ரஷ்யாவின் மசக்சலாவில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின்போது காஸ்பிக் நகரைச் சேர்ந்த வீராங்கனையான உமைகனாத் ஒஸ்மானோவா திடீரென நோய்வாய்ப்பட்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், முழுமையாக குணமடைந்த ஒஸ்மானோவா, போட்டியைத் தொடர்ந்து இறுதியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து பரிசு வென்றார். என்றாலும், ஒஸ்மானோவா திடீரென நோய்வாய்ப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
அதில், மசக்சலாவைச் சேர்ந்த வீராங்கனை அமினா அபகரோவா, ஒஸ்மானோவாவுக்கு விஷம் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட அந்த வீடியோவில், செஸ் வீராங்கனை அமினா, போட்டி நடைபெறும் இடத்திற்குள் நுழைகிறார். போட்டி தொடங்கும்முன் அமினா தனது எதிராளியின் மேசை அருகே சென்று செஸ் போர்டில் பாதரசத்தை தெளிப்பது பதிவாகியுள்ளது. இதையடுத்து, அமினாவுக்கு வாழ்நாள் முழுவதும் விளையாட தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இந்த விவகாரம் குறித்து அமினா அபகரோவா, “ஒஸ்மானோவா மீதான தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து வெளியேற்ற விரும்பினேன். அவரை, துன்புறுத்த வேண்டும் என நினைக்கவில்லை. பயமுறுத்துவதே தனது நோக்கம்” எனக் கூறி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அந்நாட்டு விளையாட்டு அமைச்சர், “பலரைப் போலவே நானும் என்ன நடந்தது என்பதில் குழப்பம் அடைந்துள்ளேன். அமினா போன்ற அனுபவம் வாய்ந்த போட்டியாளரின் நோக்கங்கள் புரிந்துகொள்ள முடியாதவை. அவர் நிச்சயம் இதற்கு பதிலளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் சதுரங்க உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, ரஷ்ய செஸ் சம்மேளனத்தின் தலைவர் ஆண்ட்ரே ஃபிலடோவ், “விசாரணை நிலுவையில் உள்ளது. ரஷ்ய செஸ் போட்டிகளில் இருந்து அபகரோவா தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என உறுதிப்படுத்தியுள்ளார். என்றாலும் விசாரணைக்குப் பிறகு அவருக்கு வாழ்நாள் தடைவிதிக்கப்படலாம் எனவும், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
கடந்த வாரம் ஜூலையில் நடந்த செஸ் போட்டியில் ஒஸ்மானோவா அபகரோவாவை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் அபகரோவா தோல்வியுற்றதால், ஒஸ்மானோவாவிடம் கைகுலுக்காமல் சென்றுள்ளார். தவிர, கடந்த காலங்களில் அபகரோவா செஸ் விதிகளையும் மீறியிருந்ததாகவும், போட்டி ஒன்றுக்கு செல்போனைக் கொண்டு வந்ததாகவும் தற்போது நடைபெற்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க: “அவர் மீதும் தவறு இருக்கிறது”- வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் குறித்து சாய்னா நேவால்