விளையாட்டு

பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு!

பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு!

ச. முத்துகிருஷ்ணன்

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுகிறது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்தார்.

ஐபிஎல் 2022 தொடரில் மும்பை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான சென்னை அணி, நடப்பு தொடரில் நடந்த 7 ஆட்டங்களில் 2ல் வெற்றி, 5ல் தோல்வி என்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் பஞ்சாப் அணி 7 ஆட்டங்களில் 3ல் வெற்றி, 4ல் தோல்வி என்று 6 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.

சென்னை அணி அதன் முந்தைய ஆட்டத்தில் பரம எதிரியான மும்பை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் கடைசி 4 பந்துகளில் தோனி 16 ரன்கள் விளாசி, அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். பஞ்சாப்பை ஏற்கனவே முதல் சுற்றில் சந்தித்த சென்னை அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டு இருந்தது. அந்த ஆட்டத்தில் 180 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, சென்னையை 126 ரன்னில் சுருட்டி அசத்தியது.

எனவே இன்றைய ஆட்டத்திலும் அதே நம்பிக்கையுடன் பஞ்சாப் அணியினர் களம் இறங்குவார்கள். அதே நேரத்தில் அந்த தோல்விக்கு பழிதீர்க்கவும் பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கவும் சென்னை அணியினர் தீவிரம் காட்டுவர். இதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மிட்செல் சான்ட்னர், அம்பதி ராயுடு, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), டுவைன் பிரிட்டோரியஸ், டுவைன் பிராவோ, மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி

பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ , லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), பானுகா ராஜபக்சே, ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், சந்தீப் சர்மா, அர்ஷ்தீப் சிங்