விளையாட்டு

"பெருமையாக இருக்கிறது" கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து

jagadeesh

மும்பையில் நடைபெற்ற இளையோருக்கான உலகச் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில், சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா பட்டம் வென்று அசத்தினார். இதனையடுத்து அவருக்கு செஸ் உலகின் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சென்னையை சேர்ந்த 14 வயதான பிரக்ஞானந்தா, 18 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்றார். தொடக்க சுற்று முதலே முன்னிலை பெற்ற அவர், கடைசி மற்றும் 11ஆவது சுற்றில் ஜெர்மனியின் வேலன்டின் உடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்தப் போட்டி டிராவில் முடிந்தது. 11 சுற்றுகளின் முடிவில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, 9 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்றார். இவர் ஏற்கெனவே 8 வயது மற்றும் 10 வயதினருக்கு உட்பட்டோருக்கான இளையோர் செஸ் போட்டிகளிலும், உலகச் சாம்பியன் பட்டம் வென்றவர்.

இதனையடுத்து விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் " வாழ்த்துகள், மிகவும் பெருமையாக இருக்கிறது. நாம் அடுத்த முறை சென்னையில் சந்திக்கும்போது சிறந்த ஆட்டத்தை என்னிடம் நீ காட்டுவாய் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.