செஸ் முகநூல்
செஸ்

செஸ் ஒலிம்பியாட் தொடர்: வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு குவியும் பாராட்டுகள்!

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இரண்டு பிரிவுகளிலும் தங்கம் வென்று இந்திய அணியினர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

PT WEB

ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டில் நடைபெற்று வரும் 45ஆவது செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில், 193 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற நிலையில், இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளது.

ஆடவர் அணி:

11ஆவது சுற்றில் ஸ்லோவேனியா அணி வீரர்களை, ஸ்ரீநாத் நாராயணன் தலைமையிலான குகேஷ், பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணியினர் வீழ்த்தி உள்ளனர். இந்த அணியில் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, பென்டாலா ஹரிகிருஷ்ணா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்லோவேனியா வீரர் விளாடிமிர் ஃபெடோசீவை தோற்கடித்து இந்திய இளம் வீரர் குகேஷ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, ஜான் சுபேல்ஜை வீழ்த்தி அர்ஜுன் எரிகைசி பெற்ற வெற்றியின்மூலம், இந்திய அணியினர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

மகளிர் பிரிவு

இதேபோல் மகளிர் பிரிவில் நடைபெற்ற கடைசி சுற்றுப் போட்டியில், அஜர்பைஜான் அணியை வீழ்த்தி இந்திய அணியினர் தங்கப் பதக்கம் வென்றனர். இந்திய வீராங்கனைகள் திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், ஹரிகா ஆகியோர் தங்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றிக்கனியை உரித்தாக்கினர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில் இந்திய அணியினர், இரண்டு பிரிவுகளிலும் தங்கம் வென்றுள்ளது இதுவே முதன்முறையாகும். இதற்கு, பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி

இது குறித்து எக்ஸ் வலைத்தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் தங்கம் வென்றது இந்தியாவிற்கு வரலாற்று வெற்றி! செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுளது. நம்ப முடியாத அளவிற்கு சாதனை படைத்துள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சதுரங்க அணிகளுக்கு வாழ்த்துக்கள். இந்த குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் விளையாட்டுப் பாதையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் உருவாக்கியுள்ளது. இந்த வெற்றியானது, செஸ் ஆர்வலர்களின் தலைமுறைகளை விளையாட்டில் சிறந்து விளங்க ஊக்குவிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இந்திய வீரர், வீராங்கனைகளின் குறிப்பிடத்தக்க திறமை, சிறந்த உத்திகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை பலனளித்துள்ளது. இந்த பொன்னான வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.

இந்தியாவின் மகள்கள் என்ன சாதிக்க முடியும் என்ற கேள்விக்கு மகளிர் அணியினர் சிறந்த உதாரணம். இந்தியாவிற்கு ஒரு உண்மையான வரலாற்று நாள் இது” என கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின்

“செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள். செஸ் சாம்பியன்களின் அயராத அர்ப்பணிப்பு, எல்லைகளைத் தாண்டி, உலக அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்ததைக் காண்பது மனதிற்கு இதமாக இருக்கிறது” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளர்