சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே இன்று 2வது தகுதிச்சுற்று போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்பதால், இன்றையப் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை அணியின் பேட்டிங்கை பொருத்தவரை தோனி மட்டுமே தொடர்ச்சியாக பெரும்பாலான போட்டிகளில் அடித்து விளையாடுகிறார். மற்றவர்கள் ஒரு போட்டியில் அடித்தால் மற்றொரு போட்டியில் அடிப்பதில்லை. சிலர் தொடர்ச்சியாக சரியாக ஆடுவதில்லை. அதனால், சென்னை வசம் பலமான பேட்டிங் வரிசை இல்லை என்பதே நிதர்சனமாக உண்மை. பந்துவீச்சையே பெரும்பாலும் சிஎஸ்கே நம்பியுள்ளது.
சிஎஸ்கேவுக்கு பலமாக இருப்பதே அதன் சுழற்பந்துவீச்சாளர்கள். இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், ஜடேஜா ஆகிய மூன்று பேரும் சென்னை அணியின் தூண்களாக இருக்கின்றனர். இம்ரான் தஹிர் இதுவரை 15 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட் சாய்த்துள்ளார். அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் ரபாடாவுக்கு அடுத்து இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
9 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஹர்பஜன் 14 விக்கெட் எடுத்துள்ளார். ஆல்ரவுண்டராக ஜொலிக்கும் ஜடேஜா 13 விக்கெட்களையும் சாய்த்துள்ளார். ஜடேஜா அதிக ரன்களையும் கொடுக்காமல் கட்டுக் கோப்புடன் பந்துவீசி வருகிறார்.
சென்னை அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் மட்டும் இந்த ஐபிஎல் தொடரில் 55 விக்கெட்கள் சாய்த்துள்ளனர். மற்ற எந்த அணியும் இந்த அளவிற்கு விக்கெட் எடுத்ததில்லை. அதேபோல், சென்னை அணியில் வேகப்பந்துவீச்சாளர் சாஹர் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவர் 17 விக்கெட் எடுத்துள்ளார். சென்னை அணியில் வேகப்பந்துவீச்சுக்கு அவரையே பெரும்பாலும் நம்பியுள்ளது.