானந்தாவிற்கு விளையாட ஆரம்பித்த பின்னர் தான் தெரிந்திருக்கும் என பதிவிட்டார் ஆனந்த்.
இருவருக்கும் அரை மணி நேரம் முடிவதற்குள்ளாகவே எண்டு கேமிற்கு போட்டியை நகர்த்திவிட்டார்.
பான் & பிஷப் எண்டிங் என போட்டி நகர, இருவரும் டிரா செய்வதென முடிவெடுத்தனர். செஸ் உலகக் கோப்பையின் வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்யும் டை பிரேக்கர் முறையிலான போட்டி, நாளை நடைபெறும்.
கிளாசிக்கல் போட்டிகளில் விளையாட ஆர்வமில்லை என முன்னரே கார்ல்சன் பேட்டியளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி முடிந்ததும், " நேற்றை விட நான் இன்று சிறப்பாகவே இருக்கிறேன். அதே சமயம், என்னுடைய முழு பலத்தில் இன்று என்னால் விளையாட முடியாது என தோன்றியது. அதனால் இன்னும் ஒரு நாள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தேன். நாளை முழு பலத்துடன் விளையாட முடியும் என நம்புகிறேன்" என பேட்டியளித்திருக்கிறார் கார்ல்சன்.
டை பிரேக்கர் போட்டிகள் ரேபிட் செஸ் முறைப்படி நடக்கும். அதன்படி இரண்டு போட்டிகள் நடைபெறும். முதல் போட்டியில் பிரக்ஞானந்தா ஒயிட்டிலும், அடுத்த போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் ஒயிட்டிலும் விளையாடுவார்கள். ஒவ்வொருவரும் 25 நிமிடங்கள் அளிக்கப்படும். ஒவ்வொரு மூவ்க்கும் கூடுதலாக 10 நொடிகள் வழங்கப்படும்.
இந்தப் போட்டிகளும் டிரா எனில், அடுத்த சுற்று போட்டிகள் மீண்டும் ரேபிட் செஸ் முறைப்படி நடக்கும். இந்த முறை இன்னும் நேரம் குறைக்கப்பட்டு போட்டிகள் நடக்கும். மீண்டும் இரண்டு போட்டிகள் என்றாலும், ஒவ்வொருவருக்கும் பத்து நிமிடங்கள் மட்டுமே அளிக்கப்படும். ஒவ்வொரு மூவ்க்கும் கூடுதலாக 10 நொடிகள் வழங்கப்படும்.
இந்தப் போட்டிகளும் டிரா எனில், அடுத்த சுற்று போட்டிகள் ப்ளிட்ஸ் (Blitz) முறையில் நடைபெறும். இந்த முறை இன்னும் நேரம் குறைக்கப்பட்டு போட்டிகள் நடக்கும். மீண்டும் இரண்டு போட்டிகள் என்றாலும், ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே அளிக்கப்படும். ஒவ்வொரு மூவ்க்கும் கூடுதலாக 3 நொடிகள் வழங்கப்படும்.
அப்படியும் முடிவு இல்லையெனில், ப்ளிட்ஸ் முறையில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு போட்டி நடைபெறும். ஒவ்வொரு மூவ்க்கும் கூடுதலாக இரண்டு நொடிகள் வழங்கப்படும். அதில் வெல்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.