குகேஷ் செஸ்விளையாட்டு வீரர் WebTeam
செஸ்

“இந்திய அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது” - கிராண்ட் மாஸ்டர் குகேஷ்

“இந்திய அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்ததுதான் இந்த தங்கப் பதக்கம்” என கிராண்ட் மாஸ்டர் குகேஷ் தெரிவித்தார்.

webteam

செய்தியாளர்: விக்னேஷ்முத்து

ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பொதுப்பிரிவு மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணிகள் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வெல்ல சென்னையைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் முக்கிய பங்கு வகித்தார்.

india team in chess olympiad

இந்நிலையில், ஹங்கேரி நாட்டிலிருந்து இன்று தாயகம் திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ்க்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசிய போது....

“நடப்பு உலக சாம்பியன் சீனாவைச் சேர்ந்த டிங் லைரின் என்னோடு விளையாடுவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால், அவர் வரவில்லை. என்றாலும் மாற்று வீரருக்கும் தயாராக இருந்தேன். என்னை முதல் போர்டில் விளையாட வைத்தது கேப்டன் ஸ்ரீநாத்தின் வியூகம். அதனால்தான் தொடர்ந்து நானும், எரிகேசியும் வெற்றி பெற முடிந்தது. சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் கடைசி சுற்று போட்டிகளில் கோட்டை விட்டோம். அதை உணர்ந்து இம்முறை அமெரிக்காவுடன் வெற்றியை நோக்கி விளையாடினோம். அதனால்தான் அமெரிக்காவை வீழ்த்த முடிந்தது.

இந்திய செஸ் அணி

ஆண்கள், பெண்கள் என இரண்டு அணிகளும் தங்கப்பதக்கம் வென்றுள்ளது சிறப்பான தருணம். ஒலிம்பியாட் போட்டிகளில் அதிக முறை தோல்விகளை சந்தித்திருக்கிறோம். சென்னையில் நடந்த போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளோம். தொடர் பயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இந்த தங்கப் பதக்கம். இந்திய அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்ததுதான் இந்த தங்கப் பதக்கம்” என்று தெரிவித்தார்.