ஐபிஎல் போட்டியின் போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செல்போன்கள், பேனர்கள், கொடிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன. இதனால் சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி, திருவனந்தபுரத்திற்கு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் திட்டமிட்டபடி போட்டிகள் சென்னையில் நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் நடபெறும் ஐபிஎல் போட்டியில் செல்போன்கள், பதாகைகள், பேனர்கள் மற்றும் கொடிகளுக்கு கிரிக்கெட் வாரியம் தடைவிதித்துள்ளது. அத்துடன் ஏதாவது பொருட்களை மைதானத்திற்குள் வீசுபவர்கள் காவல்துறையில் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும், கார் சாவிகள், பைனாகுலர், பட்டாசுகள், கேமராக்கள், வாட்டர் பாட்டில்களை கொண்டு செல்லவும் தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படி நடமாடுபவர்கள் பற்றி ரசிகர்கள் தகவல் அளிக்கலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேசியக் கொடியை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் டைரி, லேப்டாப், டேப்-ரிக்கார்டர்ஸ் உள்ளிட்ட பொருட்களை கொண்டுவரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.