Pragnananda's father  pt desk
செஸ்

“இதுவே மிகப்பெரிய விஷயம்; வெற்றி தோல்வி பார்க்கக்கூடாது!” - பிரக்ஞானந்தாவின் தந்தை நெகிழ்ச்சி!

“இது தோல்வி அல்ல, வெற்றி தான்... நானும் ஒரு செஸ் பிளேயர்தான். பிரக்ஞானந்தாவின் வெற்றி எனக்கு உத்வேகம் அளிக்கிறது” - பிரக்ஞானந்தாவின் சகோதரி.

webteam

அஜர்பைஜானின் பாகு நகரில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தாவை முதல்நிலை வீரர் மேக்னஸ் கார்ல்சன் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

முன்னதாக இறுதிப் போட்டியில் முதல் 2 சுற்று போட்டிகளும் சமனில் முடிந்த நிலையில், டைபிரேக்கர் சுற்று நடைபெற்றது. இந்த சுற்றில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி நம்பர் ஒன் வீரரான நார்வே நாட்டின் கார்ல்சன் மகுடம் சூடினார்.

Pragnananda

இதன்மூலம் உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா போராடி தோல்வியடைந்தார். உலக அளவில் 2 மற்றும் 3 ஆம் நிலை வீரர்களை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த பிரக்ஞானந்தா, முதல்நிலை வீரரான கார்ல்சனிடம் தோல்வியடைந்திருந்தார். நாக் அவுட் உலகக் கோப்பை செஸ் போட்டியில் கார்ல்சன் கோப்பையை பெறுவது இதுவே முதல் முறை. டைபிரேக்கர் போட்டியின் 2 சுற்றுகளிலும் வென்று கார்ல்சன் சாம்பியன் ஆனார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு கூறுகையில், “இன்று போராடி தோல்வி அடைந்திருக்கிறார் பிரக்ஞானந்தா. அடுத்தமுறை பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் நாங்கள் உத்வேகம் கொடுத்து வருகிறோம். இதுவரை வந்ததே மிகப்பெரிய விஷயம்தான். இதில் வெற்றி தோல்வியை பார்க்கக்கூடாது. நல்ல கேம் கிடைக்கிறது. இதை எப்படி இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்றுதான் பார்க்க வேண்டும்.

எதையும் அவர் (பிரக்ஞானந்தா) மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார். தற்போது அவர் வீட்டுக்கு வரவில்லை. அடுத்த போட்டியை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறார். இதை பெரிய அளவிற்கும் எடுத்துக் கொள்ளமாட்டார்” என்றார்.

Praggnanandhaa vs Magnus Carlsen

அவரது சகோதரி வைஷாலி கூறுகையில், “இந்தளவுக்கு பிரக்ஞானந்தா வந்தது, மிகவும் பெருமையாக உள்ளது. இது தோல்வி அல்ல, வெற்றி தான்... நானும் ஒரு செஸ் பிளேயர்தான். பிரக்ஞானந்தாவின் வெற்றி எனக்கு உத்வேகம் அளிக்கிறது” என்றார்.